நூல்: பவுத்தம்: ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம்.
ஆசிரியர்: எழில்.இளங்கோவன்
வெளியீடு: வானவில் புத்தகாலயம், 10/2 (8/2) போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி: 24342771, 65279654. கைபேசி: 72000 73082
மின்னஞ்சல்: vanavilputhakalayam@gmail.com
பக்கங்கள்: 144, விலை: ரூ.110/_
இந்தியாவின் வரலாறு என்பது ஆரிய_திராவிடப் போரின் வரலாறு என்பது டாக்டர் அம்பேத்கர் போன்ற அறிஞர்களின் கருத்தாகும். அவ்வாறு ஆரியத்தை எதிர்த்த முதல் தத்துவம் பவுத்தமாகும். பவுத்தத்தை ஆய்வு செய்து எளிய நடையில் எழுதப்பட்டதே இந்நூலாகும்.
புத்தர் அரச மரபைச் சார்ந்தவர். அரண்மனையிலேயே வாழ்ந்தார். 29 வரை அவருக்கு மரணம், நோய், முதுமை போன்ற எதுவும் தெரியாது. இவற்றை எல்லாம் தெரிந்துகொண்டு உடனே துறவு பூண்டார் என்று நமக்குக் கூறப்பட்ட கட்டுக்கதைகளை மறுத்து எழுதும் நூலாசிரியர் ரோகினி, ஆற்றுச் சிக்கலில் இரண்டு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே புத்தரின் துறவுக்குக்க் காரணம் என்பதை விளக்குகிறார்.
பவுத்தத்தின் பிரிவுகள், மூலபவுத்தக் கோட் பாடான தேரவாதத்தை ஒழிக்க பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி, புத்தரின் கொள்கையை மாற்றி உருவாக்கப்பட்ட மகாயாணப் பிரிவு, புத்தரின் பார்வையில் சாதி, பவுத்தத்தில் பெண்களின் பங்களிப்பு போன்றவற்றை விளக்குகிறார். பவுத்தத்தை அரசு சமயமாக்கி சமூகப் புரட்சியை உருவாக்கிய சாம்ராட் அசோகன் பற்றியும், அவரது காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.
மவுரிய அரசரைக் கொலை செய்து இந்தியாவின் முதல் அரசியல் செய்த கோட்சேவின் முன்னோடியான புஷ்யமித்ரசுங்கன் பற்றியும் அவனது காலத்தில் உருவாக்கப்பட்ட ‘மனுதர்மம்’ என்னும் மனித சமத்துவ விரோத நூல், இதனை உருவாக்கிய சுமதி பார்க்கவா பற்றியும் விரிவாக ஆய்வு செய்கிறார் நூலாசிரியர். கடைசி அத்தியாத்தில் இலங்கை பவுத்த நூலான ‘மகாவம்சம்’ என்னும் நூலை ஆய்வு செய்து அதன் புரட்டுகளை விளக்குகிறார். அனைத்து சமூகப் போராளிகளும படிக்க வேண்டிய நூல்.