அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(17)

ஏப்ரல் 01-15

சிகரம்

பதிகம்பாடி நோயைக் குணப்படுத்த முடியுமா?

பாண்டியனுடைய உடல் வெப்பு நோயின் கொடுமையால் நடுங்கியது. எரிதழல்போல வெம்மை அவன் உடம்பெல்லாம் பரவியது.

சமணர்கள் வெப்பு நோயைப் போக்க முயலுதல்

பாண்டியன் பிணியினால் வருந்துவதைச் சமணர்கள் கேள்வியுற்றுப் பெருமூச்செறிந்து மனமுடைந்து, “நேற்றிரவில் நாம் செய்த செயலினால் வந்த விளைவுதானே இது?’’ என்று ஐயுற்று மானமின்றிப் பாண்டியனிடம் வந்து அணைந்தனர். அப்போது சமணர்கள் ‘நோயின் மூலம் இது’ என்று அறியாமலே தங்கள் தெய்வத்தின் பெயரினைக் கூறும் மந்திரங்களைச் சொல்லி, மயிற்பீலியினால் தடவ, பீலிகள் பிரம்பினோடு தீய்ந்து தீப்பொறிகள் சிதறி வீழ்ந்தன. அப்போது, அவர்கள் வெப்பினது அதிசயத்தினைக் கண்டு வெருண்டனர்; பிறகு குண்டிகைகளிலுள்ள நீரை எடுத்து, “அருகனே! காப்பாயாக; அருகனே! காப்பாயாக’’ என்று பலமுறை ஓதிப் பாண்டியன்மேல் தெளிக்க அந்நீர் எரியும் தீயின்மேல் சொரிந்த நெய்போலப் பற்றி எரிந்தது. பாண்டியன் சமணர்களைப் பார்த்து, “நீங்கள் ஒருவரும் இங்கே இராமல் அகன்று போங்கள்’’ என்று கூறி உணர்வு சோர்ந்து மயக்கமடைந்தான்.

திருஞானசம்பந்தர் திருவருளால்தான் இது நீங்கும். சமணர்கள் செய்யும் மாயத்திறங்களும் இந்நோயினை வளர்ப்பதேயன்றித் தீர்ப்பதில்லை. ஆதலால், அப்பிள்ளையார் விரும்பி நோக்கினால் இந்தத் தீப்பிணியே யன்றிப் பிறவியும் தீரும்‘‘ என்று மந்திரி கூறினார்.

பிள்ளையார் அரசனது வலதுபுறத்து நோயைத் தீர்த்தல்

தென்னவன் நோக்கத்தினைக் கண்ட சீகாழிப் பிள்ளையார், “மன்னனுடைய வலப்பக்கத்து வெப்பு நோயினைத் திருவாரூர் வாயின்கண் எழுந்தருளிய இறைவனது திருநீறே மந்திரமும் மருந்துமாகித் தீர்ப்பதாகும்’’ என்ற கருத்தினை உட்கொண்டு, “மந்திரமாவது நீறு’’ என்று தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தினைப் பாடித் திருவளரும் திருநீற்றினைக் கொண்டு தமது திருக்கையினால் அரசனது உடலின் வலது பக்கத்தில் தடவினார். உடனே பாண்டியனது வலப் பக்கத்திலுள்ள வெப்பு நோய் நீங்கித் தண்ணீர்ப் பொய்கைபோலக் குளிர்ந்தது.

பிள்ளையார் அரசனது இடப்புறத்து
நோயினையும் தீர்த்தல்

பாண்டியன் அதனைக் கண்டு, “இந்த ஒரே காலத்தில் கொடிய நரகத் துன்பம் ஒரு பக்கம் உள்ளது; வீட்டின்பம் மற்றொரு பக்கம் உள்ளது. விஷத்தின் நுகர்ச்சி ஒரு பக்கம் உள்ளது. என் உடல் ஒன்றினிடமாகவே இவ்விருவேறு தன்மைகளின் இயல்பையும் அடையப் பெற்றேன். என்னே அதிசயம்! அமணர்களே! நீங்கள் தோற்றுப் போனீர்கள்; என்னைவிட்டு அகலப் போய்விடுங்கள்’’ என்று கூறினான். பின்னர் செல்கதிக்கணியனாகிய பாண்டியன் பிள்ளையாரை நோக்கி, “என்னை வந்து ஆட்கொண்டருளிய மறைக்குலத்து வள்ளலாரே! இந்த வெப்பு நோய் முழுவதும் நீங்கும்படி எனக்கு அருள்புரிவீராக’’ என்று மனத்தினாலே வணங்கி வேண்டினான். பிள்ளையார் திருமுகப் பொலிவுடனே கருணையினைப் புறத்துக்காட்டித் திருக்கையினால் திருநீற்றினை எடுத்துத் திருப்பதிகம் நிறைவாக்கித் துதித்துப் பின்னரும் பாண்டியன் உடலில் ஒருமுறை தடவ, இடதுபக்கத்து வெப்பு நோய் முழுவதும் நீங்கிற்று.’’ என்கிறது இந்துமதம். நோய்க்குரிய மருந்து கொடுக்காமல், மந்திரம் சொல்லியோ, பக்திப் பாடல் பாடியோ நோயை எப்படிக் குணப்படுத்த முடியும்? அப்படிக் குணப்படுத்திக் காட்ட இன்றைக்கு  ஓர் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தயாரா? அப்படியிருக்க இப்படிப்பட்ட முட்டாள் கருத்துக்களைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

பதிகம் பாடி பாம்பு விஷத்தை நீக்க முடியுமா?

திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங் குடியினின்றும் புறப்பட்டுத் திருமருகல் என்னும் பதியினை அடைந்து மாணிக்க வண்ணருடைய திருவடிகளை வணங்கித் துதித்துப் பேரன்போடு இசை பொருந்திய திருப்பதிகப் பாமாலையைச் சாத்தி அங்கு அமர்ந்தருளினார்.

அந்நாட்களிலே ஒருநாள் ஒரு வணிகன் வழிச் செல்வோனாகி ஒரு கன்னிப் பெண்ணையும் உடனழைத்துக் கொண்டு திருமருகல் திருக்கோயிலுக்குப் புறத்தில் ஒருமடத்தில் வந்து தங்கி இரவில் துயில்கொண்டான். அப்போது, அவனைப் பாம்பொன்று தீண்டிற்று; விடம் விரைந்து தலைக்கு ஏற உயிர் நீங்கும் தன்மை அவ்வணிகனுக்கு உண்டாயிற்று. அதனைக் கண்ட அந்த இளங்கன்னி தளர்ந்து சோர்ந்து அவனைப் பாம்பு தீண்டியபோதும் தான் தீண்டாமல் ஆறுதல் மொழி கூறுவதற்கும் வேறொருவரும் இல்லாதவளாகி அவ்வணிகன் அருகில் சென்று வீழ்ந்து அரற்றினாள்.

ஞானசம்பந்தர் வணிகப் பெண்ணுக்கு அருள் செய்தல்

இவ்வாறு அப்பெண் சிவபெருமான் அருளினையே சிந்தித்த வண்ணமாய்த் துதித்து அழுகின்ற ஓசை, அதுகாலை மருகற்பெருமானைக் கும்பிடும்பொருட்டு எழுந்தருளி வந்த திருஞானசம்பந்தரது மெய்த்தன்மை விளங்கும் திருச்செவியில் வீழ்ந்தது. அவர் திருவுள்ளத்திலே கருணையினை மிகக்கொண்டு அப்பெண் இருக்குமிடத்திலே அடியவர்களுடன் எழுந்தருளி வந்தார்; சிவபெருமானின் திருவருளை நினைந்து போற்றி அழுகின்ற அப்பெண்ணைப் பார்த்து, “நீ சிறிதும் பயப்பட வேண்டாம்! உனது துன்பத்தினையும் உங்கள் வரலாற்றினையும் சொல்’’ என்று அருளிச் செய்தார்.

அவ்வணிகப் பெண் தாமரைமலர் போன்ற கைகளை உச்சியின்மேலே குவித்துக் கண்களினின்றும் கண்ணீர் அருவிபோல் சொரிந்து வழியச் சீகாழிப் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்துநின்று, “வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த வைப்பூர் என்பது எனது ஊராகும்; அவ்வூருக்குத் தலைவனாகிய தாமன் என்பவன் எனது தகப்பன்; இவன் என் தகப்பனுக்கு மருமகன்; எந்தைக்குப் பெண்மக்கள் ஏழுபேர்; அவர்களில் மூத்தவளை இவனுக்கு மணம் செய்துகொடுப்பதாக என் தகப்பன் முடிவு செய்தான். ஆனால், அங்ஙனம் செய்யாது நிறையப் பொருளைப் பெற்றுக்கொண்டு வேறொருவனுக்கு மணஞ் செய்து கொடுத்தான்; அவ்வாறே ஒவ்வொருவராக என்னை ஒழிய மற்றைப் பெண்களையெல்லாம் பொருளினைப் பெற்றுக்கொண்டு பிறருக்கே மணஞ் செய்து கொடுத்துவிட்டான். அதனால், மனம் தளர்ந்து வருந்தி நின்ற இவன் பொருட்டு அன்பு பூண்டு அங்குத் தாய்தந்தையரை விட்டு மறைந்து நீங்கி இவனையே சார்ந்து வந்தேன்; இவனும் பாம்பினால் தீண்டப்பட்டு இறந்தான்; அடியேன் நடுக்கடலில் கப்பல் கவிழப்பெற்றார் போல நிற்கின்றேன்; தேவரீர் எனது சுற்றத்தார் போல இங்கு வந்து தோன்றி என்பால் உற்ற துயரங்களெல்லாம் நீங்கும்படி அருள் செய்தீர்’’ என்று புகன்றாள்.

திருஞானசம்பந்தர் விடந் தீர்த்தல்

அப் பெண் கூறியவற்றைக் கேட்ட காழிவேந்தர் அவளுக்கு அருளும்பொருட்டுத் திருமருகற் பெருமானை நோக்கி விஷம் நீங்கும்படி, “சடையினையுடையவனே, எல்லா உயிர்களுக்கும் தாயாக விளங்குபவனே! சங்கரனே! சந்திரனைத் தாங்கும் திருமுடியுடையவனே! விடையவனே! வேதியனே! வெண்ணீறு அணிந்தவனே! திரிபுரங்களை எரியும்படி செய்தவனே! நான்முகனாலும் திருமாலாலும் துதிக்கப்படுபவனே! உடையவனே! இவள் இவ்வாறு உள்மெலிதலாகிய துன்பம் உமக்குத் தகுதியாமோ?’’ என்று துதித்து, “சடையாய் எனுமால்’’ என்றுத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

உடனே வணிகன் விடந்தீர்ந்து எழுந்து நின்றான். பிள்ளையாரைச் சூழ்ந்துநின்ற திருத்தொண்டர்கள், “ஹரஹர’’ என்று ஆரவாரம் செய்தனர். அக்கன்னியும் வணிகனும் உச்சி மேற் கைகளைக் கூப்பிக்கொண்டு சீகாழிப் பிள்ளையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். பிள்ளையார் அப்பெண்ணை அவள் விரும்பிய அவ்வணிகனோடும் இவ்வுலகில் இன்புடன் வாழும்படியாக மணம் புணரும் பெருவாழ்வு வகுத்துவைத்து அவ்விருவர்க்கும் விடை கொடுத்தருளி அங்கு எழுந்தருளியிருந்தனர். பாம்பின் விஷம் இரத்தத்துடன் கலந்தால் அதை முறிவு மருந்துகள் மூலமே நீக்க முடியும். இதுவே அறிவியல். அதுவே நடைமுறை உண்மை. அப்படியிருக்க பதிகம் பாடி பாம்பு விஷத்தை இறக்கினார் என்பது அறிவியலுக்கு எதிரான செய்தியல்லவா? இப்படி அறிவியலுக்கு முரணான செய்திகளைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

(சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *