ஜாதி-_தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பவற்றை வலியுறுத்தி இரண்டு நாள் மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாநாடு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கத்தில் (25.11.2017) இரவு 6 மணிக்குத் தொடங்கி நடத்தப்பட்டது.
முதல்நாள் மாநாடு
மாநாட்டின் முதல் நாள் முதல் நிகழ்வாக “ஜாதி, தீண்டாமை ஒழிப்பிற்கு முதன்மை _ பிரச்சாரமா? சட்டம் இயற்றலா?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் நடுவராகவும், ‘பிரச்சாரமே’ என்கிற அணியில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பா.மணியம்மை, பொன்னேரி கு.செல்வி ஆகியோரும், ‘சட்டம் இயற்றலே!’’ என்ற அணியில் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, வழக்குரைஞர் அ.அசோக், தோழர்.மெ.சே.மதிவதனி ஆகியோரும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.
இரண்டாம் நிகழ்வான ஜாதி_ தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கில், வரவேற்புரையை திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் ஆற்ற, கருத்துரையாக, திராவிடர்கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்கள், “பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை’’ என்னும் தலைப்பில் “பெண்கள் அர்ச்சகர்களாக ஆகக் கூடாது என்று எந்த ஆகமத்திலும் சொல்லப் படவில்லை. எனவே, ஆசிரியர் தலைமையில் இவ்வுரிமையை போராடிப் பெற்றே தீருவோம்’’ என்று சூளுரைத்தார்.
எழுத்தாளர் பழ.கருப்பையா அவர்கள், “தமிழில் வழிபாட்டு உரிமை’’ என்னும் தலைப்பில் “கடவுள் இல்லை என்பது தந்தை பெரியார் அவரின் இறுதி இலக்கு _ அதுவரை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும்’’ என பளிச்சென்று கூறினார்.
கவுசல்யா சங்கர் அவர்கள், “ஜாதி வெறியும், ஆணவப் படுகொலையும்’’ என்ற தலைப்பில் தன் காதலன் தன் பெற்றோராலேயே படுகொலை செய்யப்பட்டதை உருக்கமாய்ப் பதிவு செய்தார். “ஜாதி ஒழிப்புதான் இதற்கு சிறந்த வழி’’ என்ற அக்கினிச் சொற்களோடு முடித்தார்.
வா.அரங்கநாதன் அவர்கள், “அர்ச்சகர் பயிற்சியும், நியமனமும்’’ என்னும் தலைப்பில் நேர்த்தியாய்ப் பேசியதோடு பார்ப்பனர்களின் ஆபாச சேட்டைகளை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எடுத்தார்.
மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன் அவர்கள், “சமூகவியலும் தந்தை பெரியாரும்’’ எனும் தலைப்பில் தந்தை பெரியாரின் சமூகப் போராட்டங்களை படம் பிடித்துக் காட்டினார்.
இதழாளர் புனிதபாண்டியன் அவர்கள், “ஜாதி ஒழிப்பும் சமூக ஜனநாயகமும்’’ எனும் தலைப்பில், கோயில் கருவறைக்குள் பல்லி, கரப்பான் பூச்சி செல்லலாம். மனிதன் செல்லக்கூடாதா? என தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை தோலுரித்துக் காட்டினார்.
மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் அவர்கள், கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றியபோது, உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகளை எடுத்துக்கூறி சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ச.இன்பக்கனி நன்றி கூறினார். ஆ.வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார்.
இரண்டாம் நாள் மாநாடு
மாநாட்டின் இரண்டாம் நாள் 26.11.2017 நிகழ்ச்சியில் வரவேற்புரை மற்றும் தொடக்கவுரையை திராவிடர் கழகதுணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்த்த செந்தமிழவேள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், அ.பாலகிருஷ்ணன் (மத்திய குழு உறுப்பினர், சி.பி.எம்.), அ.கணேசமூர்த்தி (பொருளாளர், மதிமுக), மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன், பேரா.சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விசிக), டி.கே.எஸ்.இளங்கோவன் (மாநிலங்களவை உறுப்பினர், திமுக), தா.பாண்டியன் (தேசியக்குழு உறுப்பினர், சி.பி.அய்) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள்:
¨ தெற்கு நத்தம் சித்தார்த்தன்_பெரியார் நேசன் குழுவினரின் “திராவிட வீரன்’’ என்ற வரலாற்று நாடகம் நடைபெற்றது.
¨ ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து விரைவில் அரசு வேலை பெற வாழ்த்துகளை தெரிவித்தார்.
¨ அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி எழுதிய “69% இடஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?’’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரை:
கேரள மாநில அரசின் செயல்பாட்டைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும். இல்லையெனில் தொடர் பிரச்சாரம், சிறை நிரப்பும் போராட்டம், நீதிமன்ற நடவடிக்கை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்தார். இம்மாநாட்டில், ஜாதியை_தீண்டாமையை ஒழிக்க 10 அம்ச திட்டங்களை உள்ளடக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவாக மாநில மாணவரணி து.செயலாளர் நா.பார்த்திபன் நன்றி கூறினார்.
– இனியன்