வழக்குரைஞர் கொ.சுப்ரமணியன் B.A., B.L.
திராவிடர் கழகத்தின் தலைவர், ‘தமிழர் தலைவர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கத்தக்க உன்னதத் தலைவர். எளிய குடும்பத்தில் பிறந்து தந்தை பெரியாரின் கொள்கைகளை 10 வயது முதலே ஏற்று, இன்றுவரை அதிலிருந்து அணுஅளவும் பிசகாது, நேர்மை, நாணயம், சமூக அக்கறை, தமிழ், தமிழர் உணர்வு, ஆதிக்க ஒழிப்பு, மனிதநேயம் வளர்த்தல், மற்றவர்களை மதித்தல் அனைத்து உயர் பண்புகளையும் ஒருசேரப் பெற்று வாழ்பவர்.
நான் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து மாணவர் விடுதியில் (ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ் ஷிtuபீமீஸீt சிறீuதீ) தங்கிய போது ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களும், மறைந்த பொருளாளர் திரு.சாமிதுரை அவர்களும் வந்ததில் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. ஆசிரியர் அவர்கள் நல்ல உதவி மனப்பான்மையுடன் எங்களுடன் பழகினார். நான் வழக்கமாக இரவு 8 மணிக்கு தூங்கிவிடுவேன். என்னுடைய வழக்கத்தையும் மாற்றாமல், அதற்கு ஏற்ப ஆசிரியர், நாங்கள் எல்லோரும் சேர்ந்து படிக்கும் நேரத்தைத் தேர்வு செய்தார். “உங்கள் தூக்கத்தை நான் கெடுக்கவில்லை. நாம் காலை 6 மணிக்கு எழுந்து சேர்ந்து படிக்கலாம்’’ என்று சொல்லி அதன்படி நாள்தோறும் ஒழுங்காக காலை 6 மணிமுதல் 8 மணிவரை படித்தோம்.
அங்கிருந்த மற்ற மாணவர்கள் எல்லாம் கடைசி ஓரிரண்டு மாதங்கள் விழுந்து, விழுந்து படித்துக் கொண்டிருக்க, நாங்கள் மூன்று பேரும் வழக்கம் போலவே படித்தோம். நாங்கள் நாள்தோறும் எங்கள் பாடங்களைத் தவறாது குறிப்பிட்ட நேரம் படித்ததால், தேர்வுக்காக கடைசி நேரத்தில் தனியாக ஒன்றும் தயார் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லாமல் போயிற்று.
மாலை கடற்கரையில் நாள்தோறும் நடைப் பயிற்சி மேற்கொண்டு நாங்கள் செல்லும் போது ஆசிரியர் அவர்கள் பகுத்தறிவு கருத்துக்களை எங்களுடன் பரிமாறிக் கொள்வார். சட்டக்கல்லூரி படிப்பும் அதன் பயிற்சியும் முடிந்தபின் ஆசிரியர் அவர்கள் கூறியபடி, இராகுகாலத்தில் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பொறுப்பேற்றோம். ஆசிரியர் அவர்கள் கல்லூரி படிப்பு முடிந்த பின்பும் எங்களுடன் நல்ல தொடர்பு கொண்டு, அய்யா (பெரியார்) அவர்களின் பல நிகழ்ச்சிகளுக்கு எங்களையும் அழைத்துச் செல்வார்.
இந்த உயரிய தலைவரின் தொடர்பில், நட்பில் நான் இன்றளவும் இருப்பதைப் பெருமையாக எண்ணுகிறேன். கி.வீரமணி அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து பணியாற்ற வாழ்த்துகிறேன்.