மனிதக் கழிவகற்றுவோர் மரணம் தமிழகம் முதலிடம்!

ஜனவரி 16-31

– கெ.நா.சாமி

“செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்றுவரும் இக்காலகட்டத்தில் மனிதன் மலத்தை மனிதன் சுமப்பதா? தேவை இதற்கொரு முற்றுப்புள்ளி’’ என்ற தலைப்பில் 3.1.2018 அன்றைய ‘விடுதலை’ நாளிதழில் தமிழர் தலைவர், ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் மனித உரிமையை வலியுறுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். அன்றைய ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழில் வெளிவந்திருந்த ஒரு செய்தியே அவருடைய உள்ளக் கொதிப்புக்குக் காரணமாகி அந்தக் கொதிப்பின் வெளிப்பாடே அந்த அறிக்கை.

இந்தியா விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்று 71ஆம் ஆண்டும் கடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கால கட்டத்திலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் கேவலத்தை நிறுத்தவில்லை என்பது மட்டுமல்ல. அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளையும் அரசுகள் துச்சமென மதிக்கின்ற சூழல், மனித உரிமைகளையும், மனித நேயத்தையும் ஆலைவாய்க் கரும்பாகக் கசக்கிப் பிழியும் நிலை, இன்னும் இந்த நாடு வருணாச்சிரம தருமத்தினின்றும், மனுநீதிக் கோட்பாட்டினின்றும் மீளாமல் ஜாதி என்னும் சூழ்ச்சிக் கயிற்றில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கான சாட்சியங்களேயாகும்.

மனுநீதியையும் அதன் மூலவித்தான ஆரியத்தையும் அடியோடு அழித்தொழிக்கும் அணுகுண்டென தமிழகத்தில் தோன்றிய தந்தை பெரியார் அவர்கள் கிராமங்களுக்கும், நகரங்களில் உள்ள வசதிகள் கிடைத்து கிராமங்களே இல்லா நிலையை உருவாக்க வேண்டும் என்று கூறியதோடு விவசாயிகள் எந்நேரமும் சேற்றில் சிக்கிச் சீரழியாமல் இருக்க விவசாயம் முழுமையும் இயந்திரமயமாக்கப்பட வேண்டும் என்று கூறினார். இயந்திரங்களைக் கையாளும் அளவுக்கு அவர்களுக்குக் கல்வியறிவு வளர வேண்டும் என்று கூறியபோது, “இப்படிக் கூறுவதால் அருந்ததியர் பறையர், பள்ளர் போன்று அனைவரும் கல்வி பெற்று உயர்ந்துவிட்டால் ‘கக்கூசு’ எடுப்பது யார் என்று சிலர் என்னைக் கேட்கக் கூடும்’’ என்று கேள்வியை அவரே கேட்டுக் கொண்டு அதற்குப் பதிலாக அவர் ‘அந்தத் தொழில்களை நாம் எல்லோருமே எல்லா இடத்திலும் விகிதாச்சார முறையில் பங்கு போட்டுச் செய்து கொள்ள வேண்டும்’’ என்று கூறினார். அதுதானே மனிதநேயம்.

மலமெடுக்கும் தொழில் ஒரு பிரிவினர்க்கு மட்டும் உரியது என்று ஒதுக்கியது மட்டுமல்லாமல் மற்ற துறைகளிளெல்லாம் மனித உழைப்பைக் குறைக்கும் விதமாக பல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தியுள்ள நிலை, மலமெடுக்கும் தொழிலில் மட்டும் முன்னேற்றமின்றி பழைய நிலை நீடிப்பது வெட்கமல்லவா?

இதிலேயும் ஆரியப் பார்ப்பனத் திமிர் எந்தளவுக்குத் தாண்டவமாடியது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் கும்பகோணத்துப் பார்ப்பனப் பதர்கள் அக்ரகாரத்துக் ‘கக்கூசு’களில் மலம் அள்ள தாழ்த்தப்பட்டவர்களை அனுப்பக் கூடாது சூத்திரர்களை அனுப்ப வேண்டும் என்று நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்தனவே. நாய் தின்னும் அவனது மலத்தைக்கூட தாழ்த்தப்பட்ட தோழன் தொடக்கூடாது என்றானே! வர்ணாச்சிரம வக்கிரம் எந்த அளவுக்கு வாலாட்டியது என்பது புரிகிறதா?

தற்போது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்ட செய்திக்கு வருவோம். இச்செய்தி மனிதக் கழிவு அகற்றும் வேலையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது என்பதாகும். மொத்த மரணங்களில் 45% மரணங்கள் தமிழகத்தில் நேர்ந்ததாகக் கூறுகிறது. அகில இந்திய அளவில் 1993 முதல் ஏற்பட்ட 323 மரணங்களில் 144 மரணங்கள் தமிழகத்திலும், கர்நாடகாவில் 59உம், உத்திரப் பிரதேசத்தில் 52உம் ஏற்பட்டுள்ளன என்று மாநிலங்க ளவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் கிஸ்பூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால், அரசுப் புள்ளி விவரங்களுக்கும் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான சேவை அமைப்பான ‘சஃபாஸ் கர்மாச்சாரி அந்தோலன்’அய்ச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் புள்ளி விவரங்களும் மிகப் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. அரசுத் துறையின் கணக்கின் படி மொத்தம் 426 பேர்களே தமிழகம் முழுமையும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் சஃபாரி கர்மாச்சாரி அந்தோலன் நிறுவனத்தின் கணக்குப்படி தமிழகத்தின் 8 நகரங்களில் மட்டும் (3,000) மூவாயிரம் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள் ளதாகத் தெரிகிறது. இன்னும்கூட சில இடங்களில் உலர் கழிப்பறைகள் உள்ளதாகக் கூறுகிறது.

மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீஹார், ஒடியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் இந்தப் பணியைச் செய்வதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது. ஆக, ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்க்கின்ற போது இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருப்பதே உண்மை.

1993இல் முதன்முதலில் மனிதர்கள் இந்தத் தொழிலைச் செய்வதைத் தடை செய்தார்கள். இப்பணியில் அதுவரை ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்த வர்களைக் கணக்கெடுத்து அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 இலட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்புச் சொல்லப்பட்ட 2014இல் இருந்து இதுவரை இன்றைய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ‘சுவாச் பாரத்’ புகழ் மோடிக்கு மேலும் புகழ் சேர்ப்பதாகக் கருதலாமா?

இழப்பீடு வழங்காத கொடுமை  மட்டுமல்ல, நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தொழில் இன்னும் அதே நிலையில் நீடிப்பதுதான் அதைவிடக் கொடுமை! கழிப்பிடங்களை நவீனப்படுத்தி கையால் மலம் அள்ளும் கேவலத்தைத் தடுக்க, முற்றிலும் நீக்கப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா! அந்தக் கடமையினின்றுத் தவறியதனால் இன்றளவும் உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், உத்ராஞ்சல் போன்ற மாநிலங்களில் இன்னும் பழைய முறையிலேயே மலத்தை அள்ளி வாளியில் போட்டு அதைக் கையிலோ, தலையிலோ சுமந்து வந்து தள்ளுவண்டித் தொட்டியில் போட்டுத் தள்ளிக் கொண்டு போகும் நிலை உள்ளது என்பதை மனிதத்தன்மை உள்ள, மனிதநேயம் காக்க விரும்பும் எவராலும் சகித்துக் கொள்ள முடியுமா? ஆனால், இந்த அரசுகள் ஏற்றுக் கொள்கின்றனவே! அந்த மக்களின் மீது பா.ஜ.க. அரசுக்குள்ள அக்கறையின் அளவை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் இதோ ஒரு புள்ளிவிவரம். 2013இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தோட்டிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.570 கோடி. ஆனால், இந்த ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டல் வழி செயல்படும் மோடி மஸ்தான் ஆட்சியில் இந்த ஆண்டு அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை வெறும் 5 கோடி மட்டுமே! வர்ணாச்சிரம வர்ணஜாலங்களின் வக்கிரம் புரிந்திட இதைவிட விளக்கம் வேண்டுமா?

இந்திய இரயில்வேயில் ஒரு லட்சத்து எழுபத்து நாலாயிரம் ரயில் பெட்டிகள் உள்ளன. இதில் பயணம் செய்யும் பயணிகள் அவ்வண்டிகள் ரயில் நிலையங்களில் நிற்கும்போது கழிவறையைப் பயன்படுத்தினால் ரயில் பாதையில் விழும் அந்தக் கழிவை அகற்றுவதும் இந்தத் தொழிலாளர்கள்தான். அதைக் கையால் அகற்றிப் பின் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். அந்தத் துறையின் வருமானத்தில் ஏன் இதை நவீனமாக்கக் கூடாது. தற்போதுதான் ஆண்டுக்கு 500 பெட்டிகளில் பயோ கழிப்பறைகளை அமைக்கிறார்கள். இந்த வேகத்தில் அனைத்துப் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை அமைக்க எத்தனை ஆண்டுகளாகும் என்பதைக் கணக்கிட்டால் அவர்கள் இந்தப் பணிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரியுமே!

உண்மை இப்படியிருக்க இந்த மாபாவிகள் ‘சுவாச் பாரத்’ திட்டம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். இந்த ‘சுவாச் பாரத்’ திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையோ இரண்டு லட்சம் கோடிகள்.

அனைத்துக்கும் மேலாக இந்த மக்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில்கூட உரியப் பலனைப் பெறுவதில் உள்ள சிக்கல்களோ கொஞ்சம் நஞ்சமல்ல. அப்பணியில் ஒரு பணியாளர் இறந்துவிட்டால் அதற்கான சான்றிதழ்களைப் பெறுவதில் சிக்கலோ சிக்கல். காவல்துறை முதற் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யும் மருத்துவர் வரை பலபலத் தடைகள், லஞ்சலாவண்யங்கள்.

இந்த நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் எழுதியுள்ள ‘கர்மயோக்’ என்னும் நூலில் இந்த மலம் அள்ளும் தொழில் சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும் கடவுளின் சந்தோஷத் திற்காகவும் செய்யப்படுவது என்று கூறியுள்ளார்.  இதைவிட ஓர் பாஸிச இறுமாப்பு இருக்க முடியுமா? இதற்கெல்லாம் ஒரு தீர்வை ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுசேர்ந்து எடுத்தாக வேண்டும்! இந்த ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்ற வேண்டும்!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *