பண்பாளன்
ஒடிசாவில் உள்ள ராய்ங்பூர் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் ஜமுனா. அவருடைய தந்தை விவசாயி. அவர் வசித்த பகுதி பச்சைப் பசேலென்று காடுகள் சூழ்ந்திருந்தன. அவரின் திருமண வாழ்வு வரை அந்த பசுமை நிறைந்த காட்டில்தான் மகிழ்ச்சியாய் திரிந்து விளையாடி மகிழ்ந்தார்.
1998இல் ஜமுனாவுக்கு 18 வயதானபோது அவருக்கு மான்சிங் டுடு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான அன்றே கணவரின் ஊரான மதுர்காமுக்கு கனவுகளுடன் கணவரோடு இடம் பெயர்ந்தார். புகுந்த வீட்டில் நுழைந்து வீட்டுக்குப் பின்பக்கம் சென்ற ஜமுனா அதிர்ச்சியில் உறைந்து போனார். வீட்டுக்குப் பின்பக்கம் பரவிப் படர்ந்திருந்த காட்டில் மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு வெட்டவெளியாய்க் காட்சியளித்தன. அந்தக் காட்சி ஜமுனாவை பெருந்துயரில் ஆழ்த்தியது. கணவரின் சகோதரியிடம் கேட்டபோது, மதுர்காம் காட்டின் தேக்கு மரமும், சால் மரமும் மிகவும் பிரசித்திப் பெற்றவை என்பதால், அப்பகுதியைச் சார்ந்த மர வியாபாரி ஒருவர் ஊர் மக்களை மிரட்டி அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டியெடுத்து கடத்திச் செல்வது அவருக்குத் தெரியவந்தது.
ஜமுனா ஏதாவது செய்து அந்தக் காட்டுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அந்தக் கிராமத்து ஆதிவாசிப் பெண்களை ஒன்றுதிரட்டிக் காட்டைப் பாதுகாக்க ‘வன சுரக்ஷா சமிதி’ எனும் குழுவை அமைத்தார். அந்தப் பெண்களில் பெரும்பாலோர் படிப்பறிவு அற்றவர்கள்.
ஆரம்பித்த ஓர் ஆண்டுக்குள் ஜமுனாவின் இயக்கம் வலுப்பட்டுவிட்டது. அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் கம்பு, கத்தி, வில் போன்றவற்றுடன் காட்டுக்குள் சென்று அங்கு முறையற்று மரம் வெட்டுபவர்களைப் பயமுறுத்தி விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டனர். இது மரக்கடத்தலில் ஈடுபட்ட அந்த மாஃபியா கும்பலுக்கும் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் பெரும் தலைவலியைக் கொடுத்தது. பின்னர் வன பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் அந்த சமூக விரோத கும்பல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றுத் தந்தார். தண்டனை பெற்றுத் திரும்பியவர்கள் ஜமுனாவின் வீட்டை சூறையாடினர். ஒருசமயம் கணவரோடு வெளியே சென்றபோது கல்லெறித் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால், தனக்கு நேர்ந்த ஆபத்து அவருக்குத் துளியும் பயத்தைத் தரவில்லை. மாறாக அவருடைய செயல்களின் வீரியத்தை அது இன்னும் பெருக்கியது. தன் இயக்கத்தைத் தீவிரமாகவும் விரைவாகவும் அருகிலுள்ள கிராமங்களில் விரிவுபடுத்தினார்.
இன்று அவரது இயக்கத்தில் 300 கிராமங்களைச் சேர்ந்த 10,000 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சுமார் 50 ஹெக்டேர் வனப் பரப்பைப் பாதுகாக்கின்றனர். பாதுகாப்போடு தங்கள் பணிகளைச் சுருக்கிக் கொள்ளாமல், மரக் கன்றுகளை நட்டு வனத்துக்கு மறுவாழ்வு அளிக்கின்றனர்.
வனப் பாதுகாப்புக்காக ‘வன சுரக்ஷா சமிதி’ என்-னும் இயக்கம் தொடங்கி மிகத் துணிச்சலாய் பணியாற்றி வரும் ‘ஜமுனா டுடு’க்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘இந்தியாவை உருமாற்றும் பெண்கள்’ என்று நிதி ஆயோக் தேர்ந்தெடுத்த பன்னிரெண்டு பெண்களில் ஜமுனாவையும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி பாராட்டி பெருமைப்படுத்தியிருக்கிறது.
வீட்டில் நடக்கும் அநீதிகளையே தட்டிக் கேட்காமல் தன்மையாய் வாழும் மகளிர் மத்தியில் காட்டை அழிக்கும் சமூக விரோதிகளுக்கு எதிராய் போராடி நாட்டைக் காக்கும் ஜமுனாவை மனதார வாழ்த்துவோம்! அவரின் புரட்சிப் பணிகளுக்குத் துணை நிற்போம்!