குறும்படம்
‘வலி’
மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளை இன்னுமா புறக்கணிப்பது என்பதை உரையாடல்களே இன்றி வெறும் முகபாவனைகள் மூலமாகவே அவர்களின் வலியை முழுமையாக உணர்த்தியிருக்கும் குறும்படம்தான் வலி.
ஒரு உணவுக்கூடத்தில் காபி குடிக்க வரும் ஒரு திருநங்கையை உணவு அருந்த வருகின்றவர்கள் எதிரில் அமர்ந்திருப்பவர் ஒரு திருநங்கை எனத் தெரிந்து அவரைப் புறக்கணித்து வேறு இடத்தில் அமர்வது, அவருக்கு தாங்கொணாத வலியை உணடாக்குகிறது. இறுதியில் ஒரு ஆறு வயது சிறுமி, தன் தந்தையின் புறக்கணிப்பையும் மீறி அந்த திருநங்கையுடன் சிறுமி பாவனைகளாலேயே பேசி, விளையாடி அவர் கன்னத்திலும் முத்தமிடுகிறாள். ஏற்கனவே உண்டான புறக்கணிப்பு ஏற்படுத்திய வலியால் அழுத கண்ணீரோடும், மலர்ந்த முகத்தோடும் கள்ளம்கபடம் இல்லாத அந்தச் சிறுமியின் அங்கீகாரத்தால் நெகிழ்ந்து அவளுக்கு விடை கொடுக்க கையசைக்கிறார் என்பதுடன் குறும்படம் நிறைவு பெறுகிறது. கதை எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார் விக்டர். நல்ல பின்னணி இசை குறும்படத்திற்கு வலு சேர்க்கிறது. 9:33 நிமிடம் ஓடக்கூடிய இக்குறும்படம் சீஷீutuதீமீல் 4லு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள். இது குறும்படமல்ல; பாடம்!
– உடுமலை
நூல் அறிமுகம்
நூல்: நீதிமன்றங்களில் தந்தை பெரியார் (வழக்குகள் – வாக்குமூலங்கள் – தீர்ப்புகள்)
ஆசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர்கழக(இயக்க)வெளியீடு,
84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7.
பக்கங்கள்: 224 நன்கொடை: ரூ.150/-
நீதிமன்றங்களின் புனிதத் தன்மைகளை உடைத்து நீதிபதிகளுக்கே நீதி சொன்னவர் தந்தை பெரியார் அவர்களாவார்.
தமது பொது வாழ்க்கையில் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நியாயத்தை மய்யப்படுத்தி தமது போராட்டக் களங்களை அமைத்துக் கொண்டவர்.
போலீஸ் கைதுக்குப் பயந்து ஓடி ஒளியாதவர். தண்டணைக்கு அஞ்சாதவர். அவரின் மேற்கண்ட பண்புகளை விளக்கும் ஆதாரக் களஞ்சியம்தான் இந்த நூலாகும்.
‘இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் _ ஏன்?’ கட்டுரைக்காக தந்தை பெரியார் மீது சுமத்தப்பட்ட இராஜ துவேச வழக்கு, விசாரணை, தந்தை பெரியாரின் தன்னிலை விளக்க அறிக்கை, தண்டனை இவைகுறித்த விமர்சனங்கள் ஆகியவை தொகுக்கப் பட்டுள்ளன.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் மீதான வழக்கு விவரம், வாக்குமூலம், தண்டனை. மேலும் தந்தை பெரியார், தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் ஆற்றிய உரை ஆகியவை தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
‘பொன்மொழி’ வழக்கில் பெரியாரின் வாக்குமூலம் _ தீர்ப்பு _ விடுதலை. இணைப்பாகத் தமிழ்நாடு அரசின் தடை நீக்க ஆணை.
1957இல் சென்னை உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விவரம், பெரியார் கொடுத்த வரலாற்றுப் புகழ்மிக்க வாக்குமூலம் _ தீர்ப்பு.
1958இல் திருச்சியில் நடைபெற்ற குத்துவெட்டு வழக்கின் பின்னணியும் வாக்குமூலமும் தீர்ப்பும் படிக்கப் படிக்க சிலிர்க்க வைக்கும் வரலாற்று ஆவணங்களின் தொகுப்பு. அனைவரும் படிக்க வேண்டிய ஆதாரக் குவியல்.
செயலி
Human Anatomy Atlas 2017
மனித உடற்கூறு தொடர்பான பல படங்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தச் செயலி முற்றிலும் புதுமையான முறையில் மனித உடல் உறுப்புகளையும், அதன் தன்மையையும் முப்பரிமாணத் தன்மையில் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் உடற்கூறு அமைப்பில் 4,600க்கும் மேற்பட்ட அமைப்புகளின் விவரங்களைப் பார்க்கலாம். தசைகள், எலும்புகள், உடற்கூறு தொடர்பான அனிமேசன்கள் இவற்றுடன் இன்னும் பல நுட்பமான விவரங்களும் இருக்கின்றன. மனித உடற்கூறு பற்றி அறிந்துகொள்ள வழிகாட்டுகிறது ஹியூமன் அனாடமி அட்லஸ். மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இச்செயலிக்கு கட்டணம் உண்டு.
https://www.visiblebody.com/
– அரு.ராமநாதன்