உலகத் தலைவர் பெரியாரின் விருப்பம் உலகெங்கும் நிறைவேற்றம்! முதல் பெண் விண்கல பைலட்

பிப்ரவரி 1-15

விண்வெளித் துறையில் முதல் பெண் விண்கல பைலட் மற்றும் விண்கல மையத்தின் முதல் பெண் படைத்தளபதி என்கிற பெருமைக்குரியவர் எலைன்ஸ் கொலின்ஸ்.

இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள எல்மிரா எனும் ஊரில் 19.11.1956இல் பிறந்தார்.

1978ஆம் ஆண்டு கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1989ஆம் ஆண்டில் விண்வெளி அமைப்பு மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

ஒக்லஹோமாவின் வான்ஸ் ஏர்ஃபோர்ஸ் பேஸில் அண்டர் கிராஜூவேட் பைலட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நான்கு பெண்களில் ஒருவராக எலைன்ஸ் கொலின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். பயிற்சிக்குப் பின் 1989ஆம் ஆண்டில், அமெரிக்க விமானப் படை டெஸ்ட் பைலட் பள்ளியில் பெண் பைலட்டாக எலைன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பைலட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து பயிற்சியை எடுத்துக்கொண்டார்.

1990ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆய்வு மய்யத்தில் விண்வெளி வீரராகச் சேர்ந்தார். விண்வெளியில் முதல் பெண் பைலட்டாக எலைன்ஸ் கொலின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் அனுப்பப்பட்ட சண்டே எஸ்_ரே STS-93 யுஎஸ் விண்கலத்திற்கு தளபதியாக பொறுப்பேற்று வழிநடத்தினார். இதன்மூலம் விண்வெளி மையத்தில் தளபதியாகப் பொறுப்பேற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார் எலைன்ஸ் கொலின்ஸ். விண்வெளித்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்தவர். 38 நாள்கள் 8 மணி நேரமும் 20 நிமிடங்களும் விண்வெளியில் இருந்து சாதனை படைத்தார். 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பெண்களால் விண் வெளிக்குச் செல்வது சாத்தியமா? என்று தன் மனதில் அய்யம் எழும்போதெல்லாம் அந்த அய்யத்தை அடுத்த நொடியே உடைத் தெறிந்து பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என உறுதி எடுத்துக் கொள்வாராம். உறுதி எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அதைச் சாதித்துக் காட்டியும் இருக்கிறார் எலைன்ஸ் கொலின்ஸ். “நாம் முதுமை அடைந்த பின், நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, இதை முயன்று பார்த்திருக்கலாமோ என்று ஒருபோதும் எண்ணி வருந்தக் கூடாது. வாழ்க்கையில் அனைத்து வாய்ப்புகளையும் முடியுமோ முடியாதோ என்கிற கவலையின்றி முயன்று பார்த்துவிட வேண்டும். அப்போதுதான் சாதனைகள் சாத்தியம்’’ என்கிறார் எலைன்ஸ் கொலின்ஸ்.

நாம் அண்ணாந்து பார்த்து வானத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது இவர் வானத்தையே அளந்து கொண்டிருந்தார். 2006இல் ஓய்வு பெற்றிருந்தாலும் விண்வெளித் துறையில் இன்றளவில் சாதித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களுக்கு முன்மாதிரியாய் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். எலைன்ஸ் கொலின்ஸ் சாதனைகளை வாழ்த்துவதோடு, அவர் வழியில் விண்வெளித் துறையில் சாதிக்கத் தயாராய் இருக்கும் பெண்களையும் வாழ்த்தி வரவேற்போம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *