பல ஜாதி, பல தெய்வ வணக்கம், பற்பல வகையான மூடநம்பிக்கைகள், தெய்வத்தின் பெயர் கூறி தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு – இது ஆரியம்.
நாட்டிலே நல்ல நல்ல தேவாலயங்கள் இருக்க, தாங்க முடியாத தரித்திரம் தலைவிரித்து ஆடுவதேன்? பாரதமும் பகவத்கீதையும் இருக்க, பக்தர்கள் அல்லலுறுவானேன்? கேட்கிறோம் நாம்! கேட்கக் கூடாதா?
வைதிகம் என்னும் நோய்க்கு டாக்டர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது. அந்த நோயை வாலிபப் பருவத்திலுள்ள மாணவர்களால்தான் குணப்படுத்த முடியும்.
நாம் அறிவுத் துறையில் முன்னேற்றமடைந்தால்தான் நம்மிடம் உள்ள பழைய கருத்துகள் அகலும்; பாசி பிடித்துப் போன கண்மூடிப் பழக்கங்களும் தொலையும்; மற்ற மூடநம்பிக்கைகள் முறியடிக்கப்படும்.
கடவுள் வடிவங்கள்மீது ஊற்றப்படும் பாலை, அவ்வடிவங்களாவது ஏற்றுக் கொள்கின்றனவா என்று பார்த்தால் அதுவும் இல்லையே! கடைசியாக அந்தப் பால் முழுதும் சாக்கடை வழியாக வெளிப்பட்டுத் துர்நாற்றத்தைத் தருவதுமன்றி, அத்துர்நாற்றம் பல துஷ்டக் கிருமிகள் உற்பத்தியாவதற்கும், அக்கிருமிகளால் பலவிதமான தொற்றுநோய்கள் உண்டாகி மக்களின் உயிரை மாய்ப்பதற்குமே காரணமாகின்றது.
புராணங்கள்தான் மாணவர்களுக்குப் பாடங்களாக்கப்படும் என்றால், இதற்குப் பள்ளிக்கூடங்கள் ஏன்? பஜனைக்கூடங்களே போதுமே!
எல்லாப் புத்தகங்களையும்விடச் சிறந்த புத்தகம் இந்தப் பரந்த உலகம்தான். உலகத்தைவிட உன்னதமான புத்தகம் வேறு கிடையாது.
பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு செய்துவிட்ட பிறகு மனிதனிடம் வாதிடுவது செத்துப் போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
மானம் பெரியது; உயிரல்ல. மக்கள் பெரியவர்; மதமல்ல. விடுதலை வேண்டும்; எவருக்கும் நாம் அடிமையல்ல. நமக்கு யாரும் அடிமையாக இருக்க வேண்டா. இதுவே நமக்குக் கீதை.
மனிதனுக்கு ஏற்படக்கூடிய எத்தனையோ நோய்களுக்கு மருந்துண்டு; ஆனால் உடைந்த உள்ளத்திற்கு மருந்து கிடையாது!
வீட்டிற்கோர் புத்தக சாலை என்ற இலட்சியம், நாட்டிற்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.
ஒரு பலமான தாக்குதலை நடத்தினால் – ஒரு தன்னலமற்ற முயற்சியைச் செய்தால், மக்கள் வாழ்வில் நஞ்சைக் கலக்கும் விதி எனும் அடிமைத் தளையை நம் நாட்களிலேயே வீழ்த்த முடியும். செய்வோமா? நீங்கள் தயார்தானா?
பகுத்தறிவு வாதம் என்பது அடிப்படை உண்மைகளை – நெறிகளை மறப்பது என்பதல்ல. போலித்தனமான எண்ணங்களையும் செயல்களையும் அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவுவாதம்.
நீரிலே நெருப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள், நீரோட்டத்தை இன்று மனித வாட்டத்தைக் குறைக்கும் சாதனமாக்கியுள்ளனர். மந்திரத்தின் துணை கொண்டல்ல; மதியின் துணை கொண்டு.
கட்டிடத்திற்குச் செங்கல்போல, வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் படிப்பு தேவை; திறமை தேவை; தேர்ச்சி தேவை.
இல்லாதது, நடவாதது, நம்பமுடியாதது அறிவுக்கு முரணானது, அநாகரிகத்துக்கு இடமாவது ஆகிய கருத்துகள் அடங்கிய கதைகளைப் புனித ஏடுகள் என்று போற்றுவது முறையா?
விஞ்ஞானத்தைத் துணைக்கழைத்து மழையைப் பொழியச் செய்து காட்டியவர் மகான்களல்லர்; மகாசாமான்யர்கள். அருள்பெற்றவர்களல்லர்; அறிஞர்கள். முட்டையிலிருந்து குஞ்சு, அடை காத்திடாமல் விஞ்ஞான முறையினாலேயே வெளியே கொண்டுவரப்படுகிறது.