பெயரிலேயே கொண்டாட்டத்தைக் கொண்டிருக்கும் திருநாள், தமிழர் திருநாளும் திராவிடர் பெருநாளுமான பொங்கல். இன்பம் பொங்கும். மகிழ்ச்சி பொங்கும். உழைப்பின் பலன் பொங்கும். வியர்வையின் விளைச்சல் பொங்கும். எளிய குடிசையிலும் பொங்கல் பொங்கும். சாதி-மத-பொருளாதார பேதமற்ற சமத்துவம் பொங்கும். இதுதான் வேறெந்த பண்டிகைக்கும் இல்லாத, பொங்கலுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.
உழைத்தப் பலனை மகிழ்ச்சியுடன் நுகரவும், ஓரிரு நாள்கள் ஓய்வும் உற்சாகமும் கிடைக்கவும் பொங்கல் போன்ற அர்த்தமுள்ள பண்பாட்டு விழாக்கள் பன்னெடுங்காலமாக நடைபெறு கின்றன. உழைப்பவர்களுக்கு ஓய்வும் உற்சாகமும் தேவை என்பதை இன்றைய நவீன உலகம், ‘வீக் எண்ட்’ எனப்படும் வார இறுதிக் கொண்டாட் டங்களாக மாற்றியுள்ளன. 5 நாள்கள் கடுமையான மூளை உழைப்பு, அதனால் ஏற்படும் மன அழுத்தம், உடல் சோர்வு, குடும்பத்தினர் -நண்பர்கள் ஆகியோரைக் காண முடியாத நிலைமை இவை அனைத்தையும் சரி செய்து, மீண்டும் 5 நாள்கள் நேரம் காலம் பார்க்காமல் மூளை உழைப்பைப் பெறுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்தகைய வீக் எண்டுகளை உள்ளூர் மகிழ்விடங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு உல்லாச மையங்-களிலும் நடத்துவதற்குச் செலவிடுகின்றன.
இளைய தலைமுறையினர் தங்களைப் புத்துணர்வாக்கிக் கொள்ள இந்த “வீக் எண்டு’’களை விரும்புகிறார்கள். முந்தைய தலைமுறையைவிட இந்தத் தலைமுறையினர் தொழிற்கல்வி கற்று, அதிக ஊதியம் பெறும் பணிகளில் ஈடுபடுகின்றனர். முந்தைய தலைமுறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து அதன் மூலம் சேமித்ததையும் காப்பீடு உள்ளிட்ட பிற பலன்களையும் கொண்டு ஒரு வீடு கட்டுவதும் அதனைத் தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கொடுத்துவிட்டு, காசி_-ராமேஸ்வரம் எனக் கடைசிக் கால யாத்திரைகள் மேற்கொண்டு கண் மூடுவதும் வழக்கமாக இருந்தது. இன்றைய தலை முறையினரின் வாழ்க்கை முறை அதிலிருந்து முற்றிலுமாக மாறிவிட்டது.
படிக்கும்போதே “கேம்பஸ் இன்டர்வியூ’’ வாயிலாக நல்ல ஊதியத்துடனான வேலைக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. வேலையில் சேர்ந்து முதல் மாதம் ஊதியம் பெறும் போதே மாதத் தவணை கட்டும் வசதியுடன் வங்கிக் கடன் கிடைக்கிறது. அதன் மூலமாக உடனடியாக வீடு, கார், வெளிநாட்டுச் சுற்றுலா என விரும்பியதை அனுபவிக்கும் காலமாக இது இருக்கிறது. தங்களைப் பெற்றவர்களையும், தாங்கள் பெற்ற குழந்தைகளையும் மகிழ்வித்து தாங்களும் மகிழும் வகையிலான வாழ்க்கைச் சூழல் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் வாய்க்கிறது. சம்பாத்தியத்தில் சேமித்து அனுபவித்த காலம் மாறி, அனுபவிப்பதற்குச் சம்பாதித்து மாதத் தவணைக் கடன் கட்டும் காலம் உருவாகி யுள்ளது. இதன் நன்மை-தீமைகளை பொருளியல் அறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் அலசி ஆராய்கிறார்கள். எனினும், இன்றைய தலைமுறையின் வாழ்க்கை முறை என்பது உடனுக்குடன் அனுபவிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்பற்றப்பட்ட சமூக நீதி என்பது பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை உருவாக்கி யுள்ளது. கால் நூற்றாண்டுக்கு முன்பு இட்லி,-தோசை போன்ற காலை உணவுகூட பண்டிகை நேரத்துப் பலகாரமாக பல குடும்பத்தினருக்கு இருந்தது. இன்று விரும்பிய உணவு, தேவைக்கேற்ப புதிய ஆடை, பயணிக்க வாகனம் என்பதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் சாதாரணமாகிவிட்டன. இத்தகைய பொருளா தாரச் சூழலில், கொண்டாட்டங்களை நோக்கி மனது தாவுவது இயல்பு. அதனால்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினம் எனக் கொண்டாடுகிறார்கள்.
நவீன யுகத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் எளிதில் தன் வசமாக்கி விடுவது இயல்பு. இந்தியாவில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது, அது வங்கிகளிலும் பிற அத்தியாவசிய இடங்களிலும் முழுமையாக நுழைவதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் மூலம் ஜோதிடம் எனப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆரியத்தின் இந்த லாவகம், இளைய தலைமுறையின் கொண்டாட்டங்களையும் ஆக்கிரமிக்கிறது. புராண அடிப்படையிலான ஆடம்பர-ஆரவார பண்டிகை களைக் கொண்டாட்டங்களாக மாற்றி அதனைப் பரந்த அளவில் கொண்டு சேர்க்கும் ஒற்றைக் கலாச்சார மனோபாவத்திற்குத் தற்போதைய பொருளாதார சூழலையும் தொழில்நுட்பத்தையும் ஆரியம் கச்சிதமாகக் கையாள்கிறது.
இதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை பண்பாட்டு அடையாளத்துடனும் பகுத்தறிவுச் சிந்தனையுடனும் உற்சாகமிகு கொண்டாட்டங்களாகக் கையில் எடுத்து, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதையும் இளைய தலைமுறையினரின் மனதில் நிறுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் இதற்கான சரியான சான்று. பழந்தமிழர் பண்பாட்டில் தொடங்கி, இன்றைய இளந்தமிழர்களின் சாதனைகள் வரை அனைத்தும் போற்றப்படும் வகையிலும் கொண்டாடப்படும் வகையிலும் இந்த நிகழ்வு தொடர்கிறது. இதே முறையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைய தலைமுறை யினரை ஈர்க்கும் வகையிலான பண்பாட்டுப்-பகுத்தறிவுக் கொண்டாட்டங்கள் தொடர வேண்டும்.
தீபாவளிக்கு மாற்றாக நரகாசுரன் விழா, தமிழ் வருஷப் பிறப்பு என்கிற சித்திரை 1க்கு மாற்றாகக் கோடை விழா, கொழுக்கட்டை,-சீடை, -முறுக்கு இவற்றைத் தின்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள புராண வழிப் பண்டிகைகளுக்கு மாற்றாகத் தமிழர் உணவுத் திருவிழா என ஏராளமான கொண்டாட் டங்களை திராவிடர் கழகம், தமிழின எழுச்சிக்காகச் செய்து வருகிறது. இத்தகையக் கொண்டாட்டங்கள் மேலும்மேலும் தேவைப்படுகின்றன. பொழுதுபோக்கிற்கான இத்தகையக் கொண்டாட்டங்களை, திறமைக்கு ஊக்கந்தரும் விழாக்களாக மடைமாற்ற வேண்டிய பண்பாட்டுக் காப்பு, வளர்ச்சிக்கான செயல்பாடுகள் அவசியமாகின்றன.
உழைப்பின் உயர்வைப் போற்றும் கொண்டாட்ட நாளான பொங்கல் விழா, தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அமைவதால் அதன் தொடர்ச்சியாக மேலும் பல பண்பாட்டுக் கொண்டாட்டங்களை முன்னெடுப்போம். தமிழர்களை ஆரியத்தின் பிடியிலிருந்து மீட்டெடுப்போம்!