நம் நாட்டு உச்சநீதிமன்றத்தில் இம்மாதம் இரண்டு முக்கியத் தீர்ப்புகள் வந்துள்ளன. அவை நமது சமூகத்தில் நிலவும் ஜாதி, வர்ணதர்மத்தினை அப்படியே படம்பிடித்துக் காட்டும் தீர்ப்புகள் ஆகும்!
ஒன்று, கேந்திரிய வித்தியாசாலைப் பள்ளியில் பணியில் சேர்ந்து வேலைபார்த்த ஒருவர், அதுவும் அப்பள்ளியின் துணை முதல்வராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய ‘அகர்வால்’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர். தாம் திருமணம் செய்து கொண்டது, தாழ்த்தப்பட்ட ‘தலித்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர் என்பதைக் காட்டி அப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியது செல்லாது என்றும், ஜாதி என்பது (இந்து மத தர்ம முறைப்படி) பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதும், ஜாதியை பிறப்பின் மூலம் தவிர வேறு எவ்வகையிலும் மாற்றிட முடியாது என்றும் ஓங்கி அடித்து அத்தீர்ப்பினை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சந்தான கவுடா ஆகிய இருவரும் கூறியுள்ளனர்!
இந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் ஆரிய பார்ப்பன சனாதன- வேத மதமான அதன் வர்ணாசிரமத்தின்படி பிறப்பினை வைத்துதான் ஜாதி நிர்ணயிக்கப்படுகிறது. மற்றபடி வேறு எந்த தகுதியினாலும் அல்ல. எவ்வகையிலும் ஒருவர் ‘ஹிந்துவாகப் பிறந்தவர்’ தனது ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுவது உலகில் வேறு எந்த சமூகத்திலும் உண்டா என்று கேட்டாரே தந்தை பெரியார் அதற்குப் பதில் உண்டா? ஒருவர் மதம் மாறிடலாம்; ஆனால், ஜாதியை மாற்றிட முடியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த மத மாற்றத்தால்கூட, கிறித்துவம், சீக்கியம் போன்றவற்றில் தனது ஜாதிய அடையாளத்தை அப்படியே வைத்துக் கொண்டுதான் மதமாற்றம் நடைபெற்றுள்ளது என்பதற்குச் சான்று, அந்த மதங்களைத் தழுவிய பிறகும்கூட அங்கே தங்கள் ஜாதி அடையாளத்தை, குறீயீட்டினை அழித்துக் கொள்ளாமல் பாதுகாப்பது, சுடுகாடு வரைக் கொண்டு செல்வது மிகுந்த வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதல்லவா?
ஆதியில் இத்தாலியிலிருந்து வந்து மதமாற்றம் செய்த கிறித்துவப் பாதிரிகளும் மதம் மாற்றத்திற்கு ஆசை காட்டும்போது, “உங்கள் ஜாதிக்குப் பங்கமிராது’’ என்று சில உயர்ஜாதிப் பார்ப்பனர்களை மதம் மாறச் செய்ய இப்படி ஓர் உத்தியைக் கையாண்டதினால்தான் இங்கே அங்கேயும் இந்தத் தொற்றுநோய் வந்தது! (இதற்கு அதாரம் உள்ளது)
ஜாதிக் கொடுமை, ஜாதிவெறி என்பது வேறு ஜாதிகளைச் சேர்ந்த இருவர், வயது வந்த இருவர் _ ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்துத் திருமணம் செய்தாலும் அந்த ஜாதியைச் சேர்ந்த பெற்றோர்கள்கூட, ஜாதிவெறியால் அவர்கள் முன்பிருந்த பாசத்தைக் கொன்றுவிட்டு பிறகு அப்பிள்ளைகளை _ பெண்களைக் கூலிப்படை மூலம் கொல்வதோ அல்லது ஜாதிப் பஞ்சாயத்துக்களில் தண்டனை தருவதோ கூடாது; இவை சட்டவிரோதம் என்றும் மற்றொரு தீர்ப்பில் கூறியதோடு, இந்த “கவுரவக்கொலை’’ காப்பஞ்சாயத்து (Cast Panchayats – ‘Kap Panchayats’) என்பவற்றைக் கண்டித்து, ஜாதி மறுத்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு தரவேண்டும். சட்டப் பாதுகாப்பு உட்பட என்று கருத்தடங்கிய தீர்ப்பும் (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றொரு நீதிபதி) தந்து வரலாறு படைத்துள்ளார்கள்.
‘ஹிந்து மதத்தைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே என்ற கிளிப்பிள்ளைக் கேள்விக்கு நமது பதில் _
கேள்வி மூலம்தான்!
ஜாதி, வர்ணதர்மம் இதில் _ வேத சனாதன பார்ப்பன மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தில் தத்துவப்படி உள்ளது?
ஹிந்து வேதங்களில் _ புருஷாந்தம் _ ரிக் வேதத்தில், கீதையில், மனுதர்மத்தில், இராமாயணத்தில், மஹாபாரதத்தில் _ மற்ற 18 புராணங்களில் எல்லாம் (இவைதான் ஜாதியைத் தூக்கிப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கும் அஸ்திவாரங்கள்) உள்ளதே!
‘ஹிந்து லா’வை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்டத்திலும் ஜாதி பாதுகாக்கப்படுகிறதே; அதைச் சுட்டிக்காட்டிதானே 60 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் 1958 நவம்பர் 26ஆம் தேதி அதன் நகலைக் கொளுத்தி, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் போராட்டத்தை நடத்தி, இன்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதன் மூலம், அதன் பேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடும் உணர்வை ஊட்டியுள்ளார்!
தந்தை பெரியாரின் பணியும், திராவிடர் கழகம் செய்யும் பணியும் எத்தகைய பிறவி பேதம் அகற்றும் பெரும் பணி என்பது இப்போது புரிகிறதா?
– கி.வீரமணி,
ஆசிரியர்.