மம்சாபுரத் தாக்குதலும்
மக்கள் கொந்தளிப்பும்!
வடசென்னை-ராயபுரம் தி.க. சார்பில் வேண்டுகோள்
அறப்போர் விளக்கப் பொதுக்கூட்டம்
18.06.1982 அன்று தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய பேருந்து துவக்க விழா சிறப்புடன் நடைபெற்றது.
விழாத் தொடக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி வைதேகி கண்ணன் அவர்கள் பள்ளிக்கு பேருந்து வாங்க சோழன் போக்குவரத்துக் கழகத்துடன் ஒரு வருட காலமாக கடிதப் போக்குவரத்து கொண்டதை பாராட்டி பேருந்து வாங்க எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளைக் கூறி, விழாவிற்கு வருகை தந்திருந்த விருந்தினர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மணிசுந்தரம் அவர்களையும் பெற்றோர்களையும் மாணவிகளையும் வரவேற்று சிறப்புமிகு உரையாற்றினேன்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய பேருந்து
பெற்றோர் வேண்டுகோளையும், வளர்ந்து வரும் பள்ளியின் தேவையையும் கருத்தில் கொண்டு பேருந்து வாங்க முடிவு செய்தனர். “அசோக் லேலண்ட்’’ பேருந்துதான் வேண்டும் என்ற எங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு நல்ல பேருந்தினை வழங்கியமைக்கு நன்றி கூறினேன்.
துணைவேந்தர் அவர்கள் சிறப்புரை யாற்றுகையில், “தந்தை பெரியாரின் சுவட்டில் சிறிதும் வழுவாது கொள்கைப் பிடிப்பில் வேகம் கொண்டு செயல்படுகிறார் திரு.கி.வீரமணி என்று மனதாரப் பாராட்டினார். தந்தை பெரியாருக்குப் பின் சரியான பாதையில் தன்னலமற்ற வகையில் இயக்கத்தை வழிநடத்திச் செல்ல தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள திரு.வீரமணி அவர்கள் பல்வேறு புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கி நல்ல முறையில் நடத்தி வருகிறார்’’ என்று பாராட்டிப் பேசினார்.
விழாவின் இறுதியில் பெற்றோர்களின் சார்பில் திரு.சாகுல் அமீது அவர்களும் பள்ளியின் சார்பாக புலவர் து.தயாளசாமி அவர்களும் நன்றி கூறினார். விழாவில் பள்ளிக் குழந்தைகளும், பெற்றோர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள். மேற்கு சென்னை, புரசை_ஓட்டேரி, சென்னை மாவட்டக் கழக மகளிரணிகளின் சார்பில் வீராசாமி தெருவில் 21.06.1982 அன்று கழக மாநில மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
எனது உரையில், “தந்தை பெரியார் வாழ்ந்த இந்த மண்ணில் பெருந்தலைவர் காமராசர் ஆண்ட இந்தத் தமிழ்நாடு _ அறிஞர் அண்ணா ஆண்ட இந்தத் தமிழ்நாடு _ டாக்டர் கலைஞர் ஆண்ட இந்தத் தமிழ்நாடு _ அமைதிப் பூங்காவாகக் காட்சியளித்த இந்தத் தமிழ்நாடு இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். என்ற நச்சுப் பாம்பினால் ஜாதிவெறி தலைதூக்கி அதன்மூலம் தமிழர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர் _ உயிர்கள் பலியாகியுள்ளன.
கன்னியாகுமரி கலவரம்; அடுத்து மண்டைக்காட்டில் கலவரம், துப்பாக்கிச் சூடு, திருநெல்வேலி, ராஜபாளையம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் கலவரம் என்று படிப்படியாக வளர்ந்து இப்பொழுது புளியங்குடியிலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 6 பேர் உயிர் பலி ஆகியுள்ளனர். இதுவரை இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை எதுவும் இல்லை; இரண்டு நாள்களுக்கு முன்னாள் ‘இந்து மறுமலர்ச்சி’ ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களினால் முக்கடலும் சங்கமமாகும் கன்னியாகுமரியில் கலவரம் ஆரம்பிக்கும் நேரத்திலே நாங்கள் எடுத்துச் சொன்னோம் இந்த அரசுக்கு. அரசு அலட்சியம் செய¢தது’’ என்று கூறி மேலும் பல்வேறு சம்பவங்களை எடுத்து விளக்கியுரையாற்றினேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயில்சிங் அவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் கட்சியான இந்திரா_காங்கிரஸ் கட்சியின் சார்பில் அறிவித்ததை வரவேற்று 23.06.1982 ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தாழ்த்தப் பட்டவரை வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது நமக்கு மனவேதனைதான். இதுகுறித்து குடவாசல் மாநாடு, திருச்சி மாநில மாநாடு ஆகியவைகளில் திராவிடர் கழகம் வற்புறுத்தியதோடு, பிரதமர் அம்மையார் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் பல கடிதங்கள் எழுதி சிலர் பதிலும் எழுதினர்.
ஏமாற்றம் ஒருபுறம் என்றாலும், உள்துறை அமைச்சராகப் பணிபுரிந்த திரு.ஜெயில்சிங் அவர்களை குடியரசுத் தலைவராக இந்திரா_காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது குறித்து நாம் மகிழ்ச்சியே அடைகிறோம். காரணம், சீக்கிய சமூகத்தவரானாலும் அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினைச் சார்ந்தவர். மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க அவரால் முடிந்த அனைத்தையும் செய்தவர். எனவே, அவரைத் தேர்வு செய்த பிரதமருக்கும் அதற்குக் காரணமாக இருந்த பிரதமர் அவர்களிடம் வலியுறுத்திக் கருத்தைக் கூறிய தலைவர்கட்கும் நமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தேன்.
இந்த அறிக்கையை வெளியிட்ட அடுத்த நாளே (24.06.1982) அன்று “நிதானப் போக்குக்கே பெயர் போன ‘இந்து’ நாளேடு’’ அதன் தலையங்கத்தில் இதனை அப்பட்டமாக வடித்துக்காட்டி இருக்கிறது.
திரு.ஜெயில்சிங் அவர்கள் ஆளுங்கட்சியின் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது குறித்து ‘இந்து’ ஏடு என்ன எழுதுகிறது பாருங்கள்:
ஜெயில்சிங்
“To many the choice of Mr.Zail Singh height have come as a big surprise and to some even as a shock. This does not necessarily mean he will not make a good President. The Country has to wait and see.”
“ஜெயில்சிங் அவர்களைத் தேர்ந்தெடுத்தது பலருக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் சிலருக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். இதனாலேயே அவர் ஒரு நல்ல குடியரசுத் தலைவராக பணியாற்ற இயலாதவர் என்ற அர்த்தத்தை எவரும் கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும் என்பதல்ல, நாடு அதைப் பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.’’
எவ்வளவு ‘குத்தல்’, ‘கேலி’, ‘பொடி’ வைத்து ‘இந்து’வின் வாசகங்கள் _ விஷமத்தை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கிறது. திரு.வெங்கட்ராமனோ, நரசிம்மராவோ ஆளுங் கட்சி வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டிருந்தால் ‘இந்து’வின் ‘பேனா’ இப்படி நர்த்தனம் புரியுமா?
‘இந்து’ ஏடு தன்னை “Indian National Newspaper” என்று முகப்பில் கொட்டை எழுத்துகளுடன் அறிமுகம் செய்துகொள்ளும் ஏடு. அதன் “தேசியம் எப்படி பார்ப்பனீய ஜாதிபுத்தி’’ என்ற ஓட்டுக்குள் அடங்கி யிருக்கிறது என்பதைக் காட்ட இந்த ஒரு தலையங்கம் போதாதா? என்று வினவியிருந்தேன்.
24.06.1982 மாலையில் நடைபெற்ற மன்னை வட்ட திராவிடர் கழகம் _ மாணவ _ இளைஞரணி துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில் கணேசமூர்த்தி, கை.முகிலன், ஆ.சுப்பிரமணியன், ஆர்.பி.சாரங்கன், கா.மா.குப்புசாமி ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
விழாவில் நான், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிகளின் பச்சைப் பார்ப்பனப் பின்னணிகளை விளக்கி உரையாற்றினேன்.
01.07.1982 கரூர் நகர தி.க. பிரமுகர் தி.க.செல்லப்பன் அவர்களின் மகன் செ.சேரன்_சோதி திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தேன். மாவட்ட ப.க. அமைப்பாளர் வழக்குரைஞர் பி.ஆர்.குப்புசாமி இத்திருமணத்திற்கு முன்னிலை வகித்தார். மணமக்களை வாழ்த்தி மாவட்டத் தலைவர் கே.கே.பொன்னையா, பெ.வீரண்ணன் மற்றும் பலரும் வாழ்த்தினார்கள்.
பின்பு கரூர் மாவட்டத்தில், நகர சுயமரியாதை திருமண மய்யத்தைத் துவக்கி வைத்தேன். பின்பு, கரூர் நகர திராவிடர் கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வாயினர்.
நிகழ்ச்சிக்கு, வழக்குரைஞர் பி.ஆர்.குப்புசாமி தலைமை வகித்தார் மற்றும் மாவட்டத் தலைவர் கே.கே.பொன்னையா, பெ.வீரண்ணன், மு.க.இராசசேகரன், கே.ஆர்.கண்ணையன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 20 நிமிடம் உரையாற்றினேன்.
கம்பம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீரிய செயல் வீரர்களில் ஒருவருமான கம்பம் நடராசன் மறைவுக்கு 01.07.1982 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தோம். அதில், திரு.நடராசன் அவர்கள் சீரிய பொதுநலத் தொண்டராய் கொள்கை வழிநின்ற இலட்சிய வீரராகத் திகழ்ந்தார். அவரது திடீர் இழப்பு உள்ளபடியே தமிழகப் பொதுவாழ்வில் உள்ள யாருக்கும் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும், கலைஞர் அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்.
05.07.1982 அன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் திடீரெனக் காலமான சுயமரியாதைச் சுடரொளி வள்ளியூர் நகர திராவிடர் கழகப் பொருளாளர் ப.இராமலிங்கம் அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவர்கள் குடும்பத்தைச் சந்தித்து வந்தேன்.
மறைந்த செயல்வீரர் ப.இராமலிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். அன்னாரின் துணைவியாரும் தனது துணைவருக்கு இணையாக நமது பல போராட்டங்களில் பங்குகொண்டு சிறைப்பட்டவர்.
இரா.வள்ளியம்மையார் அவர்களுக்கு ஆறுதல்மொழி கூறி அவரது குடும்பத்தின் பிற அங்கத்தினர்களுக்கும் ஆறுதல் கூறினேன். என்னுடன் மதுரை மாவட்டத் தலைவர் பி.சிவனணைந்த பெருமாள், மாவட்டச் செயலாளர் டி.ஏ.தியாகஅரசன், எஸ்.சங்கர லிங்கம், சென்னை குணசீலன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் என்னுடன் வருகை தந்தனர்.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களை தமிழர் அல்ல என்று அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் கூறியதைக் கண்டித்தும், கலைஞர் அவர்களை, அப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து “உண்ணாவிரதம் இருப்பது குறித்தும் _ கைவிட அன்பு வேண்டுகோள்’’ விடுத்தும் 05.07.1982 அன்று முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன்.
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவர் தமிழரல்ல என்றும் மற்றும் தாறுமாறாகவும் தரக்குறைவாகவும் தமிழக அமைச்சர்களில் ஒருவர் பேசியுள்ளது உள்ளபடியே மிகவும் வேதனைக்கும் வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்.
அமைச்சர் பதவி என்பது இதன்மூலம் எவ்வளவு சிறுமைக்கு ஆளாக்கப்படுகிறது என்பதைப் பற்றிக்கூட கிஞ்சிற்றும் கவலைப்படாது இதனைக் கண்டிக்க வேண்டிய மூத்த முதல்வர் கண்டிப்பதற்கு பதில் இதற்காக தட்டிக் கொடுத்து ‘பலே பலே’ என்று ‘சபாஷ்’ போடும் நிலையில் நடந்துகொள்ளுவது என்பதை நடுநிலைக் கண்ணோட்டத்துடன் தமிழகப் பொது வாழ்க்கையைக் கண்ணுறும் எவரும் விரும்ப மாட்டார்கள்; மாறாக வெறுக்கவே செய்வார்கள் என்றும், ‘உண்ணாவிரதம்’ என்பதை அவர் கைவிட வேண்டும் என்றும், இதை கலைஞர் அவர்கள் அலட்சியம் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
06.07.1982 அன்று வடசென்னை_ராயபுரம் தி.க. சார்பில் வேண்டுகோள் அறப்போர் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று நான் ஆற்றிய உரையில், நாயும், பன்றியும், மிருகங்களும் செல்லக்கூடிய தெருக்களில் ஆறு அறிவு படைத்த மனிதன் நடமாட முடியாத _ கூடாத நிலை அன்றைக்கு இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் மெல்ல வந்தது. அதை அன்றைக்கு அய்யா அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள், போராடினார்கள்; வெற்றியும் பெற்றார்கள்; அதன் பலனாகத்தான் இன்றைக்கு நம் தமிழர்களிலேயே பலர் டாக்டர்களாகவும், எஞ்சினீயர்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர்.
தந்தை பெரியாரவர்கள் போல துணைக் கண்டத்திலே மனித உரிமைக்காகப் போராடிய ஒரு தலைவர் யாராவது உண்டா?
அன்றைக்கு வைக்கத்தில் போராடினார்கள்; அதன் சிறு பரிணாம வளர்ச்சிதான் இன்றைய தினம் வந்துள்ள மண்டல் கமிஷன் அறிக்கை.
டாக்டர் அம்பேத்கர் ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளாரே; பார்த்தால் தெரியுமே _ சிவாஜி ராஜாவாக முடிசூட்டப் போகும்போதுகூட சூத்திரன் என்பதால்தானே முடிசூட முடியவில்லை. அதை அறிஞர் அண்ணா அவர்கள், “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்’’ என்ற நாடகத்தில் வெகு அழகாகக் காட்டி இருக்கிறார்கள்.
இந்த மீனாட்சிபுரம் மதமாற்றம் வந்த பின் நம் அரசு சமபந்தி போஜனம் நடத்தியது. கோயில் கோயிலாக இது நடைபெற்றது. அன்றைக்கு காங்கிரஸ் தலைவராக அய்யா அவர்கள் இருந்தபோது காந்தியார், “அரிசன நலம்’’ என்ற பெயராலே தாழ்த்தப்பட்டவர் களுக்கு, தனிப் பள்ளிக்கூடம் _ தனிக்குளம் _ தனிக் கிணறு என்று திட்டம் ஒன்றை அறிவித்த நிலையில் அய்யா அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை; எதிர்த்தார். அதுபோல 1952 வக்கீல் சங்கத்திலே தண்ணீர் பானை தனித்தனியாக இருந்ததே; இவற்றை ஒழிக்கக்தான் அய்யா அவர்கள் உழைத்தார்கள். தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டார்கள். போராடிப் போராடி தந்தை பெரியார் அவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற இவ்வேளையில் _ அய்யா அவர்களின் கடைசி லட்சியமான சாதி ஒழிப்புப் பணியில் இறுதிக் கட்டமான அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் மீண்டும் எழுந்து நடமாட வேண்டும் என்பதே நமது இன்றைய கோரிக்கையாகும் என்று பல வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறினேன். கூட்டத்தில் தோழர் வெ.சின்னதம்பி, ந.அன்புக்கரசு, வி.எம்.நாராயணன், மு.அந்தோணி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வழக்கறிஞர் வீரசேகரன், திமுக தோழர் சண்முகம், வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் க.பலராமன் முதலியோர் பேசினர். கழகத் தோழர்களும், தோழியர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
07.07.1982 தருமபுரி மாவட்டத்தில் என்னுடைய தலைமையில் மாவட்ட திராவிடர் கழகக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறும் அறப்போர் பற்றி விளக்கியுரையாற்றினேன். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மூக்கனூர்பட்டி வே.இராமசாமி, செயலாளர் அ.பழனியப்பன் மற்றும் தேசாய் வேணுகோபால் (மா.வ. துணைத் தலைவர்), அ.தீர்த்தகிரி, இணைச் செயலாளர் (மா.வ.தி.க.), எஸ்.கே.சின்னப்பன், தி.பொன்னுசாமி, அமைப்புச் செயலாளர் கோ.சாமிதுரை உள்ளிட்டோரும் என்னுடன் கலந்துகொண்டார்கள். நான் திருச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி தோழர்களிடையே உரையாற்றினேன். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய குழு உறுப்பினர் பி.கே.இராமமூர்த்தி (மாவட்ட தி.க. பொருளாளர்) ஆகியோர் மாவட்டக் கழக ஒத்துழைப்புடன் சிறப்பாக நடந்தேறியது.
07.07.1982 அன்று “கழகத்தின் கோரிக்கையை சங்கராச்சாரியாரும் ஏற்கிறார்?’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில், கோயில் கருவறையினுள் பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் நுழைந்து பூசை செய்தால் “சாமி தீட்டாகிவிடும்’’ என்று கூறி அதன்மூலம் பார்ப்பன மேலாதிக்கத் தன்மையைக் காப்பாற்றும் போக்கு முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் விரும்பியவாறு கலைஞர் அவர்கள் திமுக ஆட்சியின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தினைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
ஏன் சங்கராச்சாரிகூட எல்லோரும் “சாமி’’ அருகே சென்று வழிபடலாம். “பூஜை’’ புனஸ்காரம் செய்யலாம் என்பதை அண்மைக் காலத்தில் ஒப்புக்கொள்ள முன்வந்துவிட்டார்! ஆம்! அவருக்கு வேறு வழியேயில்லை! அபிஷேகங்களையும் அர்ச்சனைகளையும் மக்கள் செய்வதன்மூலம் சாதி வேறுபாடுகளை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று (சின்ன) சங்கராச்சாரியார் திரு.ஜெயேந்திர சரஸ்வதி பேசியுள்ளார்.
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாணவர், மகளிரணியினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பயணியர் விடுதியில் 12.07.1982 அன்று மாலை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். கொல்லைப்புறமாக நுழைவதைப் போல் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி விவேகானந்தா பாறையை கேந்திரமாகக் கொண்டு தமிழகத்தில் ஊடுருவிட வருகிறார்கள். அவர்கள் முயற்சியை முறியடிக்க வேண்டியது திராவிடர் இன உணர்வுள்ள அனைவரின் கடமையாகும். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டத்திற்குப் பின்னர் நமது கவனம் தென் மாவட்டங்களில் பிரச்சாரங்களில் அதிகம் இருக்கும் என்று குறிப்பிட்டேன். தமிழனின் இனமான இழிதன்மை, பார்ப்பனர் கொடுமை, மண்டல் கமிஷன் அறிக்கையின் தெளிவான செய்திகள் உள்பட பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி விளக்கினேன்.
ஆசிரியருக்கு எடைக்கு எடை பதினைந்து வகையான பொருட்களை வழங்கும் விழா (கல்லக்குறிச்சி).
13.07.1982 அன்று காயல்பட்டினத்தில் பெரியார் பெருந்தொண்டர் பாவலர் அப்துல்காதர் அவர்கள், இல்லத்திற்குச் சென்றேன். 80 வயது நிரம்பிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு அப்துல்காதர் அவர்கள், உடல்நலம் சரியில்லாத நிலையிலும் அகமும் முகமும் மலர வரவேற்றார்கள் என்பதனை இன்றளவும் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளதை நினைவுகூறுகிறேன். இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம், தி.க., ப.க. இளைஞர் உறுப்பினர் கலந்துரையாடல் கூட்டம் மாலையில் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமி விடுதியில் நடைபெற்றது. மாவட்ட ப.க. அமைப்பாளர் க.இராசமாணிக்கம், டாக்டர் தியாகராசன், ஈத்தாமொழி குமாரசாமி, சொர்ணம், அன்பெழில், நூர்தீன், ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர் சங்கரன், கேசவப் பாண்டியன், தேவதாஸ் ஜின்னா, பரமார்த்திலிங்கம், அருணாசலம் ஆகிய தோழர்கள் உரையாற்றினார்கள்.
16.07.1982 அன்று வ.ஆற்காடு மாவட்டம் வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். காலை பள்ளிக் கொண்டா அருகிலுள்ள வெட்டுவாணம் கிராமத்தில் நடந்த தோழர்கள் மகேந்திரன், வாலந்தினா ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை பள்ளிக்கொண்டா பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இராசு (யூனியன் வங்கி _ பள்ளிக்கொண்டா) அவர்கள் தலைமையில் நிறைவேற்றி வைத்து சிறப்புரையாற்றினேன். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பெருமாள், வேலூர் நகர தி.க. துணைத் தலைவர் நேமிநாதன், ரஷ்யமணி, ஜமான், குடியாத்தம் நகர தி.க. தலைவர் கோ.சடகோபன், செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
இரவு 7 மணிக்கு வேலூர் சுழற்சங்கம் தலைவர் வழக்குரைஞர் சமரசம் தலைமையேற்று உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் ஹெரீப் அவர்களும் நானும், “சமுதாய மாற்றம்’’ என்ற தலைப்பில் உரையாற்றினோம். “சமுதாய மாற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது இந்தியாவின் சாதிய அமைப்பு முறையே’’ என்று சுட்டிக்காட்டி நான் உரையாற்றினேன்.
கல்லக்குறிச்சி வட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லை சீரணி அரங்கில் 17.07.1982 இரவு 7 மணியளவில் மாநாடோ என வியக்கும் வண்ணம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் சீரிய தலைமையில், முயற்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அமைப்புகளின் தலைவர்களை எல்லாம் இணைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இனவுரிமைக்காக பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்தின் காவலர் என்ற முறையில் எனக்கு எடைக்கு எடை பதினைந்து வகையான பொருட்களை வழங்கும் விழா எடுத்த மாட்சி, இயக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என்ற மாட்சியை கல்லக்குறிச்சி தட்டிச் சென்றது என்றே சொல்லலாம்.
“மம்சாபுரம் தாக்குதல்கள்’’
தாக்கப்பட்ட கார்.
20.07.1982 அன்று இரவு ராஜபாளையத்தில் மேற்கு முகவை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நான் மம்சாபுரத்தில் பெரியார் மருத்துவமனை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரை தேவசகாயம் காரில் புறப்பட்டு வந்தேன். என்னுடன் காரின் பின் சீட்டில் மதுரை தேவசகாயம், ராஜபாளையம் தங்கராஜன் ஆகியோர் அமர்ந்து வந்தனர். முன்சீட்டில் மதுரை தமிழரசனும் அமர்ந்திருந்தார். ராஜபாளையம் மெயின்ரோடில் மம்சாபுரம் அருகில் உள்ள புதுப்பட்டி பிரியும் வழியில் கார் வந்து கொண்டிருந்தபோது 10 இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் கொடியுடன் “கலைஞர் வாழ்க’’ என்று சத்தம் போட்டுக்கொண்டு, காரை நிறுத்தி, நான் காரில் இருந்தபோது “விடாதே அடிடா! அடி!’’ என்ற ஒரே சத்தம் கேட்டது; உடனே கம்பாலும், சைக்கிள் செயினாலும் என்னை நோக்கி பயங்கரமாக தாக்க ஆரம்பித்தனர். என்னுடைய மூக்கிலும், தோளிலும் கல்விழுந்து ரத்தம் கொட்டியது; உடனே நான் டிரைவரிடம் வண்டியை மிக வேகமாக எடு என்று சொன்னவுடன் வேகமாக எடுத்ததால் எனக்கு கடும் பாதிப்பு தவிர்க்கப்பட்டாலும் கார் முழுவதும் கல்வீச்சில் படு சேதமடைந்தது; உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகளாக இருந்தது. இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டவுடன் பொதுமக்கள் ஆத்திரத்தோடு ஏராளமாகத் திரண்டு விட்டனர். போலீஸ் காவலும் கொடுத்து, பாதுகாப்புக்காக வந்தனர்.
வன் முறையில் ஈடுபட்டவர்கள் மம்சா புரத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். தங்கம், ரவி, சுயம்பு, சண்டியர் தங்கராசன் என்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டனர். அவர்களில் ஒரு பார்ப்பன இளைஞர் இருந்ததையும் தாம் பார்த்ததாகவும் அவர் பெயர் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார். அவர்கள் அனைவரும் அதிமுகவைச் சார்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார். ஒரு தபால் ஊழியர் தடிகளோடு வந்தவர்களை மம்சாபுரத்தில் பார்த்ததாகவும் அவர்கள் ஒரு வரவேற்புக்குப் போவதாகத் தம்மிடம் சொன்னதாகவும் கூறினார். உடனே அங்கிருந்த த.சி.அய்.டி. போலீசாரிடம் இதைப் பதிவு செய்ய வேண்டுமாய் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.
ராஜபாளையத்தில் மின்சாரத் தடை காரணமாகக் கூட்டம் இரவு 10 மணிக்குத் துவங்கியது. கூட்டம் ஏராளமாகக் கூடிவிட்டது. மிகவும் கொந்தளிப்பான நிலை இருந்தது. நான் அந்தக் கூட்டத்தில் இரவு 12 மணி வரை உரையாற்றினேன். உடனே அங்கிருந்து திட்டமிட்டவாறு திருவில்லிபுத்தூர் கூட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். என் காரைப் பின்தொடர்ந்து கழகத் தோழர்கள் லாரிகளிலும் பஸ்களிலும் உடன் வந்தனர். போலீசாரும் பின்தொடர்ந்து வந்தனர்.
இரவு 12.30 மணிக்கு திருவில்லிபுத்தூர் கூட்டத்தில் பேசினேன். நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பே யாரோ சிலர் கல்வீசியதாக தோழர்கள் என்னிடத்தில் தெரிவித்தார்கள். நான் இரவு 2.30 மணி வரை தொடர்ந்து உரையை நிகழ்த்தினேன். கூட்டத்திற்கு திருவில்லிபுத்தூரே திரண்டு வந்துவிட்டது. ஒரே உணர்ச்சியாகவும் கொந்தளிப்பாகவும் இருந்தது.
கூட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் தாக்கப்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களைக் கேட்டனர்! அதற்குப் பிறகு அரசு மருத்துவமனைக்குச் சென்று தாக்கப் பட்டதற்கான மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்று காவல்துறையினரிடம் அளித்துவிட்டு மதுரையிலிருந்து கழகத் தோழர்களுடன் திருச்சி வந்து சேர்ந்தேன்.
அடுத்த நாள் காலையில் பெரியார் மாளிகையில் இருந்தபோது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்து, கவனமாகப் பயணத்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். பின்பு அங்கிருந்த செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தேன். அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று திராவிடப் பாரம்பரியத்தைச் சார்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு ஆட்சியை, மத்திய அரசு குற்றம் சாட்டி மாநில அரசின் உரிமைகளை மேலும் பறித்து விடுவதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன் என்று நான் செய்தியாளர்களிடம் கூறினேன்.
டாக்டர் காமேஸ்வரன் சிகிச்சை அளிக்கிறார்.
அப்போது எனக்கு ஏற்பட்ட காயங்களைக் கண்டு ஏராளமான கழகத் தோழர்களும் தாய்மார்களும், உணர்ச்சி வயப்பட்டு, கண்ணீர் விட்டு அழுதுகொண்டு பெரியார் மாளிகைக்கே வந்துவிட்டனர். விவசாயத் துறை அமைச்சர் காளிமுத்து அவர்களும், புதுவை மாநில அமைச்சர் சிவக்குமார் அவர்களும் என்னிடம் தொடர்புகொண்டு விசாரித்தனர்.
காலிகளால் திட்டமிட்டு நான் தாக்கப்பட்டதற்கு தலைவர்கள், தங்கள் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்கள். திரு.அப்துல் லத்தீப், திரு.குமரி அனந்தன், தென்னரசு, மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பின்னர் சென்னை வந்தவுடன், என் உடல் நிலையை காது, மூக்கு, தொண்டை (ணிழிஜி) டாக்டர் பெரியவர் காமேசுவரன் பரிசோதித்து மூக்கு எலும்பு முறிந்திருக்கலாம் என்று சந்தேகித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். இதை கேள்வியுற்ற திமுக தலைவர் கலைஞர் அவர்கள், தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது நேரில் என்னுடைய இல்லத்திற்கு வந்து டாக்டர்கள் கட்டளைப்படி வளவனூர் கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம், மருத்துவமனையில் சேரும்படி அன்புடனும் கண்டிப்புடனும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, ஆகஸ்ட் அன்று நடைபெறவிருந்த அறப்போரும், அதனை விளக்கி தஞ்சையில் நடைபெறவிருந்த மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டன.
(நினைவுகள் நீளும்…)