நேயன்
விழிப்பும் எழுச்சியும்
ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து உள்ளத்தை திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை என்று அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் சாதனையை, வரலாற்றைப்பதிவு செய்துள்ளார்கள். மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர்வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?
(நூல்: தமிழர் தலைவர்)
தீண்டாமையை ஒழிக்க வைத்தியர்கள் டாக்டர்கள் போல் முயன்று, தீண்டப்படாதவர் என்பவர்களுக்கு எல்லா இடங்களிலும் சமத்துவம் அளிக்க வேண்டும் என்பது போன்ற சீர்திருத்தங்கள் செய்பவர் பலர். ஆனால், நாங்கள் தீண்டாமை ஏன்? எப்படி வந்தது? என்று பார்க்கிறோம். மதத்தால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்று பதில் வருகிறது. மதத்தால் ஏன் தீண்டப்படாதவர்கள் என்று கேட்கிறோம்? அது சாஸ்திர சம்மதம் என்கிறார்கள். இந்த சாஸ்திரம் எப்படி வந்தது என்றால், அது ஆண்டவன் ஆணை என்கிறார்கள். அப்படியானால், தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவு அளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்கிறோம்.
(விடுதலை 16-04-1950)
ஜாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான். இது உண்மை. வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவில்லை. எப்படியெனில், மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தை மட்டும் ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலால் மிதித்துவிட்டால் அந்தக் காலை மட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுவதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டு விட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன் உடலை உச்சிமுதல் உள்ளங்கால் வரை நனையக் குளித்தால் ஒழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன? தோஷமென்ன? எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு இரகசியமில்லை.
(திராவிடன் 5-10-1929)
இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும், ஜாதி வேறுபாடு ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100-க்கு 100 பேரும் கீதை, மனுதர்மம், சாத்திரம் ஆகியவற்றை நம்பும், ஆதரிக்கும் மதவாதிகளேயாவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும், அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைப்பது போல் பயனற்றே போகும். ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்கோ, ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப் போன்ற உறுதி. உதாரணம் வேண்டுமானால், இது வரையில் தீண்டப்படாதவர்களாய் இருந்து, மனிதச் சமூகத்தில் தீண்டக்கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்தபோது அவர்களின் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான் தீண்டத்தக்கவர்கள் ஆகியிருக்கிறார்கள். ஆதலால் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள்.
(‘குடிஅரசு’ 28-7-1935)
மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லா விட்டால் சுத்தமான துணி கட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் குடியிருக்க வீடு இருக்காது. நெசவாளி இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்க வேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழி ஜாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் ஜாதியாம்; இது நியாயந்தானா?
(விடுதலை 23-6-1962)
உண்மையிலேயே ஜாதியின் பேரால் இந்தத் தொழிலாளி வர்க்கம் என்பது சிருட்டிக்கப் படவில்லை என்று சொல்லப்படுவது உண்மையானால் கக்கூசு எடுக்கிற தொழிலாளி மக்களிலும் நாலு பார்ப்பனர்கள் இருக்க வேண்டுமே. ஆனால் எந்தப் பார்ப்பானாவது கக்கூசு எடுத்ததாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தாழ்த்தப்பட்ட மகன்தானே அந்த வேலையைச் செய்கிறான்!
(விடுதலை 17-5-1954)
விடிய விடியத் தெருவில் பன்றியும் கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக வர அனுமதிக்கிறோம். அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால், பச்சைப் புல்லையும் பருத்திக் கொட்டையையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானா தீண்டாமை? பன்றி, கோழி, எருமை வரும் இடத்தில் மனிதர் வரத் தடை ஏன்?
(விடுதலை 20-5-1963)
மக்களின் சுயமரியாதைக்காகத்தான், மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும், தேசியமும் வேண்டுமே ஒழிய, மற்றபடி கேவலம் இவை மனிதன் வயிறு வளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால், அதற்காக எந்த அரசாங்கமும், அரசியலும், தேசியமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.
(குடிஅரசு 17-02-1929)
போலீசு உத்தியோகங்களைத் தாழ்த்தப்பட்ட வர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்ய வேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாகச் சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்ககூடாது.
(95ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர்)
காரியத்தில் உறுதியாய் நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாகப் பேசுவதான அயோக்கியத் தனத்தால் ஒருபோதும் நாடு முன்னேற முடியாது. புண்ணில், கண்ணில்பட்டால், அதை (வலியை) உடனே தொலைக்க மருந்து முதலியன போட்டு சிகிச்சை செய்யவில்லையா? (அப்படித்தான் இதுவும்) ஆனால், அது வலிக்கக்கூடாது, எரியக்கூடாது என்று மூடி வைத்துக்கொண்டு வாய்ச்சமாதானம் சொல்வது புழுத்துச் சாவதற்கு வழியாகும் என்றார் பெரியார்.
(குடிஅரசு 17-2-1929)
“தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள்போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்கு கண் வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் எனது கண்நோய்க்குப் பரிகாரம்.’’
என்று தாழ்த்தப்பட்டோருக்காக பேசியும், எழுதியும், தனது தொண்டினை புரட்சியாகச் செய்தார் பெரியார். அதில் வெற்றியும் பெற்றார்.
(விடுதலை 15-10-1967)
(சொடுக்குவோம்…)