ஒரு கோயில் திருவிழா… ஊரே கூடி திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக் கின்றது. அந்த மகிழ்ச்சியான நேரத்தில் ஊரின் முக்கியஸ்தர் ஒருவர் காணாமல் போகிறார்.
நீர்க்கோழி பிடிக்கும் உத்தியைப் பயன்படுத்தி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குளித்துக் கொண்டிருந்தவர் கடத்தப்படுகிறார்.
போலீசின் கண்காணிப்பு இருக்கும்போதே மற்றொருவர் கடத்தப்படுகிறார்.
ஏன்? எதற்கு? _- என்று காவல் துறையினருக்கு ஏற்படும் கேள்விகள் பார்வையாளர்களான நமக்கும் ஏற்படுகிறது. அவர்களைக் கடத்தியவர்களைக் காட்டும்போது நாம் இருக்கையின் நுனிக்கே வந்து, இவர்களா?- என்று வியப்பின் வசப்பட்டுவிடுகிறோம்.
ஏன்? அவர்கள் இதைச் செய்தார்கள் என்று காட்டப்படும்போது, அந்த அதிர்ச்சி குறைந்து, அவர்களைக் கடத்தியது சரிதான் என்று நாம் சமாதானமடைவதோடு, கடத்தப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை? எப்படி தண்டனை? என்று ஆவலுடன் பார்க்கும்படியாக திக் திக் திக்கென்று நகர்கிறது கதை. அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? இல்லையா? இதுதான், வெங்காயம் திரைப்படத்தின் கதை..
வெங்காயம் பெயரே சுர்…ரென்று இருக்கிறது. கதையும் அப்படித்தான். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாருக்கு இது முதல் படம் என்று சொல்ல முடியவில்லை. கதையும், காட்சியமைப்பும், இயக்கமும் மெச்சும்படியாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படிப்பட்ட கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காரணம், ஜோதிடம் என்ற பெயராலும், குறி சொல்கிறோம் என்ற பெயராலும், மாந்திரீகம் என்ற பெயராலும் அறியாத மக்களின் உழைப்பை உறிஞ்சுகின்ற மூடநம்பிக்கை வியாபாரிகளைத் தோலுரிக்கிற வகையிலான கதை இது. இத்தகைய கதைகளை மற்றவர்கள் தொடுவதற்கும் அஞ்சுவர்.
முற்பகுதியில், கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க வருகின்ற இன்ஸ்பெக்டர் நாயகனாகவும், பால் வியாபாரம் செய்யும் துடுக்குக்காரியான நாயகியும் _ அவர்களுக் கிடையே முட்டல், மோதல் பின்னர் அது காதல் என்று கதை தேனி மாவட்ட கிராமப் பகுதிகளில் பச்சைப்பசேல் என்று நகர்கிறது. பிற்பகுதியில், வேகமும், விறுவிறுப்பும், திடீர் திருப்பங்களுமாக செல்கிறது. கடத்தப்பட்டவர் களைக் காப்பாற்ற வேண்டிய நாயகனே (இன்ஸ்பெக்டர்) அவர்களைத் தண்டிப்பதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கதையில் காட்டப்பட்டிருக்கும் காட்சிகளிலும்கூட நாட்டில் அன்றாடம் நடைபெறுகின்ற உண்மைகள்தானே தவிர ஒன்றுகூட மிகையில்லை..
திருவிழாவில் கடத்தப்படுகின்ற காட்சியும், குளித்துக்கொண்டிருக்கும் பொழுது நடக்கும் கடத்தலும், அந்தச் சிறுவர்கள் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்கும் காட்சியும்…. நம்மை இருக்கையின் நுனிக்கே வரவைக்கிறது. முக்கியமாக, ஊர்விட்டு நகரத்திற்கு தன் அய்ந்து வயது மகனின் சிகிச்சைக்காக வந்திருந்த போது, அந்தச் சிறுவன் நரபலிக்காக கடத்தப்படுவதும், பார்ப்போரின் நெஞ்சம் பதறப்பதற சிறுவனை நரபலியிட முயல்வதும், திக்கற்றுப்போன அந்தச் சிறுவனின் தந்தை பரிதவிப்புடன் காணாமல்போன தன் மகனைத் தேடி அலைவதும், மறுபக்கம் அந்தச் சிறுவனை தாஜா செய்து நரபலிக்கு முயல்வதும், சிறுவனின் தந்தை, வழியில் போவோர் வருவோரிடம் கண்ணீர் மல்க விசாரிப்பதும், அப்பப்பா… அந்தச் சிறுவன் எப்படியாவது காப்பாற்றப்பட்டுவிட வேண்டுமே என்று பார்க்கின்ற நமது நெஞ்சும் கிடந்து தவிக்கிறது. அந்தோ! அந்தச் சிறுவன் நரபலியால் துடிதுடிக்க இறந்துவிடுகிறான். அந்த அதிர்ச்சியில் அவனது தந்தையும் இறந்துவிடுகிறார். இந்தக் காட்சிகள் நம்மைக் கலங்க வைத்துவிடுகிறது. சிறுவனின் தந்தை பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இப்படி ஒரே நேரத்தில் தந்தை, தம்பி இருவரையும் இழந்த ஏழெட்டு வயதே நிரம்பிய சிறுமி ஆங்காரத்துடன் சிலிர்த்தெழுகிறாள். இப்படி ஒவ்வொரு பின்னணியுடன் திரண்டவர்கள்தான் இப்படிப்பட்ட கடத்தல்களில் ஈடுபட்டவர்கள்.
கதை இறுதியை நெருங்க நெருங்க கடத்தப்பட்ட குற்றவாளிகள் எப்படிப்பட்ட தண்டனையை பெறப் போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்துக் கிடக்கும்போது திடீர்த் திருப்பமாக சிறுவர்கள் மனம் மாறுவதும், அதிலும் திருப்பமாக சாமியார் ஒருவனால், திருமணம் செய்துகொள்ளப்போகும் தன் காதலியை இழந்த நாயகன் (இன்ஸ்பெக்டர்) அந்த அயோக்கியர்களுக்குத் தண்டனை வழங்குவதுமாக கதை முடிகிறது.
தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் எத்தனையோ திரைப்படங்கள் வருகின்றன. ஆனால், அறிவியல் கருவியான திரைப்படத்தின் மூலம் மக்களைப் பழைமையிலிருந்து மீட்பதற்குப் பதிலாக மேலும் புதிய வடிவில் அடிமைகளை உருவாக்கியும், பழைமையைப் புதிய புதிய வடிவில் புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஆனால், வெங்காயம் _ அந்தப் பூனைக்கு மணி கட்டி இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம், மூடநம்பிக்கை களின் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கக்கூட வேண்டாம். கேள்வியாவது கேட்கத் தோன்றும். அந்த எண்ணம் தோன்றிவிட்டாலே, இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் எண்ணம் ஈடேறிவிடும். அதுவே இந்தப் படத்தின் வெற்றியும்கூட.
இனமுரசு சத்யராஜ் அவர்கள் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் சொல்லித்தராத பகுத்தறிவை ஒரு பாடல் மூலம் சொல்லிக் கொடுக்கிறார். பாடலில், ஒரு காட்சியில் பெரியாராகவே வேடமிட்டு வந்து மீண்டும் அசத்துகிறார். படத்திற்கு பரணி இசையமைத்திருக்கிறார். அவரும் மனதில் நிற்கிறார். பின்னணி இசையும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. அறிவுமதி, சுப.வீரபாண்டியன், சபாரத்தினம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
இது வெறும் படமல்ல, பகுத்தறிவுப் பாடம். அதனால், அனைவரும் திரையரங்கம் சென்று படத்தைப் பார்ப்பது மட்டுமல்ல, மற்றவர்களையும் பார்க்கச் சொல்லவும் வேண்டும்.
றீ உடுமலை வடிவேல்