கவிஞர் கண்ணதாசனின் இரங்கற்பா
சரித்திரம் இறந்த செய்தி
தலைவனின் மரணச் செய்தி;
விரித்ததோர் புத்த கத்தின்
வீழ்ச்சியைக் கூறும் செய்தி,
நரித்தனம் கலங்கச் செய்த
நாயகன் மரணச் செய்தி;
மரித்தது பெரியா ரல்ல;
மாபெரும் தமிழர் வாழ்வு!
இறக்கவே மாட்டார் என்று
இயற்கையே நம்பும் வண்ணம்
சிறக்கவே வாழ்ந்த வீரன்
சென்றதை நம்பு வேனா?
மறக்கவா முடியும் அந்த
மன்னனை; அவன் எண்ணத்தைத்
துறக்கவா முடியும்; அய்யோ!
துயரமே உனக்கே வெற்றி!
– பெரியார் அவர்களின் மறைவை முன்னிட்டு எழுதிய இரங்கற்பா 1974 ஜனவரி
‘கண்ணதாசன்’ மாத இதழ்