முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
சிறிய உருவம் அறிஞர் அண்ணா போல் – ஆனால் மிடுக்கான, கம்பீரமான தோற்றம். பார்த்தவுடன் எடை போட்டுவிடும் துலாக்கோல் பார்வை. அதை விட மானுடம் நேசிக்கும், மனித நேயம் மிக்க இதயம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசாமல் இதமாகக் காயப்படுத்தியவர்களையும் வருடிச் செல்லும் வாய்ச்சொற்கள். மாற்றாரின் முறையற்ற ஒழுங்கற்ற தாக்குதலையும் தாங்கும்படி தொண்டர்களை ஆற்றுப்படுத்தும் அரிய பண்பு.
இதெல்லாம்தான் ஆசிரியர் கி.வீரமணி என்றாலும் ஆசிரியரை நுணுக்கமாகப் பார்வையிட்டவன் என்ற வகையில் ஆசிரியர் கி.வீரமணி ஓர் அதிசயம் – ஒரு பேரதிசயம். இன்னும் மேலே சென்று உரைத்தால் எட்டாவது அதிசயம்.
சொல்லேருழவராய்ப் பத்து வயதில் மேடையேறிய நம் ஆசிரியர் – படித்த படிப்பு, பெற்ற பட்டம், பார்த்த வேலை ஆகியவற்றை விடுத்துத் தந்தை பெரியார் என்னும் கப்பலின் மீகாமனாக மாறியது அதிசயம். தந்தை பெரியார் இயக்கத்தால் புகழ் பெற்ற மனிதர்கள் தாம் எத்தனை, எத்தனைப்பேர்.
அத்தனை பேரும் தந்தை பெரியாரிடம் தாக்குப்பிடிக்க முடியாமல், ஏதோ ஒரு காரணம் காட்டி – மாறுபட்டு – வேறுபட்டுப் பிரிந்து சென்ற அந்தக் களத்தில் கடைசிவரை தந்தை பெரியாரை விட்டு விலகிடாத, ஆசிரியர் கி.வீரமணி ஓர் அதிசயம்தான். நான் யார் தெரியுமா? நான் சிறந்த சிந்தனையாளன். நான் கடலூரில் தலைசிறந்த வழக்கறிஞர். நான் தலை சிறந்த பொருளாதாரச் சிந்தனையாளன். நான் அரசியல் மட்டுமல்ல அரசியல் சட்டமும் தெரிந்தவன் என்று தவறியும் கூட உரைத்திடாது, பெரியாரின் தொண்டன் மட்டுமே என்பதைப் பெரியார் காலம் முழுதும் மட்டுமல்லாது பெரியாரின் காலத்தின் பின்னும் கூறிவருபவர் என்பதும், எனக்குச் சொந்தப் புத்தி தேவையில்லை பெரியார் தந்த புத்தி போதும் என உள்ள சுத்தியோடு உரைத்து வருபவர் என்பதும் ஓர் அதிசயம் தான். தந்தை பெரியாரிடம் கற்ற பாடத்தை மறக்காத மாணவராய் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இவர் விளங்கி வருவதும், செயலில் காட்டி வருவதும் அதிசயம். உணவு விஷயத்தில் உடன் வந்தவர்கள் உணவு உண்டார்களா என்று கவனித்து நோக்கும் உயரிய பண்பும் உதவியாளர் ஓட்டுநர் என்று வேறுபாடு காட்டாது சமமாக வைத்து உண்பதைக் காண்பதும் அதிசயம்தான்.
குரங்கு குட்டியைக் கவ்விக் கொண்டே செல்வது போல் கழகக் கொள்கை என்னும் குட்டியைக் கைவிடாது பற்றிக் கொண்டு, தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வைத்திருந்த நம்பிக்கைக்கு பங்கமோ, பழுதோ அணுவளவும் நேராது – நடைபோட்டு வரும் அதிசயம் கண்டு வியக்கிறோம்.
எங்கே சென்றாலும், எங்குக் கூட்டம் பேசினாலும், கொடு விடுதலைக்கு இரண்டு சந்தா என்று விடாமல் மறந்து விடாமல் பற்றிக் கேட்டுக் கொள்வது ஓர் அதிசயம்.
தந்தை பெரியாருடைய பிறந்த நாளை மட்டும் கொண்டாடினால் போதும், தன் பிறந்த நாளே கொண்டாட வேண்டாம் என்றவர். 75ஆம் அகவையில் தலைவர் கலைஞரின் அன்புக் கட்டளைக்காக ஏற்றார். மேடையில் ஆங்கிலத்தில் பேசும் பேச்சை அற்புதமாக இவர் லாவகமாக மொழிபெயர்க்கும் திறனை உணர்ந்து வியந்து பாராட்டியவர் – சாதாரணமானவர் அல்லர் – ராஜா சர்முத்தையாவேள் ஆவார்.
ஜெயலலிதா அம்மையார் மதித்துப் போற்றியதுடன் அண்ணன் என்று அழைக்கத் தவறியதுமில்லை என்பதும் அதிசயம் தான். அவரைக் கொண்டே 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்ததும் அதிசயம்தான். அந்தச் சட்டமுன்வரைவை உருவாக்கியவரே இவர்தான்! ஆசிரியர் வீரமணியிடம் விஞ்சியிருப்பது மனித நேயம் என்றுதான் கூற வேண்டும். என் மகன் மருத்துவமனையில் சேர்க்கப் பெற்று உடல் நலம் பெற்றான். இன்றுவரை என் துணைவியார் திருமதி. இராஜம் எப்போது ஆசிரியரை விழாக்கள், பொது நிகழ்வுகளில் சந்தித்தால் ஆசிரியர் கேட்கும் முதல் கேள்வி என்னம்மா, உங்கள் பையன் உடல் நலமா? என்று மறக்காமல் கேட்பது இன்றும் வியப்பாக இருக்கும். மாபெரும் செல்வரான எம்.ஏ.எம். ராமசாமி யாரும் எதிர்பாராத வகையில் சடாரென தாம் ஆசிரியர் காலைத் தொட்டு வணங்கியபோது, ஆசிரியர் பதறிப்போய், தவறு, தவறு என்று கூறும் போது எம்.ஏ.எம்.ராமசாமி ஏன் தவறாக எண்ணுகிறீர்கள்? பெரியாரை வணங்குவதாக எண்ணியே உங்களை வணங்குகிறேன் என்று பதில் சொன்ன போது, ஆசிரியர் புகைப்படக்காரர்களைத் தயவு செய்து இந்தப் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆயினும் இச்செய்தி ஆனந்த விகடனில் ‘மாட்சிமை பொருந்திய நிகழ்வு’ என்று 23 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. இவரது வாழ்விணையர் 59 ஆண்டுக்கால உறவின் நெருக்கமுடைய அப்பெண்மணி அதிசயத்திலெல்லாம் அதிசயம்.
அய்யாவைப் போல் இவரும் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கி வெளியே போனார் என்று இவருடைய வரலாற்றில் எங்கும் நான் கண்டதில்லை. தந்தை பெரியார் எவ்வளவு பெரிய துடுக்கான, சங்கடமான கேள்விகளுக்கு எல்லாம் மேடையிலோ, நேரிலோ பதில் சொல்லி இருக்கிறாரோ அது போலவே இவரும் எவரேனும் கேள்வி கேட்டால் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் ஓடி ஒளிந்து சென்னைக்குத் திரும்பிவிடும் பழக்கமும் இவரிடம் என்றும் கிடையாது.
எனவேதான் இப்படி அதிசயத்திலும் அதிசயமாக விளங்கும் நம் ஆசிரியர் தமிழர் தலைவரை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எட்டாவது அதிசயம் என்கின்றோம். எட்டாவது அதிசயமே தவிர இவருடைய அதிசயங்கள் நமக்கு எட்டிய அதிசயங்கள்.