பொங்கல் மட்டும் நாம் ஏன் கொண்டாடலாம் அல்லது கொண்டா டுகிறோம்?. அறிவு அரும்பத் துவங்கிய பருவத்தில் நாங்கள் கேட்ட கேள்வி இது. வீட்டில் சொன்னார்கள், எல்லோரும் பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள் நமக்குப் பண்டிகை என்று ஏதாவது ஒன்று வேண்டுமய்யா என்று பெரியாரிடம் இயக்கத் தொண்டர்கள் விண்ணப்பித்தார்கள். அதனடிப்படையில் அய்யா அவர்கள் அப்படிக் கொண்டாடுவது என்றால் பொங்கலைக் கொண்டாடிக் கொள்ளுங்கள். அது ஒன்றுதான் மூடப் பழக்க வழக்கங்களுக்கு புராணக் கட்டுக் கதைகளுக்குத் தொடர்பில்லாத தமிழர்கள் பண்டிகை என்று அனுமதியளித்ததாகக் குறிப்பிடுவார்கள். அதன்பின் தமிழர்களின், இயற்கை சார்ந்து அடிப்படை உணவளிக்கும் உழவுத் தொழிலை அதன் அறுவடை பெறுகின்ற நாளில் மகிழ்ந்து உற்ற துணையாற்றி வருகின்ற மாட்டையும் போற்றி நடத்தப்படுகின்ற உறவுகள் பேணுகின்ற விழாவாக பொங்கலை நாமும் கொண்டாடி வருகிறோம். இந்தத் தருணத்தில் மனிதனுக்கு ஏன் கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்த ஒரு சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக இந்தக் கட்டுரையைத் துவங்குவோம்.
விலங்குகள் உலகத்தில் கொண்டாட்டங்கள் இல்லை என்று கூறலாம். அவை மகிழ்ச்சியாக இருக்கும் போது சில ஒலிகளையோ அல்லது உடல் அசைவுகளையோ வெளிப்படுத்தக்கூடும் என்று சொல்கிறார்கள். ஆனால், மகிழ்ச்சியைத் திட்டமிட்டுத் தேடும் விலங்கினம் மனித இனம்தான். எனவே இதெல்லாம் பகுத்தறிவின் பாற்பட்டவை என்றுதான் கூற வேண்டும். ஆதியில் விலங்குகளை விரட்ட எழுப்பப்பட்ட ஒலிகள் ஆடல்கள் கொண்டாட்டத்திற்கு வித்திட்டதாக எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, பறையடித்தலைக் கூறலாம். அதன்பின் விவசாயம் தழைத்த பிறகு பொங்கல் போன்று நிலத்தின் விளைச்சலைக் கொண்டாடும் வழக்கம் தோன்றியிருக்கலாம். ஆனால் பின்னாளில் கொண்டாட்டம் என்பது வெற்றி என்ற சொல்லுடன் இணைந்து பயணிக்கத் துவங்கியிருக்கிறது. பெரும்பாலும் மன்னர்களின் வெற்றியே பெருமை பாராட்டும் கொண்டாட்டங்களாக இருந்திருக்கின்றன. மத்தளம் முரசு போன்ற கருவிகள் அப்போது தோன்றின. இதுவரையிலுமுள்ள கொண்டாட் டங்கள் சில நிகழ்வுகளையொட்டியே அமைவதைப் பார்க்கிறோம். பருவம் பொய்த்தால் அறுவடை நாள்கள் கொண்டாட்ட நாள்களாக இருக்க முடியாது. மன்னனின் பெருமை பாராட்ட வெற்றி வாய்ப்புகள் இல்லாவிட்டால் கொண்டாட எதுவுமிருக்காது. ஆனால் நிகழ்வுகளிலிருந்து பிரித்தெடுத்து கொண்டாட்டங்களை ஓர் ஆண்டின் நாள்காட்டிகளோடு இணைத்த வேலையை மனித இனத்தில் மதங்கள்தான் செய்திருக்கின்றன. மதம் மனிதனைப் பிடித்த போது கொண்டாட்டங்கள் நம் மீது சுமத்தப் பட்டன. ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவர் வாழ்வில் எதுவும் நடந்திராத நிலையில் அவர் வீட்டுச் சுவற்றில் தொங்கும் நாள்காட்டி அவர் மகிழ்ச்சியாக அந்த நாளில் இருந்தாக வேண்டும் என்று பண்டிகை நாள்களில் அவருக்கு அறிவுறுத்துகிறது. இப்படி நாள்காட்டியால் தீர்மானிக்கப்படும் மகிழ்ச்சியை உண்மையாக்க மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்களை அவர் செய்தாக வேண்டும். விளைவு கடன் வாங்கியாவது புத்தாடைகள், நகைகள், விருந்துணவுகள் போலியான ஆடம்பரப் பெருமிதங்கள் இவை அனைத்துக்கும் தாயகமாகப் பண்டிகைகள் விளங்குகின்றன. மதம் என்னும் ஆலமரத்தின் விழுதுகளாக பண்டிகைகள் அந்த மரத்தைத் தாங்கி நிற்கின்றன. மதமற்ற மனித வாழ்க்கை சாத்தியமில்லை என்று பல முற்போக்குச் சிந்தனையாளர்கள் அதாவது முற்போக்கு முகாம்களில் கூடாரமெடுத்து தங்கியிருப் பவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் முதல் வாதமே கொண்டாட்டங்கள் மதங்களுக்குள் தானிருக்கின்றன. அந்தக் கொண்டாட்டங்கள் இல்லாமல் மக்கள் வாழ முடியாது என்கிறார்கள். கூட்டமாக வாழ்வது மனித இனம். கூட்டத்திற்குக் கொண்டாட்டம் கட்டாயத் தேவையா என்ன? கூட்டமாகக் கூடுவது என்பதே குதூகுலம்தானே. ஒருவேளை தன்னிச்சையானக் கூட்டங்கள் மற்றும் கூடல்களைத் தடுக்கத்தான் தனித்த வழிபாடுகள் சார்ந்த கொண்டாட்டங்கள் வந்தனவோ என்று வினவத் தோன்றுகிறது.
இவை தவிர ஒரு நாடு அதன் வரலாறு சார்ந்து கொண்டாட்டங்களை நடத்துகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் அதன் சுதந்திர தினம் மற்றும் குடியரசு, மே நாள்களைக் கூறலாம். ஆனால் இவை எதுவுமே நமது வீட்டுப் பண்டிகைகளாக மாறுவதில்லை. மதம் மட்டுமே வீட்டுக்குள் ஆதிக்கம் செலுத்துவதை இங்கும் நாம் உணரலாம். பிற கொண்டாட் டங்களை மக்கள் வாசலுக்கு வெளியிலேயே நிறுத்திக் கொள்கிறார்கள்.
மதங்களின் குழந்தைகளான இந்தப் பண்டிகைகளை தனது தத்துப் பிள்ளைகளாக வரித்துக் கொண்டது வர்க்க பேதமுள்ள சமுதாயம். ஒருவன், தான் பணக்காரனாக இருப்பதன் பெருமிதத்தைப் பெரும்பாலும் பண்டிகைகள் வழியாகவே அனுபவிக்கிறான். தீபாவளிக்கு வேட்டு வெடிப்பதில் மட்டுமல்ல அப்படி வெடிக்கும்போது வெடி வாங்கக் காசில்லாத வீட்டுப் பிள்ளைகள் தங்கள் வீட்டு வாசலில் கூடி நின்று வேடிக்கை பார்ப்பதிலும்தான் பண்டிகைகளின் மகிழ்ச்சி வழிந்தோடுகிறது.
இன்று மதப்பண்டிகைகளுக்கு சொல்லப் பட்டிருக்கும் புராணக் கதைகளை யாரும் கேட்பது கூடக் கிடையாது. எந்தவொரு பண்டிகையையும் ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்விக்கே இப்போது இடமில்லை. பண்டிகைகள் அன்றாட அலுப்பூட்டும் வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் தற்காலிக விடுதலையைத் தருகின்றன. பரிசுகள் வழங்கப் படுகின்றன. அரசாங்கம் போனசு தருகிறது. உண்மையில் அது அவர்கள் ஓர் ஆண்டு உழைப்பின் ஊதியம்தான். ஆனால் அது பண்டிகை கொண்டாடுவதற்குதான் வழங்கப் படுகிறது. ஆண்களுக்கு மாமியார் வீட்டிலிருந்து விருந்தும் வெகுமதியும் கிடைக்கின்றன. எந்த ஊதியமும் பெறாத வாழ்நாள் வேலைக்காரியாக இருப்பதை ஆட்சேபணையின்றி ஒத்துக் கொண்ட பெண்கள் பண்டிகை நாளன்று நகைகளும் பட்டாடைகளும் கேட்கிறார்கள். காதலைச் சொல்லிடும் வழி தங்கமென்கிறார்கள் நகைக் கடைக்காரர்கள். இப்போதெல்லாம் நகைக்கடை உரிமையாளர்களே நடிகைகளுடன் விளம்பரத்தில் வந்து ஜோடி நடனமாடி காதலிக்கு எவ்வளவு நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். நகை வாங்கிக் கொடுத்தால் காதலி எப்படியெல்லாம் அன்பாக இருப்பாள் என்று ஆடல் பாடல்களுடன் உணர்த்துகிறார்கள்.
ஏன் அலுப்பூட்டக் கூடிய ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஊதியத் தொகை ஏன் பரிசுத் தொகையாகத் தரப்பட வேண்டும், மருமகன்களுக்கான மாமியார் வீடும் மருமகள்களுக்கான மாமியார் வீடும் ஏன் ஒரே மாதிரியாக இல்லை, ஏன் நான் ஊதியமில்லாத வாழ்நாள் வேலைக் காரியாக இருக்க வேண்டும், ஆண் பெண்ணுக்குக் காதலைச் சொல்லிவிடும் வழி தங்கமென்றால் பெண் ஆணுக்கு காதலைச் சொல்லும் வழி என்ன? தங்கமில்லாதவர்கள் எந்த வழியில் காதலைச் சொல்ல வேண்டும்? இந்தக் கேள்விகளின் ஊற்றுக் கண்களை யெல்லாம் பண்டிகைகள் அடைத்துவிடுகின்றன.
முக்கியமாகப் பெண்களின் வாழ்க்கையில் பண்டிகைகளின் பங்கு மிகவும் மோசமானது. பண்டிகைகள் எந்த அளவுக்குத் தங்கள் வாழ்க்கையை சிறைப் படுத்தியிருக்கின்றன என்பதையே உணராமல் அந்தப் பண்டிகைகளை முழுமையாக விரும்பக் கூடியவர்களாகப் பெண்களை ஆக்கி வைத்திருக்கிறது இந்தச் சமுதாயம். ஓர் உச்சபட்ச எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால், சுமங்கலி பூஜையை எடுத்துக் கொள்ளுங்கள். தனது கணவனுக்கு முன் தான் இறந்து விட வேண்டுமென்று பெண்கள் பூஜை செய்கிறார்கள். தாங்கள் விரைந்து சாக வேண்டுமென்று பெண்கள் பூஜை செய்கிறார்கள். இதை விட அடிமைத்தனமொன்று உலகில் இருக்க முடியுமா? அது மட்டுமல்ல வெளி உலகத்தைப் பற்றியே யோசிக்க விடாமல் அதற்கு நேரம் இடம் இரண்டையுமே தராமல் அவர்களை சிறைப்படுத்தியிருப்பதும் இந்தப் பண்டிகைகள் தான்.
பண்டிகைகளின் இந்த எதிர்மறையான விளைவுகள் பற்றிய எந்தவொரு சமுதாய ஆய்வோ அக்கறையோயின்றி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கப் பண்டிகைகள் வேண்டும் என்ற மொன்னையான ஒரு வாதத்தை மீண்டும் மீண்டும் வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதுபோல் எந்தக் காரண காரியமுமின்றி மகிழ்ச்சியாக இருப்பது என்ற பெயரில் அநாகரீகத்தின் எல்லைக்கே செல்கின்ற காட்சிகளைத்தான் புத்தாண்டுக் கொண்டாட் டங்கள் என்ற பெயரில் ஆண்டு தோறும் நாம் பார்க்கிறோம்.
பண்டிகைகளின் சமுதாயச் செயற்பாடுகள் பற்றிய ஒரு சுருக்கமான வடிவம்தான் இது. இன்னும் ஆழமாக உற்று நோக்கினால் நாம் எதையெல்லாம் இந்தச் சமுதாயத்தில் மாற்ற வேண்டுமென்று விரும்புகிறோமோ அவற்றை யெல்லாம் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக இந்தப் பண்டிகைகள் திகழ்வது புரியும். மக்களோடு அய்க்கியமாகிறோம் என்கிற பெயரில் இந்தப் பண்டிகைகளில் பங்கு பெறுவோர் மற்றும் இந்தப் பண்டிகைகளுக்கு ஏதாவதொரு மாற்று கூறுங்கள் என்று கேட்போர் சமுதாயச் சீர்திருத்தத்தின் மீது நாம் முன்மொழியும் சமுதாயப் புரட்சியின் மீதும் உண்மையான பற்றோ நம்பிக்கையோ இல்லாதவர் என்றே பொருள்.
அப்படியானால் கொண்டாட்டங்களுக்கு மனித வாழ்வில் இடமேயில்லையா என்று கேட்டால் கொண்டாட்டங்களுக்கு மனித வாழ்வில் நிச்சயம் இடமிருக்கிறது. ஆனால் அது மதம் சார்ந்து காரண காரியமற்ற சடங்கு அல்லது நம்பிக்கை சார்ந்து இருக்கக் கூடாது என்பதைத்தான் நாம் வலியுறுத்த விரும்புகிறோம். பொங்கல் போன்று நிலம் சார்ந்த ஒரு இயற்கை விழாவில் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் பெருவாரியாக விவசாயம் அழிந்து கொண்டிருக்கும் சூழலில் அது குறித்த சமுதாய அக்கறையற்ற பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்க முடியும்?
கொண்டாட்டங்கள் நம் வாழ்க்கையின் இயற்கை சார்ந்தும் நமது இலட்சியங்களின் ஈடேற்றம் சார்ந்தும் இருக்க வேண்டும். அது மாத்திரமின்றி கொண்டாட்டங்களின் வடிவம் ஆடம்பரங்களை ஊக்குவிப்பதாக பணக்காரத் தனத்தை ஊக்குவிப்பதாக இருக்கக் கூடாது என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
உண்மையில் பண்டிகைகள் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. நமது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை மறைப்பதற்காக ஏற்படுத்தப் பட்டவையே. அதனால்தான் சொல்கிறோம், கொண்டாட்டங்களில் வாழ்க்கையைத் தேடாமல் வாழ்க்கையைக் கொண்டாடுவோமென்று. எங்கே என் தலை அச்சமற்று நிமிர்ந்திருக்கிறதோ அதுவே என் நாடு என்று தாகூர் கூறியதைப் போல எந்த வாழ்க்கையை என்னால் கொண்டாட முடிகிறதோ அந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவரும் பெறுவதே உண்மையான கொண்டாட்டமாகும்.
வாழ்க்கையில் கொண்டாட்டங்களைத் தேடுவதிலிருந்து விடுபட்டு வாழ்க்கையைக் கொண்டாட எப்போது துவங்குவோம்.?