1926ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி சிவன் கோயிலில் வேதம் ஓதி அர்ச்சனை செய்தபின் தேவாரம் படிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பார்ப்பனர்கள் அந்தக் கோயில்களையே புறக்கணித்தனர். மேலும் சங்கரன்கோயிலில் தேவாரத்துக்கு தடையே வாங்கினர். அவை பற்றிய செய்திகள்:
இதுகூட வகுப்புத் துவேஷமா?
திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம். அங்கு வேத பாராயணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். கோவிலில் தேவாரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது?
தேவாரம் படிக்காததினால் மோட்சம் கெட்டுப் போய்விட்டது என்பதாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராயணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை. ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டுப் பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.
– ‘குடிஅரசு’ செய்திக்குறிப்பு, 21.11.1926
தேவார பாராயணத்திற்கு தடை உத்தரவு (இஞ்சங்ஷன்)
நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத்துடனும் ஒத்துழை யாமையும் பகிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன்கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக் கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்தரவு வாங்கி விட்டார்களாம். கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங்காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டு விட்டார்கள் என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயிருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள்கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்து மதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப்பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத் துரோகம் போலும்!
– ‘குடிஅரசு’ செய்திக்குறிப்பு, 05.12.1926
ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்
தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத்தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவஸ்தான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த்தாக்களும் உத்தரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்த்ரீகள், புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக்கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக்கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷ மடைகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள் பகிஷ்காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதிகாரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிகளோடும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங்களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மையானதுமாக விளங்கும்.
– ‘குடிஅரசு’ செய்திக்குறிப்பு, 12.12.1926