திராவிடர் திருநாள்

ஜனவரி 16-31

 
– எழுத்தாளர் பிரபாகரன்

 

 

‘தமிழ்’ என்பதும், ‘தமிழர் கழகம் ‘ என்பதும் மொழிப் போராட்டத்திற்குதான் பயன்படுமே யொழிய இனப்போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்திதான் நம்மை வெற்றி கொண்டார்கள்; நம் கலாச்சாரத்தைத் தடுத்துதான் நம்மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால் தான் அவர்களுக்குக் கீழான மக்களாக அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம். எனவே, அக்கலாச்சாரத் திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. கலாச்சாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றிபெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவர் களாவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப் பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றி லிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்றுவிடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடமாட்டா.” தந்தை பெரியார் (விடுதலை ‘  27.01.1950)

“தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்” கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தை முதல் நாள் அன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவினை சென்னையில் நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த விழாவினை, “திராவிடர் திருநாள்” என்று தலைப்பிட்டு கலை இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அறிஞர்களின் கருத்துரைகள் என்று மூன்று நாள் விழாவாக, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிராக மாற்று பண்பாட்டு நிகழ்வாகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இதுபோலவே திராவிடர் இயக்கத் தோழர்கள், பெரியாரின் தொண்டர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழர் திருநாள்” என்று இதுநாள்வரை சொல்லிவந்த பொங்கல் விழாவை “திராவிடர் திருநாள்” என்று சொல்லலாமா என்று சில தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் ஆங்காங்கே பொருமிக் கொண்டிருக்கிறார்கள். நம் மதிப்பிற்குரிய சில தமிழ்த்தேசிய நண்பர்களும் ஃபேஸ்புக்கில் இதே கருத்தை எழுதியிருக் கிறார்கள். திராவிடர் திருநாள் என்றால் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலை யாளிகளும் பொங்கல் கொண்டாடுகிறார்களா என்ற புத்திசாலித்தனமான கேள்வியை, வழக்கமாக நுனிப்புல் மேய்பவரின் சாமர்த்தியத்தோடு கேட்டிருக்கிறார்கள்.

“திராவிடர்” என்பது பார்ப்பனரல்லாதவர் என்பதைக் குறிக்கும் அடையாளச் சொல். ஆரியர் பண்பாட்டு படையெடுப்பால் வீழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல் என்று பல ஆயிரம் முறை பெரியாரும் பெரியார் இயக்கப் பற்றாளர்களும் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் மானுடவியலாளர்களும், வரலாற்று அறிஞர்களும் ஆரியர்களின் படையெடுப்பால் அவர்களின் பண்பாட்டு ஊடுருவலால் வீழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாக “திராவிடர்” என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் ஆரியர் என்பதன் எதிர்ச்சொல் திராவிடர் என்பதுதான் நாம் இன்றும் பயன்பாட்டில் கொண்டிருக்கும் பொருள்.

உண்மையில் “திராவிடர்” என்ற அடையாளத்தை எதிர்க்க வேண்டியது தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் ஆரிய அடிப்படைவாதிகள்தான். ஆனால் ஆரிய அடிப்படைவாதிகள் எப்போதும் நேரடியாக மோதமாட்டார்கள், அவர்கள் நம்மில் இருந்தே நமக்கு எதிரிகளை உருவாக்குவார்கள் என்பதை வரலாறு நெடுக நாம் கண்டிருக்கிறோம்.

இந்திய அளவில் “ஆரியர்” என்ற சொல்லாடலை அதன் வரலாற்றுப் பொருளை எதிர்ப்பதற்கு, “ஆரியர்” படையெடுப்பு என்ற ஒன்று நிகழவேயில்லை, ஆரியர்  திராவிடர் என்ற பிரிவினையை ஆங்கிலேயர்கள் பொய்யாகச் சித்தரித்தார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள், நம்மவர்கள் சிலரையும் அப்படிச் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக ஆரியர்களுக்குத் தீராப் பகையாக எப்போதும் இருக்கும் தமிழகத்தில், ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான உணர்வை, ஆரியப் பண்பாட்டிற்கு எதிரான உணர்வை திராவிடர் என்ற அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைத்துக் கூர்மைபடுத்தி, கணிசமான அளவிற்கு வெற்றி களையும் பெற்றிருக்கிறோம்.

“திராவிடர்” என்ற பண்பாட்டு அடையா ளத்திற்கு எதிராகப் பல முறை முயன்றும் தோற்றுப்போன ஆரிய கைக்கூலிகள், 2009இல் ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் “தமிழர்” என்ற அரசியல் அடையாள எழுச்சியைப் பயன்படுத்தித் தங்கள் விஷ/விஷமப் பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்ற நப்பாசையில் மீண்டும் தூசிதட்டி கிளம்பியிருக்கிறார்கள். அந்தப் பிரச்சாரத்திற்குப் பலியான சிலர்தான் இப்போது “திராவிடர் திருநாள்” என்று பொங்கலை சொல்லாமா என்று கூச்சல் எழுப்புகிறார்கள்.

பொங்கல் தமிழர் திருநாள் என்கிறார்களே அந்த முழக்கம் எப்படி ஏற்பட்டது, சாதாரணமாக வந்துவிட்டதா?

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஆரிய பண்பாட்டு படையெடுப்பிற்கு எதிராக நடத்திய கருத்துப்போரின் விளைவுதானே தமிழர் திருநாள் என்கிற முழக்கமே!

தந்தை பெரியாரும், பல ஆயிரம் திராவிடர் இயக்கத் தொண்டர்களும் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், இன்றைக்குத் தமிழர் திருநாள் என்ற ஒன்றிற்கான தேவை எங்கிருந்து வந்தது?

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற வரலாற்று உண்மையை, சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பது ஆரிய சூழ்ச்சி என்கிற உண்மையை, கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழர்களிடையே பரப்புரை செய்துவருவது திராவிடர் இயக்க தொண்டர்கள் தானே? கலைஞர் கருணாநிதியை எதிர்ப்பதைப் போல பாவனை செய்துகொண்டே திராவிடர் இயக்கத்தின் மீது அவதூறுகளைப் பரப்புகின்ற தமிழ்த்தேசியர்கள், அதே கலைஞர்தான் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அரசாணை பிறப்பித்து, ஆரிய சூழ்ச்சியை முறியடிக்க முயன்றார். தமிழ்த்தேசிய அமைப்புகள் சிலவற்றின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த பார்ப்பன ஜெயலலிதா, மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது தமிழறிஞர்கள் , தமிழ்த் தேசியவாதிகள் ஆற்றிய எதிர்வினை என்ன? தை முதல் நாளுக்கும் சித்திரை முதல் நாளுக்கும் இடையே நடப்பது திராவிட ஆரியப் போர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், அரசு அலுவலகங்களில், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் “சமத்துவப் பொங்கல்” என்ற பெயரில் ஜாதி மதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் திரட்டி, சமத்துவத்தை வலியுறுத்துகிற விழாவாகப் பொங்கலைக் கொண்டாடவேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவந்ததே, அதைப் பார்ப்பன ஜெயாவின் அரசு கைவிட்டது ஏன்? அதை மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தமிழ்த்தேசிய அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? அரசு அலுவல கங்களில் ஆரியப் பண்டிகையான ஆயுத பூஜையை நடத்தக் கூடாது என்று திராவிடர் இயக்கம்தானே போராடுகிறது? எங்கே போனார்கள் தமிழ்த்தேசிய மெய்யன்பர்கள்? பொங்கலுக்கும் ஆயுத பூஜைக்கும் இடையே நடப்பது திராவிட ஆரிய பண்பாட்டுப் போர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

தமிழர் திருநாளான பொங்கல் அன்று, பத்திரிக்கையிலும் தொலைக்காட்சியிலும் சங்கரமடத்து ஆட்கள் சங்கராந்தி வாழ்த்துச் சொல்கிறார்களே, இன்றைக்கு நம்மோடு மல்லுக்கு நிற்கிற தமிழ்த்தேசிய நண்பர்கள் சங்கராந்திக்கு எதிராக சின்ன சத்தம்கூடப் போடுவதில்லையே, ஏன்? சங்கராந்திக்குப் பின்னால் உள்ள ஆரிய புராணக் குப்பையை எரிக்கக்கூடிய மருந்து பெரியாரின் திராவிடர் இயக்கத்திடம்தானே உள்ளது? பொங்கலுக்கும் சங்கராந்திக்கும் இடையே நடப்பது திராவிட ஆரியப் போர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பது, இந்துமதக் கடவுள்களை வணங்குவது போலவே பொங்கல் சடங்குகளை செய்வது என்று கிட்டத்தட்ட இந்துமத விழாவாகவே பொங்கல்விழா மாறிவிட்டதே, இதை ஏன் எந்த தமிழ்த் தேசியவாதிகளும் கேட்பதில்லை. தமிழர் திருநாள் என்பது இந்துமதத் திருநாளாக மாறி விட்டதைப் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை. ஆனால் இந்துமத எதிர்ப்புணர்வோடு “திராவிடர் திருநாள்” என்று சொன்னால் அது கெட்ட வார்த்தையா? பொங்கல் விழாவில் இருந்து ஆரிய இந்துமத சடங்குகளை வெளியேற்ற தமிழர் திருநாள் என்பது பயன்படுமா? திராவிடர் திருநாள் என்பது பயன்படுமா?

பொங்கல் விழா முற்றும் முழுதான தமிழர்களின் திருவிழாவாக ஆக வேண்டு-மென்றால், தமிழர்களை ஆரிய/பார்ப்பன பண்டிகைகளைக் கைவிடச் செய்யுங்கள். வினாயகன் ஊர்வலம், அட்சய திருதியை போன்ற புதிய ஆபத்துகளைத் தடுத்து நிறுத்துங்கள். தேவர் ஜெயந்தி, வன்னியர்களின் சித்திரா பௌர்ணமி விழா போன்ற தமிழர் ஒற்றுமைக்கு எதிரான பேராபத்துகளை உயிரைக் கொடுத்தாவது முறியடியுங்கள்!

இதையெல்லாம் செய்யாமல் தமிழர் திருநாள் பொங்கல் என்பதெல்லாம் தமிழ் உணர்வை சொறிந்து கொள்வதற்குத்தான் பயன்படுமே யல்லாமல், உண்மையான தமிழர் திருவிழா ஆகாது!

“பொங்கல் பண்டிகையினால் நமக்கு, நம் தமிழர் சமுதாயத்துக்கு பொதுவில் ஏற்பட்ட பயன், நம்மவர்கள் ஆரியத்தை வெறுக்கும் உணர்ச்சிக்கு ஆக பொங்கலைப் பயன்படுத்திக் கொண்டதுதான் என்பேன்’’ என்றார் பெரியார். அந்த உணர்வை உருவாக்குவதை விடுத்து, “திராவிடர்’’ வெறுப்பை உமிழ்ந்து ஆரியத்திற்கு துணை நிற்பது அறியாமையாகும்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *