பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அப்சல் குருவின் கருணை மனுவை உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்ததையடுத்து குடியரசுத் தலைவரும் நிராகரித்துள்ளார்.
மேனாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்ததால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதியாகியுள்ளது.
ஏவுகணைகளைவிட வேகமாகச் செல்லும் பால்கன் எச்டிவி-_2 எனும் பெயர் கொண்ட வானூர்தி தொழில் நுட்பத்தை அமெரிக்கா தயாரித்துள்ளது.
நாசா விண்வெளி மய்யத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள கெப்லர் விண்கலம், வியாழனைவிட மிகப் பெரிதாக உள்ள புதிய கிரகத்தைக் கண்டுபிடித்து அனுப்பியுள்ளது. இதற்கு, ட்ரெஸ் – 2பி என்று பெயர் வைத்துள்ளனர்.
பத்ரா மேலணை திட்ட ஒப்பந்ததாரரிடம் பெற்ற ரூ. 14 கோடி லஞ்சத்தை பா.ஜ.தேசியத் தலைவர்கள் 3 பேருக்கு எடியூரப்பா பிரித்துக் கொடுத்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஆர்.வீரமணி புதிய தலைமைச் செயலக கட்டிடம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வழக்குத் தொடுத்ததன் பின்னணியில், புதிய தலைமைச் செயலக கட்டிடம் அதிநவீன சிறப்பு மருத்துவமனையாகச் செயல்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சிரியா நாட்டு மக்களின் கொந்தளிப்பு அதிகரித்துள்ளதால் அதிபர் பஷீர் அல் ஆசாத் பதவி விலக வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கோழி முட்டையின் கருவில் உள்ள டி.என்.ஏ. மூலக்கூறில் சிறிது மாற்றம் செய்து முதலையின் நீளமான தாடை போன்ற அலகினை ஹார்வேர்டு பல்கலைக்கழக உயிரியல் பரிணாம வளர்ச்சி விஞ்ஞானி அர்காத் அபாஷ்னேங் உருவாக்கியுள்ளார்.
புற்று நோய்களுக்கு, கதிர்வீச்சு சிகிச்சையில் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தவிர்க்கும் ரேபிட் ஆர்க் எனப்படும் அதிநவீன கதிர்வீச்சுக் கருவியை சென்னையிலுள்ள வி.எஸ். மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் அய்ஸ்லாந்து நாட்டின் அரசியல் சாசனம் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.