ஆறு.கலைச்செல்வன்
புதிய கடையின் தொடக்க விழாவை அமர்க்களமாக நடத்தி முடித்தான் வேல்முருகன். ஏற்கனவே சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்த பர்னிச்சர் கடையை விரிவுபடுத்தி நகரின் மய்யப் பகுதியில் வாடகைக்கு இடம் பிடித்துத் தொடங்கினான். இதற்காக அதிக வட்டிக்கு பெரிய தொகையை கடனாகக் கந்தசாமி என்பவனிடம் வாங்கினான். கந்துவட்டி கந்தசாமி என்றே அவனுக்குப் பெயர். வட்டியை மட்டும் ஒழுங்காக அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இரத்தக் களரிதான். அப்படிப்பட்டவனிடம் துணிந்து கடன் வாங்கினான் வேல்முருகன். காரணம், மூர்த்தி ஜோசியர் அவனிடம் கடன் வாங்கலாம் எனக் கூறிவிட்டார். வேல்முருகன் மனைவி ஜானகியும் கடன் வாங்க ஒப்புக் கொண்டாள்.
“ஏங்க, நம்ம தகுதிக்கு மீறி அதிகமா கடன் வாங்கி கடையைத் தொறந்துட்டோம். வியாபாரம் நல்லா நடக்கணுமேன்னு ரொம்ப பயமா இருக்குங்க’’ என்றாள் ஜானகி.
“ஜானகி, ஜோசியர் என்ன சொன்னார்! கந்தசாமியிடம் கடன் வாங்குவது உத்தமம் என்றுதானே சொன்னார்!’’ என்று பதில் கூறினான் வேல்முருகன்.
“சொன்னார்தாங்க’’
“அப்புறம் ஏன் பயப்படறே. இதுவரைக்கும் நாம் சாஸ்திர சம்பிரதாயப் படித்தானே நடந்து வருகிறோம்! ஜோசியர் சொல்வதை மீறி நாம் எதுவும் செய்வதில்லையே’’
“உண்மைதாங்க, ஆனாலும் சில நேரங்களில் சறுக்கியும் இருக்கிறோமே’’
“அது நம்மோட விதி. அதை மாற்ற முடியுமா? நிச்சயமா வியாபாரம் நடக்கும். கந்தசாமி கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுடலாம்.’’
இப்படி எதற்கெடுத்தாலும் நேரம் காலம் பார்த்தே அவர்கள் குடும்பம் நடத்தி வந்தார்கள். ஜோசியம் பொய்த்துவிட்டால் அது நம் விதி என்று கூறி சமாதானம் செய்து கொண்டு விடுவார்கள்.
சில மாதங்கள் சென்றன. வேல்முருகனும் ஜானகியும் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் களைகட்டவில்லை. அதே தெருவில் வேறு சில பர்னிச்சர் கடைகள் முளைத்துவிட்டன. விளம்பரங்கள் நிறைய செய்தான். கடனுக்கும், தவணை முறையிலும் பொருட்களை வாங்கிச் சென்றவர்கள் சரியான முறையில் பணம் கட்டவில்லை. இதனால் வியாபாரம் மிகவும் சரியத் தொடங்கியது. மாதாமாதம் வட்டிப் பணம் கொடுப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் வேல்முருகனும் ஜானகியும் எப்போதும் வாடிய முகத்துடனேயே காணப்பட்டனர். இதையெல்லாம் கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கினான் அவர்கள் மகன் கண்ணன்.
இந்நிலையிலும் வேல்முருகனுக்கும் ஜானகிக்கும் ஜோசியத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை. இதனால் மீண்டும் மீண்டும் பல ஜோதிடர்களிடமும் சாமியார்களிடமும் சென்று குறி கேட்டு வந்தனர். நிறைய செலவாகியது. ஆனாலும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரி செய்ய இயலவில்லை.
அடுத்த சில மாதங்களில் வட்டிப் பணம்கூட சரியாகக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு நாள் இரவு கந்துவட்டி கந்தசாமி வேல்முருகன் வீட்டிற்கே வந்துவிட்டான். அவனைக் கண்டதும் வேல்முருகனும் ஜானகியும் பதறினர்.
“இன்னைக்கு நாள் என்னாச்சு? வட்டிப் பணம் எங்கேடா? போனமாசப் பணமும் பாக்கியிருக்கு. எப்படா தறப்போறே?’’ என அதட்டினான் கந்தசாமி.“இன்னும் அஞ்சு நாளில் கொடுத்துடுறேன். தயவு பண்ணி கோவிச்சுக்காதீங்க’’ என்று கெஞ்சினான் வேல்முருகன்.
“ஏய், உன் வூட்டுக்காரன்கிட்ட சொல்லுடி. அஞ்சு நாளில பணம் வரலேன்னா உயிரோட விடமாட்டேன். அவன் கழுத்தை அறத்துடுவேன். உன்னையும் தூக்கிட்டுப் போயிடுவேன்’’ என்று கடும் கோபத்துடன் விரட்டினான் கந்தசாமி.
இதையெல்லாம் சிறுவனான கண்ணன் நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த வேல்முருகன் கண்ணனை அறைக்குள் போகச் சொல்லிவிட்டு கந்தசாமியின் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
“அய்யா! போயிடுங்க அய்யா. என் மகன் பார்த்துக்கிட்டு இருக்கான். பயப்படுவான். போயிடுங்க’’
ஆனால், அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத கந்தசாமி அவனை உதறிவிட்டு, ”உன்னை குடும்பத்தோடு கொன்னுடுவேன். மரியாதையா பணத்தைக் கொடுத்துவிடு’’ என அதட்டியபடியே கிளம்பிச் சென்றான் கந்தசாமி. அடுத்த நாளும் இதேபோல் வந்து மிரட்டிச் சென்றான்.
அடுத்த நாள் காலை கண்ணனை பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தாள் ஜானகி. அப்போது அங்கு வந்த வேல்முருகன் ஜானகியிடம்,
“பக்கத்து ஊரில் ஒரு சாமியார் வந்திருக்காராம். ஜோசியத்தில் ரொம்பக் கெட்டிக்காரராம். அவரைப் பார்த்து வருவோமா?’’ எனக் கேட்டான்.
ஜானகியும் ஒப்புக் கொண்டு கிளம்பினாள். கண்ணன் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என்கிற நோக்கில் இருவரும் சாமியாரைப் பார்க்கக் கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் சென்றபின் கண்ணன் பள்ளிக்குக் கிளம்பினான். அவன் கதவருகில் வந்ததும் அவன் தலையில் பொத்தென ஏதோ விழுந்தது. அது என்னவென்று பார்த்தான் கண்ணன். அது ஒரு பல்லி. கண்ணனுக்கு ஒரே நடுக்கமாகப் போய்விட்டது. பல்லி தலையில் விழுந்தால் மரணம் ஏற்படும் என்ற யாரோ சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. அப்படியானால் நான் செத்துவிடுவேனா? என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது. சற்றுநேரம் அதைப் பற்றியே அவன் சிந்திக்கலானான். பல்லி தலையில் விழுந்தால் மரணம், கலகம் என்று ஜோசியர் ஒருவர் கூறியதும் ஞாபகம் வந்தது. திடீரென அவன் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது.
“அப்பாவைக் கொன்றுவிடுவதாகக் கந்தசாமி மிரட்டிச் சென்றானே! அம்மாவையும் தூக்கிச் சென்று விடுவதாகவும் அந்த சண்டாளன் சொன்னானே! விடக்கூடாது. அதற்கு முன்பாக நாம் கந்தசாமியைக் கொன்றுவிட்டால்! பல்லி விழுந்துவிட்டதால் நாமும்தான் சாகப் போகிறோமே!’’ இப்படி கண்ணன் மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றியது.
அதற்கேற்றவாறு அப்போது மீண்டும் கந்தசாமி அங்கு வந்து வேல்முருகனும், ஜானகியும் இல்லாத நிலையில் கண்ணனை விரட்டிவிட்டுச் சென்றான்.
அன்று மதியம் கண்ணன் பள்ளிக்குச் செல்லாமல் கந்தசாமி செல்லும் இடத்தை நோட்டமிட்டான். அதற்கு முன்பாக வீட்டில் இருந்த அரிவாள் ஒன்றினை எடுத்து பையில் மறைத்து வைத்துக் கொண்டான். அன்று மாலை இருட்டும் நேரத்தில் குலதெய்வ வழிபாட்டிற்காக கந்தசாமி ஊரின் கடைசி எல்லையில் உள்ள கோயிலுக்குச் செல்லும் தகவல் கண்ணனுக்குக் கிடைத்தது.
“அவர் குடும்பத்தில் சிலர் மட்டுமே உடன் செல்வார்கள். அவன் குனிந்து சாமி கும்பிடும்போது அவன் கழுத்தை வெட்டி விட்டால்! அவன் செத்து விடுவான். பல்லி விழுந்த பலன்படி நானும் செத்துவிடுவேன். அம்மா, அப்பா நன்றாக இருக்கட்டும்’’ என முடிவு செய்து கொண்டான்.
அவன் எதிர்பார்த்தபடியே எல்லாம் நடந்தது. கந்தசாமி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தான். சற்று தூரத்திலிருந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்தான் கண்ணன். கந்தசாமி குனிந்து சாமி கும்பிட்டான். கண்ணன் விருட்டென ஓடி பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவன் கழுத்தைக் குறிபார்த்து வீசினான். ஆனால் அதைக் கவனித்துவிட்ட கந்தசாமி சட்டென விலகிவிட்டான். அரிவாள் அவன் கைவிரல்களில் பட்டு சில விரல்கள் துண்டாகித் தெறித்தன.
“ஆ’’வென அலறியபடியே கந்தசாமி, “பிடியுங்கள் அவனை’’ எனக் கத்தினான்.
சில நாட்கள் சென்றன. கண்ணன் போலீஸ் காவலில் இருந்தான். போலீஸ் விசாரணையில் கண்ணன் அனைத்தையும் ஒப்புக் கொண்டான். பல்லி விழுந்த பலனைக் கருத்தில் கொண்டும் அப்பா அம்மாவைக் கந்து வட்டிக் காரனிடமிருந்து காப்பாற்றவுமே இவ்வாறு செய்ததாகக் கூறினான். நம்மிடமுள்ள மூடநம்பிக்கை எவ்வாறு பிள்ளைகளைப் பாதிக்கிறது என்பதை வேல்முருகன், ஜானகி உட்பட அனைவரும் எண்ணி வருந்தினர்.