மு.சி.அறிவழகன்
ஆசிரியர், கைத்தடி மாத இதழ்
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் மலை அடிவாரத்தில் சாமை புல்லால் பின்னப்பட்ட கூரை வீடு அந்த ஊரில் மதிக்கத்தக்க ஒரு பெரிய மனிதர் வசித்து வந்தார். அனைவராலும் மதிக்கத்தக்க காரணம் அவருக்கும் கடவுளுக்கும் நேரடித் தொடர்பு. அந்தக் கிராமத்தைத் தாண்டி பக்கத்துக் கிராமத்தில் உள்ள குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்றால் கூட அவரை நாடித் தான் வருவார்கள் மருத்துவரைக் கூட பிறகுதான் பார்ப்பார்கள். முதலில் இவரைத் தான் பார்ப்பார்கள் அவ்வளவு சக்தி படைத்தவர் அவர் என்று மக்கள் நம்பினர்.
அவரின் அலுவலகமோ ஆலமரம்தான். அங்கு இரண்டு கல்லால் வைக்கப்பட்ட சாமி இருக்கும். அதற்கு மூன்று வேளையும் பூசை செய்து பணம் சம்பாதிப்பதுதான் அவர் பணி. இப்படியாகப் பல ஆண்டுகள் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு கிடைத்தப் பட்டம் பைத்தியம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடவுள், தான் வசித்த வீட்டில் இனி வசிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டதாக கூறித் தன் வீட்டை கொளுத்தினார். அது அங்கு உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அவருக்குப் பைத்தியம் பிடித்ததாகக் கூறி அவரை ஒதுக்க ஆரம்பித்தார்கள் அப்பகுதி மக்கள்.
இதைப்போலவே சமீபத்தில் ஓரிரு நாட்களுக்கு முன் இவரின் அக்கா இறந்து உள்ளார். அவரின் மரணம் பெரும் கேள்வியை உருவாக்கி உள்ளது. காரணம் ஊரில் உள்ள அனைவருக்கும் அறிவுரை கூறுவதில் தேர்ந்தவர் என்றுகூட குறிப்பிடலாம். காரணம் அனுபவம் மிக்க ஒருவர். அன்பிற்கு மறுபெயர் இவர் என்று கூட கூறலாம். இவரிடம் இருந்த அன்பைப் போலவே பக்தியும் கொஞ்சம் அதிகம் என்றும் சொல்லலாம்.
தன்னால் பிறருக்கு எந்த வித தீமையும் தொல்லையும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் நற்குணம் கொண்டவர், சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார், அத்தோடு அவரின் மகன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி வந்ததால் அந்த மனக்கவலை ஒரு பக்கம். இவை இரண்டும் அவரை தொடர்ந்து வருத்தத்திலே வைத்து வந்தது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு சமீபத்தில் சொர்க்க வாசல் திறக்கும் தகவல் அறிந்து நாம் இறந்து சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று எண்ணி தற்கொலை செய்துகொண்டார்? ஆகையால் தான் கூறுகிறேன் பக்தியின் உச்சம் தற்கொலை! என்று.
2009இல் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘ஒற்றைப்பத்தி’யில் எழுதியவைதான் நினைவிற்கு வருகிறது.
யாரை ஏமாற்றுகிறீர்கள்? எங்களையா அல்லது உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்களா?
நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசிவிரதம் இருந்து விடியற்காலை சொர்க்கவாசல் திறப்பு.
ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு இப்பிறவியில் எல்லா க்ஷேமங்களும் பேஷாகக் கிடைக்குமாம்.
மத்திய, மாநில அரசுகள் எதற்காக தேவையில்லாமல் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் திட்டங்களை வகுக்கின்றன என்று தெரியவில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?
பேசாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்தது கதை. 110 கோடி மக்களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்ல வேண்டியதுதானே!
பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்தால் இந்த 2018ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தொருப் புழுதிக் கூத்துகளை அரங்கேற்றுவார்கள்?
இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒருபானை சோற்றுக்கு ஒரு பருக்கைதானே பதம்?
தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக! எப்படிப்பட்ட சுலோகம்!
“அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது’’ என்ற கருத்தையும் படித்திருக்கிறோம். இப்படி “நாயாகப் பிறக்க வேண்டும்’’ என்று கூறுவதைப் படிக்கும் பொழுது ஆறறிவுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை ஒரு கற்சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவுமொழி, ஆகா, எவ்வளவு உண்மையானது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்றைத் திறக்கக் கூடியது!
கடைசியில் ஒன்று:
இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகிறீர்களே, சொர்க்கத்துக்குப் போகவில்லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? ஒட்டுமொத்தமாகச் சொன்னால் பக்தி முற்றினால் பைத்தியம்! பைத்தியம் முற்றினால் தற்கொலை!
வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !