பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகள் என்னுள் தாக்கமானதற்குக் காரணம் சிதம்பரம் சு.ஊ.கூ பள்ளியின் தமிழாசிரியர் திரு.நாமு.மாணிக்கம் (செட்டியார்). அவர்தான் பள்ளியில் இளங்கோ மன்றத்தைத் துவக்கியவர். வாரம்தோறும் ஒவ்வொரு பேச்சாளரை அழைத்து வருவார். அறிஞர் அண்ணாவிலிருந்து டி.கே.சீனுவாசன் வரை அழைத்து வந்து பேச வைத்திருக்கிறார்.
அந்தத் தமிழாசிரியர் திரு.நாமு.மாணிக்கம் செட்டியார்தான் திரு.கி.வீரமணி அவர்களை சிறு வயதிலேயே கோடை விடுமுறையில் பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று மேசை மீது நிற்கவைத்து பேசச் சொல்வார்கள்.
அந்நாளில் கள்ளக்குறிச்சி, சிதம்பரம் போன்ற பல நகரங்களுக்கு திரு.கி.வீரமணி அவர்களை பேசுவதற்கு அழைத்துச் செல்வார்கள். அந்த நகரங்களில் அவரை ஊர்வலமாகக் காரில் அழைத்துச் செல்லும்போது நான் பார்த்திருக்கிறேன். அந்த ஊர்வலத்தில் அவர் என்னைப் பார்த்து விட்டால் ஒருவரை விட்டு அழைத்து வரச்சொல்வார். பிறகு மேடையில் அமர்ந்து அவருடைய பேச்சுத் திறனை ரசித்துப் பார்த்திருப்பேன். 16 வயதிலேயே எனக்கு ஒரே தலைவர் பெரியார்தான், திராவிடர் கழகமே என் இயக்கம் என முழங்கியவர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்; சுயநலமில்லாதவர், சுறுசுறுப்பானவர், ஊதியம் கருதாமல் உழைப்பவர் என இவரைப் பற்றி தந்தை பெரியார் கூறியவை எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பெரி.சிவனடியார் என்பவர் எனது நண்பர். பொன்னி மாத இதழில் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள் வரும். அப்போது ஆசிரியர் கி.வீரமணி, கோகலே மண்டபத்தில் பேசியதைக் கேட்டுவிட்டு, என்னிடம் இந்த வயதிலேயே மிக நன்றாக பேசுகிறார் என்று அவர் ரசித்ததை என்னுடன் பகிர்ந்து கொள்வார்.
இயக்கம் என்பது அனைவருக்கும் சொந்தம்; என்னுடைய சொத்து அல்ல, நான் அல்ல; நாம் என்பதே பெருமை, மிகவும் அடக்கத்துடன் எனக்கு, சொந்த புத்தியைவிட பெரியார் தந்த புத்தியே பலம் என பல சமயங்களில் அவருடன் உரையாடும்போது அவர் கூறியவை இன்றும் என் நினைவுகளில் நிழலாடுகின்றன. ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தவர். பெரியார் விட்டுச் சென்ற பல பணிகளை நிறைவேற்றியவர். நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வைத்தவர். பெண்கள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக திட்டங்களுக்காக போராடியவர். சமூக சீர்திருத்தக் கருத்துகளை பட்டிதொட்டி எல்லாம் இன்றும் கொண்டு சேர்த்துக் கொண்டிருப்பவர்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக இவர் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன், முன்னாள் ஞிநிறி திரு.அ.இராஜமோகன் மிறிஷி., அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள் என்ற நூலின் முதல் ஐந்து பாகம் வரை எனக்கு குறிஞ்சிப்பாடிக்கு பார்சல் அனுப்பியிருந்தார். அதனுடன் ஒரு கடிதமும் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், இந்தப் புத்தகங்கள் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்கள். இவை கழக, கட்சிப் புத்தகங்கள் இல்லை; ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கிய நூல்கள், எல்லோரும் படிக்க வேண்டிய நூல்கள், எல்லோரிடத்திலும் இருக்க வேண்டிய நூல்கள். நீங்கள் படித்த பிறகு எனக்குக் கடிதம் எழுதுங்கள் எனக் கூறியிருந்தார். இதைப் படித்தவர் உலகத்தையே ஒரு முறை சுற்றியதற்குச் சமம். பல்லாயிரம் பேர் படித்துப் பயன் பெறுகின்றனர். இந்த நூலை கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்க வேண்டும், ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட பொது நூல், வாழ்வியல் சிந்தனைகள். அந்தக் காலத்தில் விவரம் தெரிந்தவர்கள் என்பதற்காக, நான் பாரதம் படித்தவன், என்னிடம் ஒன்றும் செல்லாது என்று பெருமையாகக் சொல்லிக் கொள்வார்கள். பிறகு வந்தவர்கள், நான் ஷேக்ஸ்பியரை கரை கண்டவன். என்னிடம் ஒன்றும் நடக்காது என்பார்கள். நாங்கள் இப்பொழுது சொல்வதெல்லாம், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் நூல்களைப் படித்தவர்கள், எங்களிடம் உங்கள் ஜம்பம் பலிக்காது என்போம்.
என்னுடைய 90ஆவது அகவை நிறைவு விழாவில் அவர் வாழ்த்திய வரிகள், நான் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் படித்து மகிழும் ஓர் அருமையான வாசகர் திரு.பசுநாதன் அவருக்கு வயது 90. வாழ்த்துகள். நம் அனைவர் வாழ்வும் ஆயுள் காலத்தால் அளக்கப்படுவதை விட அவர்களால் கட்டிக்காக்கப்படும் அறிய பண்புகளாலும்; உறவு மனப்பான்மையினாலும் மனித நேயத்தாலுமே அளக்கப்படல் அவசியம். அவ்வகையில் அவரது எளிமையும், இனிமையும் கலந்த வாழ்வு பிறருக்கு எடுத்துக்காட்டான வாழ்வாகும் என வாழ்த்தியிருந்தார்.
என் மகன் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வாகி அன்று மறுநாள்தான் முதன்முதல் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அந்த நிகழ்ச்சிக்கு முன்பாக தஞ்சை கரந்தட்டான் குடியில் உள்ள பெரியார் இல்லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களைக் காணச் சென்றோம். திரு.கி.வீரமணி அவர்கள் என் மகனை பெரியாரிடத்தில் அழைத்துச் சென்று மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் மருத்துவக் கல்லூரியில் சேருகிறான் என மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தார். தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்துகளுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பின் அரசுப் பணியில் பணியாற்றி மருத்துவத் துறையில் இணை இயக்குநராக பணி ஓய்வு பெற்று இன்றும் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு திரைப்படத்தில் குறிப்பிடும்போது சொந்தக் காலில் நின்றால் மட்டும் போதாது, நின்ற இடத்திலேயே சறுக்கி விடாமல் நிற்க வேண்டும் என்பார். அதற்கேற்ப திராவிடர் கழகத்திற்கு சென்று, நின்று, இன்று 85 அகவை காணும் ஆசிரியர் கி,வீரமணி அவர்கள் நூற்றாண்டும் கடந்து பல்லாண்டு நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் வாழ வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
– திரு.கோ.பசுநாதன் B.A.,B.Ed.,
ஆசிரியர் ஓய்வு, குறிஞ்சிப்பாடி