திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து
எண்சீர் விருத்தம்
அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்!
அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்!
மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்!
விண்ணுயர்ந்த பனிமலைதான் நிமிருமுன்னர்ப்!
பகுத்தறிவின் துணையாலே அரசியற்றிப்
பல்கலையின் ஒளியாலே உலகம் காத்துத்
திகழ்பழைய தமிழகமே, இடைநாள் தன்னில்
திராவிடநா டெனப்போற்றும் என்றன் அன்னாய்,
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,
போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கிவைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.
தெலுங்குமலை யாளங்கன் னடமென் கின்றார்
சிரிக்கின்றாய் அன்னாய்நின் மக்கள் போக்கை!
நலங்கெட்டுப் போனதில்லை, அதனாலென்ன?
நான்குபெயர் இட்டாலும் பொருள் ஒன்றன்றோ?
கலங்கரையின் விளக்குக்கு மறுபேர் இட்டால்,
கரைகாணத் தவறுவரோ மீகாமன்கள்?
இலங்குதிரு வே, வையம் செய்த அன்னாய்
எல்லாரின் பேராலும் உனக்கென் வாழ்த்தே!
தமிழகமே, திராவிடமே, தைம்முதல் நாள்
தனிலுன்னை வாயார வாழ்த்துகின்றேன்.
அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்துகின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மைவெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்பதில்லை,
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்ததில்லை
எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச்சல்ல
அன்றொருநாள் வடபுலத்தைக் குட்டுவன்போய்
அழிக்குமுனம் தன்வீட்டில் இலையி லிட்ட
இன்பத்துப் பொங்கலுண்டான், அதைப்போ லத்தான்
இன்றுண்டேன்; அன்றுன்னை வாழ்த்தினான்போல்
நன்றுன்னை வாழ்த்துகின்றேன் எனைப் பெற்றோயே
நல்லுரிமை உன்மூச்சில் அகன்ற தில்லை.
பொன்னேஎன் பெருவாழ்வே அன்பின்வைப்பே
புத்தாண்டு வாழ்த்துரைத் தேன் நன் றுவாழ்க.
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
எழுசீர் விருத்தம்
பொங்கிற்றுப் பால் இனிது!
குழைந்தது முத்தரிசி!
புத்துருக்குநெய் புறங்கை ஒழுகத்
தங்கத்தைத் தூவு கதிர்
வாழ்த்தியே பாற் பொங்கல்
தைத்திரு நாளில் உறவுடன் உண்பீர்
இங்கிந்த நாள்போல
என்றுந் திராவிடர்
இடர்கள் நீங்கி விடுதலைஎய்தி
வங்கத்தை முக்கடலை
மறவர்தோள் காத்திட
வந்திடும் புகழ்க்குளம் மகிழ்ந்து வாழியவே.
திராவிடர் மீட்சி
எழுசீர் விருத்தம்
ஒன்றுநம் உள்ளம்; ஒன்றுநம் மகிழ்ச்சி;
ஒன்றுநாம் உண்டதீம் பொங்கல்;
ஒன்றுநாம் அனைவரும்; ஒன்றுநம் உறவும்
உணர்ந்தனம் பொங்கல் நன் னாளில்!
இன்றுபோல் என்றும் இன்பம் ஓங்கிடுக!
இன்பத் திராவிட நாட்டை
நன்றுநாம் மீட்க உறுதிமேற் கொள்வோம்!
நனிவாழ்க திராவிடநாடே!
================
ஐந்தாம்படை அழிக
அமிழ்தென்று தைப்பொங்கல் உண்டோம்இந் நாளே
தமிழென்று போர்தொடுப்போம் தாவி!-நமை நலிப்பார்
உள்ள பகைவரல்லர்; உட்பகையே ஆம்என்றே
உள்ளுக வாழ்க உயர்ந்து.
==============
வாழிய பொங்கல் நற்றிருநாள்!
எழுசீர் விருத்தம்
வாழிய வாழிய திராவிட மக்களே!
வாழிய பொங்கல்நற் றிருநாள்!
வாழிய தமிழாம் திராவிட நன்மொழி!
வாழிய திராவிடர் உரிமை!
ஏழியல் நரம்பின் யாழுநல் லிசையும்
என்னவே தலைவியர் தலைவர்
சூழுறு காதல் இன்பத் தியைந்த
தூயவாழ் வோங்குக நன்றே.