சினிமா கவர்ச்சி – கானல் நீர் வேட்டையே!

மார்ச் 01-15

தமிழ்நாட்டு அரசியலில் எதோ பெரிய வெற்றிடம் வந்துள்ளதாகவும், அதனை நிரப்ப ‘ஆபத்பாந்தவர்களாகவும்’ ஊழலை ஒழிக்க “உத்தம அவதாரங்களாகவும்’’ திடீரென்று, _ ஏற்கனவே பல ஆண்டுகளாக தேக்கி வைத்துள்ள ஆசைகள் என்ற கற்பனைக் குதிரைகள் மீது சவாரி செய்ய இரண்டு சினிமா நடிகர்கள் புதிய அரசியல் கட்சிகளைத் துவக்கி ‘தமிழ்நாட்டைக் காப்பாற்றும் ‘திருப்பணியில்’ தங்களை _ புகழ் வேண்டாது, பெருமை வேண்டாது ‘மக்கள் நலன்’ ஒன்றையே பிரதானமாக்கி இப்பெரும் பணிக்கு  வருவதாக _ வந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மீடியாக்கள் _ பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளான ஊடகங்கள் தங்களுக்கு ‘டி.ஆர்.பி. ரேட்டிங்’ என்ற பார்வையாளர்கள் தொகையை ஏற்றி மேலே செல்லும் ஒரு போட்டியில், இந்த வியாதியை ‘நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்’ டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களைப்போல் ஊதி ஊதி அளவற்ற விளம்பர வெளிச்சத்தை _ விளைவறியாத _ தீயை வைத்து விளையாடும் குழந்தைத்தனமாக _ பெரிய விளம்பரங்களைத் தங்கள் நலன் கருதியும், அவர்கள் விருப்பத்திற்கேற்பவும் அட்டகாசமாகச் செய்து ஜனநாயகத்தை அசல் கேலிக்கூத்தாக்கி வருவது  வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாகும்.

தமிழ்நாட்டில் முன்பிருந்த ஆட்சி, கட்சித் தலைமைகள் இப்போது இல்லை என்பதே வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாகக் கிளப்பி, அந்த இடத்தை நிரப்பிட வானத்து நட்சத்திரங்களை, வையத்து வீட்டு விளக்குகளாக மாற்றிடும் _ ‘ரசவாதம் செய்து வெற்றிக் கனவு காணுவது யதார்த்தத்தில் எளிதாக நடைபெறக் கூடியதா?

தி.மு.க. என்ற எதிர்க்கட்சிக்குள்ள நியாயமான ஜனநாயக உரிமையையோ, அல்லது மூன்று பிரிவுகளாக உள்ள அ.தி.மு.க. என்ற தற்போதைய ஆளுங்கட்சியையோ அவ்வளவு விரைவில் புறந்தள்ளிவிட முடியுமா? அதுவும் கூட்டணித் தத்துவம் செயல்படும் இக்கால கட்டத்தில் என்பது முக்கியக் கேள்வி.

சொந்தக்கால் இல்லாது வெறும் ‘மிஸ்டு காலில்’ வளர்ந்துள்ள, நோட்டாவிற்கும் குறைவாக வாக்கு வாங்கியுள்ள ஒரு தேசியக் கட்சியின் திட்டம் என்ன தெரியுமா? இங்குள்ள கட்சிகளில் எவற்றின் தோள் மீதாவது ஏறி சவாரி செய்யத் துடிக்கிறது, அல்லது புதிதாக கருவிலிருந்து பிறகு பிறக்கும் ஒரு சினிமா நடிகரின் ரசிகர்களை நம்பி, பெரியார்தம் புரட்சி மண்ணை காவி மண்ணாக்க விரும்பும் அதன் கனவு, சிதைந்து போகுமே தவிர, ‘மயிரைச் சுட்டு கரியாக்க’ முயல்வதுபோல், இது ஒருபோதும் நிறைவேறாது என்பது உறுதி!

சினிமா நடிகர்கள், கலைஞர்கள் ஏதோ அரசியலைத் தமது ‘ரசிகர் மற்றும் வேடிக்கை பார்க்கும் விடலைகளையே வைத்து நாடாளும் முதல்வர் நாற்காலியை எளிதில் குத்தகைக்கு எடுத்துவிடலாம் என்ற வேடிக்கை கலந்த விபரீத ஆசை ஒருபோதும் நிறைவேறாது!

கொள்கைகள் _ லட்சியங்கள் _ தியாகங்கள் _ மக்கள் பிரச்சனைகளை சரியாகப் புரிதல் என்பவை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சினிமா _ திரைக்கவர்ச்சியையே முழு மூலதனம் என்று வைத்து இந்த ‘அரசியல் பரமபத’ விளையாட்டில் ஈடுபடுவது அவர்களுக்கும் அவர்களை உயர்த்திப் பிடிக்கும் மீடியாக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தைத்தான் தரும்; மாற்றம் வராது; ஏமாற்றமே வரும்!

மோடியே 2014இல் மாற்றம், மாற்றம் என்று கூவியே அதை நம்பிய 18 வயது வாக்காளர்களும்,  ஆண்ட கட்சி எதிர்ப்பாளர்களும் வாக்களித்து இன்று தலையில் கை வைத்துக் கொண்டு ஒப்பாரி _ ஓலமிட்டுக் கிடக்கும் அவல நிலைதானே மிச்சம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற நடிக, நடிகையர் வெற்றி வெறும் கலைத்துறை கவர்ச்சியால் விளைந்தவை அல்ல; ‘திராவிட இயக்கம்’ முத்திரை மூலதனத்தால் கிட்டியதாகும்!
தேசியம் பேசிய சிவாஜிகணேசன் முதல் இன்றைய விஜயகாந்த் வரை தனித்து ஆட்சியைப் பெற அல்ல; கட்டிய பணத்தைக் கூட வாங்க முடியாத நிலைதானே மிஞ்சியது தமிழ்நாட்டில்!

திராவிட மயில்களைக் கண்டு “கவர்ச்சி வான்கோழிகள்” ஆடலாம்; ஆனால், ஆள முடியாது.

அரசியல் என்பது முள்படுக்கை; அது ரோஜாக்கள் பரப்பப்பட்ட மலர்ப்பாதை அல்ல என்பதை தேர்தல் களத்தில் நின்று அனுபவப் படபட உணருவார்கள்!

ஏமாறும் நிலையில் தமிழ்நாடு இல்லை, வரப்படுத்திப் பேசிய வசனங்களே, பதவியில் அமர வைக்கும் ‘வரங்களாகவோ’ _ வழிமுறை களாகவோ மாறி வாகை மலரைப் பறிக்க ஒருபோதும் உதவிடாது!

என்றாலும் இந்த எண்ணம் _ ஆசை வந்ததே அவர்களின் உள்மனத்தினைக் காட்டும் காலக்கண்ணாடி. அதற்கு நம் நன்றி!

– கி.விரமணி,
ஆசிரியர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *