தமிழை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார்

பிப்ரவரி 1-15

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (7)

நேயன்

 

 

தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை.

1.    “தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது’’ என்று வின்ஸ்ஸோ கூறுகிறார்.

2.    கால்டுவெல், “தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை’’ என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

3.    சிலேட்டர் என்பவர், “திராவிட மொழி எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழியே; தக்க அமைப்புடையதும் தமிழ்மொழியே’’ என்கிறார்.

4.    மர்டாக் என்பவர், “துராணிய மொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரிய மொழியாயும், அழகிய இலக்கியங்களைப் பொருந்தப் பெற்றதாயும் விளங்குவது தமிழே’’ என்றும்     கூறியுள்ளார்.

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள்.

தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.                                                

(‘குடிஅரசு’ – 18.12.1943)

என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசு இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல, தமிழுணர்ச்சியைத் தமிழைப் பரப்ப வழிகளையெல்லாம் குடிஅரசில் வெளியிட்டார்.

1.    தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2.    தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3.    வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4.    தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5.    தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6.    கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7.    தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும். என்று சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் வெளியிட்டு தமிழைத் தூக்கி நிறுத்த முயன்றார்.

சென்னை சாந்தோம் சாலையில் அமைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அமைத்த ‘முத்தமிழ் நிலையம்’ அழைப்பை ஏற்றுச் சென்ற பெரியார் ஆற்றிய உரையில்,

“நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்த அமைப்பிற்கு தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழரும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மை கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவர் ஆவார்கள்.

உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்பிற்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாய் இருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க் கல்வியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும், தன்மானத்திற்கும் பயன்படும்படி மக்கள் உணர உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில் நம் வெற்றித் தன்மையிருக்கிறது.

உங்கள் கழகம் வெற்றியடைய தளராத முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு, ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டு இளைஞர்களும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப் பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமையாகும்’’ என்று பேசினார் பெரியார்.
(‘குடிஅரசு’ –  08.01.1944)

தமிழன் தலை நிமிர்ந்து தன்மானத்தோடும், கல்வியும், அறிவும், உயர்வும் பெற்று வாழ வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருந்தார்.

“ஏ தமிழா! உன்னுடைய நாட்டில் நீ தாசி மகனா? உனது செல்வத்தாலும், உழைப்பாலும் கட்டப்பட்ட பொது இடங்களில் உனக்கு உரிமை இல்லையா? உனது நாட்டில் உன்னை நம்பி வைத்திருக்கும் உணவுச் சாலையில் நீ தீண்டப்படாதவன் என்று உனக்கொரு தனியிடம் ஒதுக்கி வைப்பதா? என்று அடிக்கடி உணர்வூட்டினார். (குடிஅரசு  04.12.1943)

தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர் தழைக்கவும் பெரியார் பாடுபட்டார். திராவிடர் இயக்கம் பாடுபட்டது. கே.பி. சுந்தராம்பாள் என்ற கீழ் ஜாதிப் பெண் புகழ் பெறுவது விரும்பாத ஆரிய கூட்டமும், ஆரியப் பத்திரிகைகளும், அவரது இசைப் புலமையை இழித்துப் பேசியபோது, அந்த அம்மையாருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் பெரியார். இத்தனைக்கும் அந்த அம்மையார் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்.

“தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்; தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை முட்டாள்கள் எனக் கூறுவோருக்குத் தமிழ்நாடு இடங் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழர் களிடையில் தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிராக இருப்பவர்கள், எதிராக வேலை செய்பவர்கள், தமிழில் பாட மறுப்பவர்கள், தமிழர்களின் இக்கோரிக்கையை ஏளனம் செய்பவர்கள் யார்? ஆரியர்கள்தானே. இவர்களைத் தவிர, இத்துணிவுடன் தமிழர்களின் உப்பைத் தின்றுவிட்டு, தமிழ் நாட்டில் வாழ இடம் பெற்று, தமிழர்களின் உழைப்பால் உடலை வளர்த்துக் கொண்டு, தமிழர்களையும் அடிமைப்படுத்தி, தாழ்ந்தவர் களாக்கி, தமிழ் கலைகளுக்கு ஆரிய மேற்பூச்சிட்டு, தமிழோடு வடமொழியைக் கலந்து கெடுத்து, தமிழர்களின் வாழ்வைச் சீர்குலைத்து, தமிழ்நாட்டைத் தங்களுடைய அடிமை நாடாக ஆக்கி வைத்துக் கொள்வதற்கு (பன்னூற்றாண்டு காலமாக) பெரும் துணிவு ஆரியர்களைத் தவிர்த்து வேறு யாருக்கு இருக்க முடியும்?
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *