இந்து மதமா? பார்ப்பன மதமா?
மனு சாஸ்திரம் கூறுகிறது: “ பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும் உயர்ந்த குலத்தாலும் வேதங்களைப் பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும் பூணூல் தரித்துள்ள சிறப்பினாலும் பார்ப்பனர் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளனர் என்கிறது. காரண காரிய வாதம் எப்படி? எவரையும் படிக்கவிடாமல் இவன் மட்டுமே படித்துவிட்டது தகுதியா? எவரையும் போடவிடாமல் இவர் மட்டுமே பூணூல் போட்டுக்கொண்டதால் உயர்ஜாதியா? மற்ற வருணத்தாருக்கும் தலைவனா? இதைத்தான் ஒரு குலத்துக்கொரு நீதி என்கிறார்கள்.
“சூத்திரர்க்கு ஒரு நீதி/தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி/என்று சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று கண்டோம்’’ என்றான் பாரதி!
“பார்ப்பனன் இந்து சமூக அமைப்பின் மாமனிதன் என்ற வகையில் பல வகை சலுகைகள் பெறுவதற்குரியவனாகிறான். முதலாவதாக, கொலைக்குற்றம் சாற்றப்பட்ட போதிலும் பார்ப்பனனுக்குத் தூக்குத் தண்டனை கிடையாது (மனு:10-3) பார்ப்பனன் எத்தகைய ஒழுக்கம் கெட்டவனாக பிறர்மனை நயப்பவனாக இருந்தபோதிலும் அவனைக் கொல்லக் கூடாது. அவனது தலைமயிரை மழித்து அவமானப்படுத்துவதோடு நின்றுவிட வேண்டும். ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்’’ (மனு:8_379) என்றால் கொலை செய்தால் பார்ப்பானுக்குச் சிகைச்சேதம், மற்றையோர்க்கு சிரச்சேதம் என்றால்… இது மதமா? என்று கேட்டவர் அம்பேத்கர். (தொகுப்பு நூல் 6 பக்கம்:160)
“பார்ப்பனர்க்கு எத்தனை எத்தனையோ உரிமைகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் கடமைகள் ஏதுமில்லை. சாதாரண மனிதர்க்கு வாழ உரிமையேதுமில்லை. சுதந்தரமோ, சொத்து சுகத்தை அனுபவிக்கவோ அவனுக்கு வாய்ப்பில்லை. உயர்ஜாதியினரின் வாழ்வு வளத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் தன்னுடைய நலன்கள் அனைத்தையும் இழக்க வேண்டிய நிலையில் சாமான்யன் வைக்கப்பட்டுள்ளான். அத்தகைய இழப்பைக் கட்டாயமாக்கியும் இந்து சமூக அமைப்பு வைத்துள்ளது. உயர்ஜாதியினரின் நன்மைக்காக சாமான்யன் இழப்பை ஏற்பது அவனுடைய தலையாய கடமை என்பதையும் சாமான்யனின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளது இந்து மதம்’’ என்கிறார் அம்பேத்கர் (தொகுப்பு நூல் 6, பக்கம்: 167)
ஜெர்மானியரான நீட்ஷே என்பவர் 1883இல் வெளியிட்ட கருத்தின்படி அவரது ஆசை மாமனிதனான சிறந்த மனிதரினத்தைப் (ஸிணீநீமீ ஷீயீ ஷிuஜீமீக்ஷீனீணீஸீ) படைக்க வேண்டுமென்று விரும்பியவர். தோற்றவர். அதற்கு நேர்மாறாக உயர்ஜாதியினர் எனக் கருதிக்கொண்டோர்க்காக சிறப்பு உரிமைகளை அளித்துக் கட்டிக் காப்பாற்றி வளர்த்தது இந்து மதம் என்றார் அம்பேத்கர். “அவர்கள் எவ்வளவு இழிந்த தொழில்களைச் செய்தாலும் அவர்கள் போற்றுதலுக்குரியோர். மனித அறிவுக்கெட்டாத ஒருவகைத் தெய்வீகத் தன்மை பெற்றவர்கள்’’ எனச் சொல்கிறது மனுதர்மம். பார்ப்பனர் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பது இதனால்தான்!
பேசுவதிலும் பேதம்
மனிதர்களை நால்வருண மாக்கியதோடு நில்லாமல் சவர்ணர் என்றும், அவர்ணர் என்றும் இரண்டு குரூப் ஆகவும் பிரித்தது இந்து மதம். மொழியிலேயே அவர்ணர் பேசக் கூடாத சொற்கள் என்றும், பாகுபாடு கற்பித்தும் மீறிப் பேசிவிட்டால் கடுந்தண்டனை தருவதும் இந்து மதமே! 1936 நவம்பர் 4ஆம் நாளது பம்பாய் ‘சமாசார்’ ஏட்டில் வந்த செய்தியை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மலபாரில் உள்ள ஒத்தப்பாலம் என்ற இடத்தில் ஈழவர் சிவராமன் (17 வயது) சவர்ணர் ஒருவரின் கடையில் உப்பு வேண்டும் என்று கேட்டார். உப்பு எனும் சொல்லை மலபாரில் அவர்ணர் சொல்லக் கூடாதாம். புளிச்சாட்டான் எனக் கூறவேண்டுமாம். காரணம் அவர் தாழ்த்தப்பட்டவர். இதனால் கோபமடைந்த கடைக்காரர் சிவராமனைக் கடுமையாக அடித்தார். சிவராமன் இறந்து போனார். இதுதான் இந்துமதக் கொடுமை! (பக்கம் 84, தொகுப்பு நூல் 6)
மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டோர் ராம்ராம் என்றோ நமஸ்கார் என்றோ சொல்லக்கூடாதாம். அவற்றை சவர்ணர்தான் கூறவேண்டும். அவர்ணர், “பாயா லாகு’’ என்றுதான் கூற வேண்டுமாம். பாயா லாகு என்றால், தங்கள் பாதங்களைத் தொடுகிறேன் என்று பொருள்! இத்தகைய மொழி வருணப் பாகுபாடு இந்து மதமல்லால் வேறு மதங்கள் கடைப் பிடிக்கின்றனவா? எனவேதான் இந்துமதம் சீர்திருத்தப்படவே முடியாத கேடுகெட்ட மதம்!
அம்பேத்கர் இந்து மதத்தினை வேரோடு கெல்லி எறியவே விரும்பினார். அதற்காகவே பாடுபட்டார். அதனை மறைக்க இந்துத்வர்கள் முயல்வது கைக்குட்டையால் சூரியனை மறைக்க முயலும் முட்டாள்தனமான முயற்சி! ‘இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று 1935இல் சூளுரைத்தவர், 1950இல் இந்திய நாடே பவுத்தத்தைத் தழுவ வேண்டும் எனப் பேசினார். (‘தி சன்டே நியூஸ்’ 1.10.1950) தம் வாழ்வின் எஞ்சிய பகுதியை புத்த நெறியைப் புதுப்பிக்கவும் பரப்பவும் அர்ப்பணிக்கப் போவதாகப் பிரகடனம் செய்தார்.
சாவர்க்கரைச் சாடியவர்
இதனால் பாதிக்கப்பட்ட இந்துத்வ கர்த்தா, இந்து மதத்தால் உயர்நிலையில் வைக்கப்பட்டுச் சகல போகங்களையும் எளிதாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்ற சித்பவன் பார்ப்பனரான வினாயக் தாமோதர் சாவர்க்கர், அம்பேத்கரைக் கடுமையாகத் தாக்கிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார். அவர் என்ன எழுதினார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்தால் கடும் பதிலடி கொடுப்பேன் என்றார் அம்பேத்கர். அவருடைய பேச்சில் கோபம் கொப்பளித்தது. “இந்துமதம் கடவுள் இருக்கிறது என நம்புகிறது. பவுத்தத்துக்கு கடவுள் இல்லை. இந்துமதம் ஆத்மா என ஒன்று உள்ளது என்கிறது. பவுத்தத்தின்படி ஆன்மா இல்லை. இந்து மதம் சதுர்வர்ணம், ஜாதிகளையும் ஏற்கிறது. பவுத்தத்தில் இதற்கு இடமில்லை’’ என்று தாம் இருந்த மதத்தையும் தழுவப் போகும் நெறியையும் ஒப்பிட்டுப் பேசினார். (தொகுப்பு நூல் 6, பக்கம்: 660_661)
பரிதாபத்திற்குரிய தமிழக இந்துத்வர்கள் சாவர்க்கார், அம்பேத்கரின் நெருங்கிய நண்பர், ஆலோசகர், என்றெல்லாம் புளுகுமூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும். மாமேதை அம்பேத்கர் மாற்றுக் கருத்து கொண்டோருடனும் நனி நாகரிகத்துடன் பேச வேண்டும், பழக வேண்டும் எனும் உயரிய பண்பாடு கொண்டவர். அதை இந்துத்வ கால்வேக்காடுகள் “நல்ல நண்பர்கள்’’, ஆலோசகர்கள் என்றெல்லாம் பிதற்றுகின்றனர்.
(கேள்விகள் தொடரும்)
– சு.அறிவுக்கரசு