பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முனிபா மஜாரி. அற்புதமான ஓவியர், சிறந்த பேச்சாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி இணைப்பாளர், மாடல் அழகி இத்தனையும் தாண்டி வேறொரு கோணமும் உண்டு. சக்கர நாற்காலியில் வாழ்க்கையைக் கழிக்கும் முதல் மாடல் அழகி இவர். ஐ.நாவுக்கான பாகிஸ்தானின் தேசியத் தூதர்.
இவருக்கு 18 வயது நிறைந்தவுடனேயே திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமண வாழ்வு சந்தோஷமானதாக இல்லை. மன வருத்தத்தோடு வாழ்நாள்களைக் கடத்திய முனிபா மஜாரிக்கு வேறொரு விபரீதம் நேர்ந்தது. கணவன் ரஹீம்கானோடு காரில் பயணிக்கும் போது கார் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ரஹீம் வண்டியிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். கார் கதவில் மாட்டிக்கொண்ட முனிபாவின் முதுகெலும்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இனி உன்னால் நடக்க முடியாது. உன்னால் இனி ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது என்று டாக்டர் சொல்லியும் மனம் தளராது தன்னம்பிக்கையுடன் காட்சி தந்தார். சில நாள்களுக்குப் பிறகு “நான் ஓவியம் வரைய வேண்டும்’’ என்று சொல்ல “அதெல்லாம் உன் உடல் நிலைக்கு மீறிய செயல்’’ என்று டாக்டர் சொல்லியும் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் ஓவியம் வரைவதில் தம் முழுக் கவனத்தையும் செலுத்தினார். அவரது ஓவியங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன. உலகமே அவர் மீது பார்வையைத் திருப்பியது.
2015இல் உலகின் மிக அதிக ஊக்க சக்தி கொண்ட நூறு பெண்கள் என்ற பி.பி.சி.யின் கருத்துக் கணிப்பில் முனிபா மஜாரி இடம் பெற்றார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, அங்குமிங்கும் நகர்ந்தபடியே மேடையில் இவர் பேசும் பேச்சு, பலருக்கு வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துகிறது. “நான் தயாக முடியாது என்றார் டாக்டர். ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து, டாக்டர் கூறியதை பொய்யாக்கி வருகிறேன்’’ என்று, அவர் கூறும்போது மக்கள் கைத்தட்டி வரவேற்கிறார்கள். தன் நிலையைப் பிடிக்காமல் வேறொரு பெண்ணை மறுமணம் செய்துகொண்ட கணவர் மீது எந்தக் கசப்பும் இல்லாமல் மணமக்களை மனதார வாழ்த்தவும் செய்திருக்கிறார்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆற்றொணாத் துன்பம் இருந்தாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் முயன்று சிகரம் அடைந்திருக்கும் முனிபா மஜாரியை உலகே வாழ்த்துகிறது! நாமும் வாழ்த்துவோம்!