1928இல் சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்

பிப்ரவரி 1-15

மதுரை ஜில்லா, உத்தமபாளையம் தாலுகா, ஆண்டிப்பட்டி போஸ்டாபீசானது அக்கிராமத்துக்குள் வைக்கப்பட்டும் பிராமணர் போஸ்ட் மாஸ்டராக நியமிக்கப்பட்டு மிருப்பதால் பஞ்சமர்கள் மேற்படி போஸ்டாபீசுக்குள் வரக்கூடாதென்றும் வெளியில் சுமார் கால் பர்லாங்கு தூரத்திலேயே நின்று மேற்படி போஸ்டாபீசுக்கு தடையன்னியில் வரக்கூடிய ஆசாமிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாகத்தான் பஞ்சமர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன பெற்-றுக்கொள்ள வேணுமென்றும் செய்திருப்பது மிகப் பரிதாபமாகயிருக்கிறது. பஞ்சமர்களுக்கு கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன தேவையாயிருந்தால் அவர்கள் அக்கிரகாரத்துக்குள் தாராளமாய்ப் பிரவேசிக்கக் கூடிய ஆசாமிகளை தேடிப் பிடித்து கெஞ்சிக் கேட்டால், இரக்கமுள்ள புண்ணியவான் களாயிருந்தால் பஞ்சமர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போய் போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்து ஸ்டாம்பு வாங்கிக் கொடுக்கின்றார்கள். சிலர் ‘இதுதான் எனக்கு வேலையோ’வென்று போய்விடுகிறார்கள். ஆகவே சில சமயம் ஏழை சகோதரர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன வாங்க முடியாமல் திரும்பி வந்து விடவேண்டியதாயும் ஏற்படுகிறது. ஆண்டிப்பட்டி போஸ்டாபீசைச் சேர்ந்த சுமார் 15 கிராமங்களிலுள்ள பஞ்சமர்கள் இது விஷயமாக ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அநேக தடவைகளில் இவ்வித ஜனங்கள் கஷ்டப்படுகிற பரிதாபத்தைப் பார்த்து யானே எனது முக்கிய ஜோலிகளை நிறுத்திவிட்டு பஞ்சமர்களுக்கு ஸ்டாம்பு முதலியவை வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் மேல் எனது சொந்த ஜோலிகளைப் பார்க்க நேர்ந்திருக்கின்றன. ஆகையால் ஏழை ஜனங்களின் பரிதாப நிலைக்கிரங்கி மேற்படி போஸ்டாபீசை பொது ஸ்தலத்தில் வைத்து யாவரும் யாதொரு தடையன்னியில் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியவைகளை காலாகாலத்தில் பெற்றுக் கொண்டு போகவேண்டிய யேற்பாடுகளைச் செய்துவைக்க வேணுமாய் ரொம்ப வணக்கமுடன் கேட்டுக்கொள்கிறேன்.
‘உள்ளூர்வாசி’
‘குடிஅரசு’ 28.10.1928

பார்ப்பனனிடமிருந்து விபூதி வாங்காததால் ஜாதிப்பிரஷ்டம்

26.10.1928இல் எனது திருமண ஊர்வலத்தின்போது எங்கள் சொந்த மாரியம்மன் ஆலயத்திற்குச் செல்ல அங்கிருந்த பார்ப்பான் சூட தீபாராதனை செய்து காண்பித்து விபூதி கொடுத்தான். நான் விபூதி அவனிடமிருந்து வாங்காமலே யானே எடுத்து அணிந்துக்கொண்டேன். அதன்பின் பார்ப்பான் எனக்கு மாலையிட வந்தான். நான் அவனை போடவிடாமல் கையில் தரும்படி கேட்டேன். மேற்படியான் அப்படி கையில் கொடுத்துப் போடுவது வழக்கமில்லை என்று மறுத்து அப்புறம் என் கையில் கொடுத்தான். யானே மாலை அணிந்து பெண்ணுக்கும் அணிந்து தேங்காய் பழம் எடுத்துக் கொண்டேன்.

தேங்காய் பழம் எடுத்துக் கொண்டவுடன் என்னுடன் இருந்த என் அத்தான் தட்சணை கொடுப்பது வழக்கமென்று 2 அணாவை கொடுத்தார். பார்ப்பனன் அதையும் பெற்றுக் கொண்டு “இம்மாதிரி தங்கள் குருக்களை தங்கள் வேலைக்காரர்களைப்போல் கேவலப்படுத்திவிட்டீர்கள். ஆகையால் இனிமேல் யான் இந்த கோவிலில் இருக்க முடியாது; இச்க்ஷணமே சம்பளக் கணக்கு தீர்த்துக் கொடுக்க வேண்டும்’’ என்று என் உறவின் முறையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டான். செய்தவுடனே என்னையும் விசாரியாமல் யான் செய்தது குற்றம்தான் என்று ஒருசில பகுதியார் தாங்களாகவே தீர்மானம் செய்துகொண்டு இன்றைக்கு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். விசாரிக்க “யான் செய்தது குற்றமல்ல’’ என்று வாதித்தேன். “உறவின் முறையோரெல்லாம் சேர்ந்து குற்றமென்று முடிவு செய்திருக்க நீ குற்றம் செய்யவில்லை என்று மறுக்கிறாய். இது இன்னும் இதைவிட அதிக குற்றம் ஏற்படும், ஆகையால் பார்ப்பானிடம் விபூதி, குங்குமம், மாலை இவை நீதானாய் எடுத்துக் கொண்ட குற்றத்துக்காக உடனே யாவருக்கும் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள் என்றார்கள். மறுபடியும் யான் செய்தது குற்றமல்ல என்று விளக்கினேன். அப்புறம் அவர்களாய் தீர்மானித்து என்னையும் என் தாய் தந்தையரையும் ஜாதிப் பிரஷ்டம் என்று உடனே தள்ளிவைத்து விட்டார்கள். எந்த கவர்ன்மெண்டிலும் இம்மாதிரி ‘நியாயம்’ கிடைக்காது. இவ்வளவு ஒழுங்கான உறவின்முறையாருடன் இருப்பதைவிட தனியே இருப்பது நல்லது என்று தற்சமயம் சந்தோஷமாய் விலகி இருக்கிறேன். என்றைக்கு என் உறவின்முறையார் சுயமரியாதை பெறுவார்களோ! – –_வே.மா.கி.சிங்காரவேல்
– குடிஅரசு – 04.11.1928

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *