தமிழை உயர்த்திப்பிடித்த தந்தை பெரியார் !

ஜனவரி 16-31

 

– நேயன்

 

பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களா?

பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும் போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக் கூடிய, நமக்குத் தொடர்பில்லாத, நமது முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள் இதில் கவனம் செலுத்த மாநாடு கூட்டி, இவற்றைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழிலே, தமிழ்மொழி இலக்கியத்திலே, தமிழர் நல்வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையுள்ள நம் செல்வர்களுக்கு (கல்வி நிலையம் நடத்துகின்றவர்களுக்கு) இந்தக் காரியமெல்லாம் முக்கிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.

நிலைகுலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, உணர்ச்சி ஊட்டி அவர்களுக்குத் தன்மான உணர்வும், விடுதலை உணர்வும் ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களை (அவர்கள் படித்தவர்களானாலும், பண்டிதர்க ளானாலும், மந்திரி, கவர்னர், வைசிராய், நிர்வாக சபை மெம்பர் ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தில் மரக்கட்டையாக்கிவிட்டு) தமிழர் அல்லாதவர்கள் அடிமைப்படுத்திச் சுரண்டிக் கொள்ளை கொள்வதைத் தடுக்க வேண்டாமா?

தமிழ் மக்களின் நலத்தில் கவலை யுள்ளவர்கள் எது எதற்கு என்றுதான் அழுவது? தமிழர்க்குத் தொண்டாற்றுவது என்றால் என்னதான் அர்த்தம்? ஆகவே, பிள்ளைகளில் மூடக்கருத்துக்களை, தமிழர் விரோதக் கருத்துக்களை நீக்கி, அறிவு வளர்ச்சிக்கு, மான உணர்ச்சிக்கு உகந்த பாடங்களை வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நமக்குச் சுதந்திரம் உள்ள கல்வி இலாகாவில் இம்மாற்றம் செய்யாமல் வேறு எதில் விடுதலை பெறப் போகிறோம்?

(‘குடிஅரசு’ – 12.02.1944)

“நம்முடைய தமிழ்ப்புலவர், பண்டிதர், தமிழறிஞர்களுக்கு இலக்கிய, இலக்கண அறிவு இருக்க முடியுமே தவிர உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம் என்னும் துறைகளில் அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா? இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால் அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிந்திக்கட்டும். சமூகப் பயனுள்ள காரியம் ஏதாவது அவர்கள் செய்கிறார்களா? செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோ அவர்களுக்கு இருக்கிறதா? (புராண, இலக்கிய அறிவு தவிர வேறு துறை அறிவு பெற்றுள்ளார்களா?)

புலவன், வித்வான் என்றால் அறிவுடையவன் என்பதாகும். நம் புலவர்களுக்குப் பொது அறிவோ, பொதுமக்களுக்கு வழி காட்டும் திறமையோ, முன்னேற்றத்திற்கு வழிகோலவோ, புதுமைகள் செய்யவோ இன்றைய புலவர்களுக்குப் புலமை உள்ளதா? அதற்கு அவர்களுக்குப் பயிற்சி உண்டா?……

புலவர்கள் அல்லது அறிஞர்கள் என்பவர்களுக்கு உலக மாறுபாட்டை அறிந்து, அதற்கேற்ப வாழ்வியலை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவர்கள் கடமையாகும். ஆனால், நம் புலவர்கள், பண்டிதர்கள் மாறுபாட்டை விரும்பாதவர்கள். 3000 வருஷத்திற்கு முன்பிருந்ததை, மூடச் செய்திகளைப் பரப்பவும், நிலைநாட்டவும் முயற்சிப்பவர்கள்.

இப்படிப்பட்டக் கல்வியைக் கல்வியாளர் களைக் கொண்ட நாடோ, மக்களோ எவ்வாறு முன்னேற்றமடைய முடியும்? புலவர்களைக் குறை கூறுவதாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாக அவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறோம் என்று கொள்ளவேண்டும்.இளம் புலவர்கள் சிலர் நம் கருத்தை ஏற்றுச் சமுதாய மாற்றத்திற்குப் பாடுபடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும், இன்னும் துணிவாய் வெளியில் வர வேண்டும்.

(‘குடிஅரசு’ – 15.01.1944)

மேலும்,

“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்.’’

மொழியைப் பற்றிய தெளிவான சிந்தனையாக இது விளங்குகின்றது; உலகில் மக்கள் வாழ்க்கையென்பது போட்டியும் போராட்டமும் நிறைந்தது என்பதை யாவரும் அறிகின்றோம்.

இந்தப் போட்டிப் போராட்ட வாழ்வில் வெற்றியோ, தோல்வியோ அடைவதற்கு மொழி ஒரு பெரிய காரணமாக இருக்கின்றது. இங்குப் போராட்டம் என்பது ஆயுதங்கள் கொண்டு சண்டையிடுவது மட்டும் இல்லை. ஆனால், அறிவு கொண்டு வாய்ப்புகளை மற்றவருக்கு விடாமல் உள்ள வாய்ப்புகள் அவ்வளவையும் தமக்கே பயன்படுத்திக் கொள்ளுதலும் போராட்டம்தான். தொடர்ந்து அதனையே நிலைபெறச் செய்வது என்பதும் இப்போராட்டத்தின் வெற்றிதான். சான்றாக, நம் நாட்டுப் பார்ப்பனர் இந்தியா முழுமையிலும் கல்வி வாய்ப்புகளையும் உத்தியோக வாய்ப்புகளையும் தங்களுடையதாகத் தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஆயுதம் தாங்கிப் போர் புரிந்து பெற்ற வெற்றியல்ல. இது அறிவு அடிப்படையில் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் பயன்படுத்தி வென்ற வெற்றியாகும். இன்றும் அந்த வெற்றியை அடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தில் உள்ள உண்மைகளை நன்குணர்ந்த நம் பெரியார், தம்முடைய அறிவார்ந்த போராட்டத்தால் வென்று, மொழி என்பது (கல்வி என்பது) உலகில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை வெல்லவும், வீழ்த்தவும் அதை ஒரு கருவியாய்ப் பயன்படுவதால் அதை ஒரு கருவியாய் அவ்வப்போது புதுப்பித்துப் பயன்படுத்த வேண்டும். மாறாக,  பூசிப்பதற் குரியதாகக் கொள்ளக் கூடாது என்றார். வாழ்வில் பல துறைகட்குப் பயன்படும் அறிவியல், பொறியியல், கணிதம், சட்டம் போன்றவை தமிழில் நிறைய ஆக்கப்பட வேண்டும், மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழால் இப்போட்டி உலகில் போட்டியிட்டு நிலைக்கமுடியும் என்றார் பெரியார்.

தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை.

1.            தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது என்று வின்ஸ்ஸோ கூறுகிறார்.

2.            கால்டுவெல், தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

3.            சிலேட்டர் என்பவர், திராவிட மொழி எல்லாவற்றுள்ளும் மக்கள் பேசும் மொழிக்கு உரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ் மொழியே; தக்க அமைப்புடையதும் தமிழ்மொழியே என்கிறார்.

4.            மர்டாக் என்பவர், துராணிய மொழிகள் பலவற்றுள்ளும் மிகச் சீரிய மொழியாயும், அழகிய இலக்கியங்களைப் பொருந்தப் பெற்றதாயும் விளங்குவது தமிழே என்றும் கூறியுள்ளார்.

தாய்மொழியிடத்து அன்பில்லாதவர்களுக்குத் தாய்நாட்டின் மீதும் அன்பிராது. எனவே, ஒவ்வொரு தமிழ் மாணவனும் தமிழ் கற்க வேண்டும்.

ஜாதிபேதம் தமிழரிடம் இல்லை. எகிப்து, கிரேக்கம், ரோம் முதலிய நாடுகளோடு அன்றைக்கே வணிகத் தொடர்பு கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்ப் பெண்களும் கல்வியில் புலமை பெற்று விளங்கினர்.

தமிழ் மன்னர்கள் நீதியோடு ஆண்டனர்.

தமிழர்கள் அஞ்சாது வீரப்போர் புரியும் ஆற்றல் உள்ளவர்கள்.

நம் தாய்நாட்டுத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழைக் கட்டாயம் கற்று சிறப்புப் புலமை அடைய வேண்டும். இதனால் தமிழ் வளர்ச்சி அடையும், தாய் நாடான தமிழ்நாடு சிறப்புற்றோங்கும்.                                                (‘குடிஅரசு’ _ 18.12.1943)

என்று தமிழ் தமிழர் மேன்மையை எடுத்தியம்பும் கட்டுரையைக் குடிஅரசு இதழில் வெளியிட்ட பெரியாரா தமிழுக்கும், தமிழர்க்கும் எதிரானவர்? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

(தொடரும்…)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *