ஆடை உருவ உருவ வளருமா?
ஒரு சமயம் துர்வாசர் நீராடிக் கொண்டிருக்கையில் நீரின் வேகத்தால் அவரது ஆடை இழுத்துச் செல்லப்பட்டது.
இதை அறிந்த திரௌபதி தன் பட்டு உடையில் ஒரு பகுதியைக் கிழித்து நீரில் பிரவாகத்தில் விட அதனை அணிந்து துர்வாசர் கரையேறினார். தக்க சமயத்தில் உதவிய திரௌபதியைப் போற்றிப் புகழ்ந்தார். மேலும் அவளுக்கொரு இக்கட்டான நிலையில் அவள் மானம் காக்க வஸ்திரம் ஆயிரம் ஆயிரமாய் வளரும் என வரமளித்தார்.
(திரௌபதியின் வஸ்திராபரணத்தின் போது இந்த வரம் வெகுவாக உதவியது.) என்கிறது இந்து மதம். நெய்யப்பட்ட ஆடை எந்த அளவோ அது நீளாது. அப்படியிருக்க திரௌபதி கட்டிய புடவை மட்டும் உருவ உருவ வளர்ந்து கொண்டேயிருந்தது என்பது அறிவியலுக்கு ஏற்றதா? இப்படிக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
சொல்லிவிட்டு ஒருவருக்குப் பிள்ளையாகப் பிறக்க முடியுமா?
நர்மதா நதிக்கரையில் சாண்டில்ய குலத்தில்பிறந்த வேதியர் விஸ்வநாதன். அவர் மனைவி சட்சீகமதி. தன் மீது ஈடில்லா பக்தியுடன் தன் மகிமைகளைச் சுலோகங்களால் துதித்த விஸ்வநாதன் மீது உவகை கொண்ட சிவனார் அவருக்குத் தரிசனம் தந்து தானே அவளுக்கு மகனாகப் பிறப்பதாகக் கூறினார் என்று கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
தாய் தந்தை உடலுறவு கொள்வதன்மூலம், ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினையணுவும் சேர்ந்து கருத்தரித்து பிள்ளை பிறக்கும். அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்.
ஆணின் விந்தணுவில் உள்ள ஙீ அல்லது சீ அணு சினையணுவுடன் சேர்வதைப் பொறுத்து ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா? என்பது தீர்மானிக்கப்படுகிறது.
அறிவியல் உண்மை இப்படியிருக்க, சிவபெருமான் ஒருவனிடம் சொல்லிவிட்டு, அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான் என்று கூறுவது அறிவியலுக்கு ஏற்றதா? அசல் முட்டாள்தனமான கருத்து அல்லவா?
பிள்ளையாகப் பிறந்துவிட்ட சிவன் வரம் கொடுக்க வந்தது எப்படி?
அவ்வாறே அந்தத் தம்பதியருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்குக் கிருகபதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஒரு நாள் நாரத முனிவர் விஸ்வநாதனிடம் வருகை புரிய நாரதரை வணங்கி தன் மகனை ஆசீர்வதிக்குமாறு வேண்டிட நாரதர் மனம் வாடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வேதியர் அதற்கான காரணத்தைக் கேட்க நாரதர், “அந்தப் பையன் ஆறு ஆண்டுகளே உயிருடன் இருப்பான், இடி மின்னலில் தாக்குண்டு இறப்பான் என்றார்.
அப்போது வேதியர் சிவபெருமானே தனக்குப் பிறந்திருப்பதாகக் கூறினார். நாரதர், “அந்தக் காசி விஸ்வநாதரையே நம்பு. அவர் உனக்குக் கருணை புரிவார்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
இந்த விவரம் அறிந்த கிருகபதி தந்தையிடம், “காசி விசுவநாதரின் கருணையால் அவர் அருள் பெற்று நீண்ட நாள் வாழ்வேன்’’ என்று கூறிவிட்டு தந்தையின் அனுமதி பெற்று காசிக்குப் புறப்பட்டுச் சென்றான்.
கிருகபதி தவம்
காசியில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் மேற்கொண்டான். அவனுக்கு அருள் செய்ய நினைத்த பரமன் அதற்கு முன் அவனைச் சோதிக்க எண்ணினார். கிருகபதி முன் இந்திரன் போல் தோன்றிட, அவன் தான் சிவபெருமானைக் குறித்தே தவம் செய்வதாகவும், தனக்கு வேண்டும் வரத்தை இந்திரனால் அளிக்க முடியாது என்றும் கூறி தவத்தைத் தொடர்ந்தான் கிருகபதி.
இந்திரன், “நானே வந்து கேட்டும் உனக்கு அகந்தையா?’’ என்று கூறி வஜ்ராயுதத்தால் அழித்து விடுவேன் எனக் கோபம் கொள்ள, கிருகபதி தான் ஒரு சிவபக்தன் என்றும், தன்னை வஜ்ராயுதம் ஒன்றும் செய்யாது என்றும் கூறினான். அவன் மன உறுதிக்கு மகிழ்ந்த சிவபெருமான், உமையுடன் ரிஷிப வாகனத்தின்மீது காட்சி தந்தருளினார். கிருகபதி அவரை வலம் வந்து வணங்கித் துதித்தான்.
சிவன் பிரத்தியட்சம்
அப்போது சிவபெருமான், “உன் தவத்தை நான் மெச்சினேன். நீ அழிவின்றி என் உடம்பான அக்கினியாய்த் திகழ்வாய். மற்றும் தேவேந்திரனுக்கும், எம தர்மனுக்கும் இடையே உள்ள திக்குக்குத் தலைவனாக இருப்பாய். சிவனடியார்கள் உன்னை கிருகபதி என்று காரிகபத்தியில் வழிபடுவர்’’ என்றருளி மறைந்தார் என்கிறது இந்து மதம். சிவன் விஸ்வநாதனுக்கு மகனாகப் பிறந்துவிட்டபின், வரம் கொடுக்க வந்த சிவன் யார்? மகனாகப் பிறந்துவிட்ட சிவன் அந்த மகனுக்கே வரம் கொடுக்க எப்படி வரமுடியும்? இது என்ன “டபுள் ஆக்டா?’’ இப்படிப்பட்ட “உல்டா’’ மதம்தாம் அறிவியலுக்கு அடிப்படையா?
ஆதிசேஷன் பலராமனாகப் பிறந்த பின் பூமியைத் தாங்கியது யார்?
மன்னன் குகுத்மி தன் மகள் ரேவதியுடன் காத்திருந்தான். சங்கீதம் முடிந்து சபை கலையும்போது தான் குகுத்மியைக் கண்ட பிரம்மா அவர்கள் அங்கு வந்த காரணத்தைக் கேட்க, மன்னன் வந்த காரணத்தைக் கூறித் தன் மகளுக்கு ஏற்ற மணமகன் யார்? என்று வினவ பிரம்மா, “பூலோகத்தில் ஆதிசேஷன், பலராமன் என்ற பெயரில் பிறந்துள்ளான். அவனுக்கு உன் பெண்ணைக் கொடுத்துத் திருமணம் செய்து வை’’ என்றார் என்கிறது இந்து மதம். ஆதிசேஷன்தான் பூமியைத் தாங்குவதாக இந்து மதம் கூறுகிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் பலராமனாகப் பிறந்து பூமிக்கு மேல் வந்த பின் பூமியை தாங்கியது யார்? ஆக, இந்து மதக் கருத்துகள் எல்லாமே பொய், கற்பனை. அதனால்தான் முன்னுக்குப் பின் முரண். உண்மை இப்படியிருக்க இந்த இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையென்பது அசல் மோசடியில்லவா?
– சிகரம்