– ஆறு.கலைச்செல்வன்
மார்கழி மாதம் இறுதிநாள் போகிப் பண்டிகை. இளவரசன் அதிகாலையில் எழுந்து தோட்டத்திற்குச் சென்றான். கிடுகிடுவென வேப்ப மரத்தில் ஏறி வேப்பிலைக் கொத்துக்களை ஒடித்துப் போட்டான். அவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கட்டிக்கொண்டு வயலுக்குப் புறப்பட்டான். அவனுடன் அதே போன்று வேப்பிலைக் கொத்துகளுடன் பலர் இணைந்து கொண்டனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிவதற்கு முன்பாகவே ஒவ்வொருவரும் தங்கள் வயல்களில் வேப்பிலைக் கொத்துகளைப் போட்டனர்.
“டேய் ராசு, வேப்பிலையை சனி மூலையில் போடுடா. எங்க போடறான் பாரு’’ என்று அவனது நண்பன் ராசுவை திட்டினான் இளவரசன்.
வயலில் சனி மூலையில் தான் வேப்பிலையைப் போட வேண்டுமாம். ராசு வேற இடத்தில் போட்டு விட்டானாம். அதனால்தான் ராசுவைத் திட்டினான் இளவரசன்.
அவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு வரும் போது வழியில் எல்லா வயல்களையும் பார்த்துக் கொண்டே வந்தனர். எல்லா வயல் களிலும் வேப்பிலைக் கொத்துக்கள் போடப் பட்டிருந்தன. ஆனால், ஒரு வயலில் மட்டும் போடப்படவில்லை.
“டேய் ராசு, பார்த்தியாடா. இந்தக் கொல்லையில் மட்டும் வேப்பிலை போடப்படல. இது யாருடைய கொல்லை தெரியுமா?’’ என்று ராசுவைக் கேட்டான் இளவரசன்.
“தெரியாமல் என்ன! அதியமான் கொல்லைதான். அவன் எப்பவுமே வேப்பிலை போட மாட்டான். தரித்திரியம் பிடித்தவன். அவனுக்குத் தரித்திரியம்தான் வந்து சேரும்’’ என்று பதிலளித்தான் ராசு.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டே வரப்பு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது சற்று தூரத்தில் அதியமான் தனது வயலைப் பார்க்க வந்து கொண்டிருந்தான்.
“அதோ பார், அதியமான் வர்ரான். அவன் கையில வேப்பிலைக் கொத்து இல்லை பார். திமிர் பிடித்தவன். சாமியை அவமானப் படுத்துகிறான்’’ என்று படபடத்தான் இளவரசன்.
அப்போது அதியமான் அருகில் வந்துவிடவே அவனிடமே தன் எரிச்சலைக் கொட்டினான் இளவரசன்.
“அதியமான், நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா? உன் கொல்லையில் ஏன் வேப்பிலை போடல? எல்லா கொல்லைக்காரங்களும் போட்டாதான் ஆண்டவன் புண்ணியத்தில விளைச்சல் நல்லாயிருக்கும். இல்லாட்டி சாமி குத்தம் வந்திடும்’’ என்றான் இளவரசன்.
“இளவரசா! நீ இப்பத்தான் வேப்பங்கொத்து போடுற. ஆனா, நான் ஏர் ஓட்டும்போதே என் தோப்பில் இருந்த வேப்ப மரங்களைக் கழிச்சி தழைகளை எடுத்து வந்து கொல்லையில் போட்டு மிதிச்சி விட்டேன். உனக்குத் தெரியாதா?’’
“அது வேற அதியமான். இன்னைக்கு போகிப் பண்டிகை. அதனால போட்டே ஆகணும். இல்லாட்டி சாமி குத்தம் வந்திடாதா?’’
“ஒரு குத்தமும் வராது. வந்தா நான் பார்த்துக்கிறேன். சரி, எனக்கு நேரமாவுது. நாளைக்குத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடணும். நிறைய வேலை இருக்கு’’ என்றபடி நடக்க ஆரம்பித்தான் அதியமான்.
“நீ எப்பவுமே இப்படி எடக்கு முடக்காத்தான் பேசிக்கிட்டு இருக்க. சித்திரை மாதம்தானே தமிழ்ப் புத்தாண்டு. நீ நாளைக்குன்னு சொல்றீயே!’’ என்று கோபத்துடன் கேட்டான் இளவரசன்.
“தமிழ் மக்களுக்கு நாளைதான் தமிழ்ப் புத்தாண்டு பாரதிதாசன் கவிதையைப் படிச்சிப் பாரு. நான் வர்ரேன்’’ என்று கூறியபடி விடுவிடுவென நடந்தான் அதியமான்.
மாதங்கள் கடந்தன. ஆனி மாதம் வந்தது. குருவைச் சாகுபடிக்கு வயலைத் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டான் அதியமான். குப்பை எருவை நிறையக் கொண்டுவந்து கொட்டினான். வயலுக்கு ஆழ்கிணறு மூலம் நீர் பாய்ச்சி முதல் நீர் விடும் நிகழ்வான சேடை வைத்தல் என்ற பணியினைச் செய்தான். தோட்டம், வயல்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இருந்த மரங்களில் தழைகளைக் கழித்து வந்து வயலில் போட்டு மிதித்து ஏர் உழுதான். இதனால் வயலுக்குத் தேவையான பசுந்தாள் உரம் கிடைத்தது. பூச்சிகள் அண்டாமல் இருக்க வேப்பம் புண்ணாக்கையும் தெளித்தான். சில நாட்களில் வாய்க்காலில் தண்ணீரும் வந்தது. அதியமான் யாரையும் எதிர்பார்க்க வில்லை. விதை நெல்லைத் தண்ணீரில் ஊறவைத்தான். மறுநாள் விதை நெல் மூட்டைகளை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து வெயிலில் போட்டான்.
பகலில் நாற்றங்காலை நன்கு நிரவி நீர்பாய்ச்சித் தயாராக வைத்துக்கொண்டான். மாலை விதை நெல் நன்றாக முளை விட்டிருந்தது.
விதை நெல்லை அள்ளி நாற்றங்காலில் தெளிக்க ஆரம்பித்தான்.
அப்போது அங்கு வந்த இளவரசன் கடுமையான குரலில் அதியமானைத் திட்டினான். அவனுடன் மேலும் சிலரும் சேர்ந்து கொண்டனர்.
“டேய் அதியமான். என்னடா நினைச்சிகிட்ட. விதைக்கிறதை நிறுத்துடா’’ எனக் கூவிக்கொண்டு அதியமானை விதைக்க விடாமல் தடுத்தான்.
“ஏன்? ஏன் விதைக்கக் கூடாதுன்னு சொல்றே?’’ என்றான் அதியமான்.
“இன்று என்ன கிழமை அதியமான்?’’
“ஞாயிறு’’
“நேரமென்ன?’’
“சாயந்திரம் 5 மணி’’
“இது ராகுகாலம் இல்லையா? இப்ப போய் விதைக்கிறீயே. இது அடுக்குமா? இது சரியா?’’ என படபடத்தான் இளவரசன்.
“உனக்கு ஆகாட்டி எனக்குக் கவலை இல்லை. எனக்கு இன்னைக்குத்தான் வசதிப்பட்டது. அதனால் நான் விதைக்கிறேன். உன் வேலையைப் பார்’’ என்று கூறியபடி பணியைத் தொடர்ந்தான் அதிகயமான்.
ஆனால் இளவரசன் விடவில்லை. அருகில் இருந்தவர்களிடம் சொல்லி நியாயம் கேட்டான்.
“இப்ப ராகுகாலம் மட்டும் இல்லை. அஷ்டமியும் இன்னைக்குத்தான். எப்படி விதைக்கலாம்? வேடிக்கை பாக்குறீங்களே! நீங்களும் சொல்லுங்க’’ என்று மற்றவர்களையும் உசுப்பிவிட்டான் இளவரசன்.
ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், யார் பேச்சையும் கேளாமல் விதைத்து முடித்தான் அதியமான்.
அதியமான் நாற்றுவிட்டு பதினைந்து நாள்களுக்குப் பின்னரே ஊரில் மற்றவர்கள் வயலைச் சீர்திருத்த ஆரம்பித்தனர்.
இந்தச் சாகுபடியில் எப்படியாவது அதியமானை முறியடித்து அவனைவிட ஏக்கருக்குப் பத்து மூட்டையாவது அதிகமாக நெல் விளைவிக்க வேண்டுமென இளவரசன் தீர்மானித்தான். ஆனால், பணத்தை முறையாக செலவு செய்யாமல் வீண் செலவு செய்தான். கையில் பணமில்லாத நிலையில் பலரிடம் கடனும் வாங்கினான். வயலை உழவும், விதை நெல் மூட்டைகளைத் தணணீரில் போடவும் நல்ல நாள் பார்த்தான். அதற்காக அவன் சில நாட்கள் காக்க வேண்டியதாயிற்று. ஏறக்குறைய இருபது நாள்கள் கழித்தே விதை நெல் மூட்டைகளை தண்ணீரில் போட்டான். ஊரில் மற்றவர்களும் அவ்வாறே காலதாமதம் செய்தனர்.
விதைக்கும் நாளன்று நிறையச் செலவுகள் செய்து சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்தான். தேங்காய்களை உடைத்துத் தள்ளினான். இராகு காலம் முடியும் வரை காத்திருந்து விதை நெல்லை வயலில் தெளித்தான்.
நடவு செய்யும் பணியையும் மற்றவர்களை விட முன்னதாகச் செய்து முடித்தான் அதியமான். பூச்சிகளின் தாக்கமும் குறைவாக காணப்பட்டு பயிர்கள் செழித்து வளர்ந்தன.
அறுவடை தினமும் வந்தது. தனக்கு வசதியான நாளில் அறுவடையை செய்து முடித்தான். பொன்னிறத்தில் நெல்மணிகள் ஜொலித்தன. உடன் விற்பனையாகியதால் கை நிறைய பணம் கிடைத்தது.
இருபது நாள்களுக்குப் பிறகே ஊரில் இளவரசன் உள்பட மற்றவர்களின் பயிர்கள் அறுவடைக்குத் தயாராயின. பலர் அறுவடைப் பணிகளைத் தொடங்கினர். ஆனால், இளவரசன் அதற்கும் நல்ல நாள் பார்த்தான். நல்ல நாள் வருவதற்குள் சில நாள்கள் தாமதப்பட்டது. அப்போதும் சிறப்புப் பூஜைகள் செய்து நிறையச் செலவுகள் செய்தான். கதிர் அறுக்கும் அரிவாள்களுக்கு பட்டை போட்டு குங்குமம் வைத்துப் படைத்தான்.
ஒரு நல்ல நாளில் அறுவடையைத் தொடங்கினான். ஆனால், அறுவடை நடந்து கொண்டிருக்கும்போதே மழை பிடித்துக் கொண்டது. மழைக்காலமல்லவா! மழை விடவில்லை. அறுவடை பாதியில் நின்றது.
இளவரசன் மனம் கலங்கினான். அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் மழை நீரில் மிதந்தன. அடுத்த நாள் நெல் மணிகள் முளைவிடவும் ஆரம்பித்துவிட்டன. மழை ஓரளவு விட்டபின் அரையும் குறையுமாக நெல்லை சேகரித்து வீட்டிற்குக் கொண்டு வந்தான்.
ஈர நெல் உடனடியாக விற்பனையாகவில்லை. விலை குறைவாகவே விற்பனை செய்தான். இதனால் அவனுக்குக் கடும் நட்டம் ஏற்பட்டது. பெரும் கடனாளியானான்.
அதற்குள் சம்பா பயிர் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தான் அதியமான். ஒரு நாள் இளவரசன் அவனை நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டது. இளவரசன் தலையைக் குனிந்து கொண்டான். அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
“எனக்கு குருவை சாகுபடியில் பெருத்த நட்டம் ஏற்பட்டு விட்டது’’ என்று தயங்கியபடியே கூறினான் இளவரசன்.
“எனக்குத் தெரியும். நாம் விவசாயிகள். மனம் தளர வேண்டாம். அடுத்த போகத்தில் நட்டத்தை சரி செய்து விடலாம்’’ எனத் தைரியம் சொன்னான் அதியமான்.
“எப்படி?’’ எனக் கேட்டான் இளவரசன்.
“இளவரசா! விவசாயத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணியைத் தொடங்க வேண்டும். “பருவத்தே பயிர் செய்’’ என்பதை நினைவில் கொண்டு நாள் நட்சத்திரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பூசைக்காக செலவு செய்வது பெரும் தவறு. விளைபொருளை வீணாக்கக் கூடாது. தேங்காய்த் தண்ணீரில் எவ்வளவு சத்து உள்ளது தெரியுமா? உடைத்துத் தள்ளினாயே! நாம் விளைவித்த பொருட்களை நாமே வீணாக்கலாமா? அதேபோல் எலுமிச்சம் பழம், பூசணிக்காய். அறிவியல் முறைப்படி விவசாயம் செய்ய வேண்டும். முக்கியமாக இயற்கை நமக்கு எப்போது சாதகமாக இருக்கிறதோ அப்போது அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல நாள் பார்ப்பது, பூசை செய்வது போன்ற செயல்களால் நாள்களைக் கடத்தி இயற்கையை நாம் விரோதியாக்கிக் கொள்ளக் கூடாது. இதைப் பின்பற்றினால் நீயும் லாபம் காணலாம். ஆகவே, “இயற்கையைத் துணை கொள்’’ என்று நீண்ட விளக்கத்தைக் கூறினான் அதியமான்.
அடுத்த நாளே அதாவது அஷ்டமி என்கிற நாளில் சம்பாப் பருவப் பணிகளைத் தொடங்கினான் இளவரசன்.