திருப்போருர் அருகேயுள்ள கண்ணகப்பட்டு குமரன் நகரில் குபேர விநாயகர் கோவில் உள்ளது. ஆகஸ்ட் 8 அன்று இரவில் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உற்சவர் சிலையைத் தூக்க முயற்சித்து, முடியாததால் அங்கிருந்த உண்டியலைத் திருடிச் சென்றுள்ளனர்.
வேளச்சேரி திரவுபதியம்மன் கோவில் முதல் தெருவில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆகஸ்ட் 16 அன்று காலையில் கோவில் பொறுப்பாளர் பொன்னுசாமி வழக்கம்போல் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டதைப் பார்த்துள்ளார். உண்டியலில் இருந்த பணம், பக்தர்கள் செலுத்திய தங்க வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளன என்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் அருகயுள்ள சோழவரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிறீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆகஸ்ட் 17 அன்று காலையில் அர்ச்சகர் சிறீதர் பட்டாச்சாரியார் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த வரதராஜர், சிறீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் சிலைகள் திருடப்பட்டு இருந்ததைப் பார்த்துள்ளார். காவல்துறையினர் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலத்தில் வசிக்கும் ஜாஸ்மின் (30) ஆகஸ்ட் 14 அன்று காலையில் அருகிலிருந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர், ஜாஸ்மின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரைப் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார்.