கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்கள், குடுவைகள் போன்றவற்றில் உடல் நலத்திற்குப் பாதகமான அளவில் ஈயமும், காட்மியமும் (Lead & Cadmium) உள்ளது பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 197 கண்ணாடிப் பொருள்களை சோதித்ததில் 139இல் ஈயமும், 134இல் காட்மியமும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கண்ணாடித் தம்ளர்களின் பரப்பிலும் அவற்றின் விளிம்புகளிலும் பாதுகாப்பான அளவினைவிட 1000 மடங்கு அதிகமான ஈயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடிப் பொருள்களின் மீது செய்யப்பட்டுள்ள கலைநய ஒப்பனைகள் மக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிப்பவையே என்றும் அவற்றில் ஈயமும், காட்மியமும் அதிகளவில் உள்ளது ஆச்சரியமே என்று ஆராய்ச்சியாளரான ‘ஆன்ட்ரு டர்னர்’ கூறுகிறார்.
மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்
பிறந்த நாள்: 7 பிப்ரவரி 1902
மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன் அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும் ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு. அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர்.
“திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்ற ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன மொழிக்கடல் அவர். மொழியியல், சொற் பிறப்பியல், சொல்லாக்கம், சொல்லாராய்ச்சி, மொழி ஒப்பீடு, வரலாறு, ஞால நூல், மாந்தரியல், சொற்றொடுப்பு, உரை வரைவு முதலிய துறைகளில் புலமைமிக்கவர்.
அவர் நிறுவியது மூன்று கொள்கைகள்;
1. உலக முதன் மொழி தமிழே!
2. திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழே!
3. ஆரிய மொழிக்கு மூலம் தமிழே! ஆகியவைகளாகும்.
5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் மதுரையில் கலந்துகொண்டு தமிழ் முழக்கம் செய்து கொண்டிருந்தபோதே நெஞ்சுவலிக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில நாள்களில் மறைவுற்றார். (1981, ஜனவரி 16). அவர் ஆக்கித் தந்த நூற் செல்வங்கள் என்றென்றைக்கும் தமிழ் உலகிற்கு நல்லொளி ஊட்டக் கூடியவை; பன்னூறு ஆய்வுகளுக்கு மூலப் பொருளாக விளங்கக் கூடியவை! தமிழ் செம்மொழியே என்பதற்கு அவர் யாத்த நூல்கள் போதாதா?
ம.சிங்காரவேலர்
பிறந்த நாள்: 18 பிப்ரவரி 1860
சுயமரியாதை இயக்கம் மற்றும் சமதர்ம தத்துவத்தின் சீலராக வாழ்ந்து மறைந்தவர் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முன்னோடித் தலைவரான இவர் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்துகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்.
தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கை, இந்தியாவைப் பீடித்த வருணாசிரம அமைப்புச் சமூகத்தினை மாற்றியமைக்க அடிப்படைத் தேவை என்பதை முற்றிலும் ஏற்றுக்கொண்டவர்.
அந்தக் காலத்திலேயே வழக்குரைஞரான அவர், தன் படிப்பை வருவாய்க்கான மூலதனமாகக் கொள்ளாமல் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கொடியை ஏற்றுவதற்கான சாதனமாகப் பயன்படுத்தினார். அவரது அரிய அறிவார்ந்த ஆராய்ச்சிக் கருத்துகளை குடிஅரசு இதழிலே எழுதிட தாராளமான இடத்தினை வழங்கியவர் தந்தை பெரியார்.
“விஞ்ஞானமும், மூடநம்பிக்கையும்’’ என்ற தலைப்பிலும், “கடவுளும் -பிரபஞ்சமும்’’ என்ற தலைப்பிலும் ‘குடிஅரசு’ இதழிலே அவர் எழுதி வந்த கட்டுரைகள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நூல்களாக (பல பதிப்புகள்) வெளியிடப்பட்டுள்ளன. பொது வாழ்வில் தந்தை பெரியாருக்கும், ம.சிங்காரவேலருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
சிங்காரவேலர் 1918-இல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பிளேக் நோய் தாக்கியபோது, பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தன் வீட்டையே மருத்துவமனையாக மாற்றிப் பேருதவி செய்தார்.
86 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அப்பெருமகனார் சுயமரியாதை இயக்க, சமதர்ம இயக்க உணர்வாளர்களின் குருதியில் என்றென்றைக்கும் நீக்கமறக் கரைந்தவர் என்பதில் அய்யமில்லை.