இளங்கதிர் தொடுவா னத்தே
எழுந்தது! வாழ்க! மக்கள்
உளமெலாம் உடல மெல்லாம்
உவகையின் ஆட்சி! மேட்டுக்
களமெலாம் செந்நெல்! பொய்கைக்
கரையெலாம் அலைமு ழக்கம்!
வளமெலாம் பெருக்கி இன்று
வந்த தைத் திங்கள் வாழ்க!
புத்தொளி விண்ணில் எங்கும்
புகுந்தது! புகுந்த தின்பம்!
கொத்தெலாம் காய்கள்! வீட்டுக்
கூரையின் மேலும் காய்கள்!
எத்திசை எதிர்ப்பட் டாலும்
பழக்காடு! பூச்சி ரிப்பே!
புத்தாண்டின் முதல்நாள் இன்பப்
பொன்னாளை வாழ்த்தாய் தம்பி!
கார்தந்த அரிசி, ஆப்பால்,
கழைதந்த கட்டி, ஏலம்,
நீரொடு கலந்து பானை
நெடுகிலும் வழிந்து பொங்க
ஊரினில் இல்லம் தோறும்
“பொங்கலோ! பொங்கல்!’’ ஓசை
ஆர்ப்பினில் அடடா! உள்ளம்
அடைகின்ற மகிழ்ச்சி என்னே!
நாடெலாம் இன்பம்! வண்ண
நறுமலர் பூக்கள் பச்சைக்
காடெலாம் இன்பம்! ஆற்றங்
கரையெலாம் இன்பம்! கொல்லை
மேடெலாம் இன்பம்! வான
வெளியெலாம் இன்பம்! பெண்கள்
ஆடலும் பண்ணும் கேட்க
இன்பத்தை அடையும் வீடே!
வழங்கினர் வரிசை வாழ்த்து
தமிழர்கள் ஒன்றாய்க் கூட்டி
“அழிந்ததாய் எண்ணும் இன்பத்
திராவிடம் அடைவோம்’’ என்றே
முழங்கினர்! பகைப்பு லத்தார்
முகஞ்சோர்ந்தார்; ஆண்டோர் முன்னாள்
இழந்ததை மீண்டும் பெற்றே
இன்பத்தில் திளைக்க நீடே!!
– கவிஞர் வாணிதாசன்
====================
‘இனமான’ப் பொங்கல்
‘தைத்திங்கள்’ முதல் நாள்!
தமிழனுக்கு அதுவே புத்தாண்டு!
கழனியிலே நெல்விளைக்கும்
கதிர், மாடு உழவர்களைப்
போற்றுவோம்.
‘வாழும்நெறி’ தந்த – நம்
வள்ளுவரை ஏற்றுவோம்!
இஞ்சியோடு மஞ்சள் கொஞ்சிட
புதுப்பானையிலே
புத்தரிசி, வெல்லமிட்டு
பொங்கலோடு நாமும்
மகிழ்வால் பொங்குவோம்!
‘பகுத்தறிவு’ பொங்கும்
‘இனமான’ப் பொங்கல்
சமத்துவ சமூகநீதிப் பொங்கலாய்
எங்கும் பொங்கட்டும்!
ஏற்றம் வாழ்வில் தங்கட்டும்!
– கு.நா.இராமண்ணா