ஆசிரியரோடு பணியாற்றுவதை அரிய பெருமையாகக் கருதுகிறேன்

டிசம்பர் 01-15

 

பெரியாரின் சீடரான டாக்டர் கி.வீரமணி பெரியாரது கோட்பாடுகளைப் பற்றி பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாமல், சாக்ரடீசை பிளாட்டோ செய்தது போல பெரியார் அவர்களை ஓர் அமைப்பாக அதுவும் உலகளாவிய அமைப்பாக ஆக்கியவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். தீர்ப்பாயத்தின் உறுப்பினராக, அறக்கட்டளை சார்ந்து நான் எழுதிய நியாயமான தீர்ப்பு அறக்கட்டளைக்கு வரிவிலக்குப் பெற்றுத் தந்தது. இதன்மூலம் என்னை பெரியார் கொள்கை ஆதரவாளராக மற்றவர்கள் நினைத்தது போலவே திராவிடர் கழகமும் நினைத்து, சந்தா கட்டாமலே விடுதலை நாளேட்டை எனக்கு அனுப்பி வைத்தது.

ராஜரத்தினம் என்ற பெயருக்குப் பதிலாக ராஜமாணிக்கம் என்ற பெயரில் விடுதலைப் பத்திரிகை எனக்கு வந்து கொண்டிருந்தது. பெரியார் இயக்கத்துடன் எனக்கு உள்ள தொடர்பின் காரணமாக எனது பதவி உயர்வு வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அத்தகைய ஒரு சங்கடத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக எனது பெயர் மாற்றப்பட்டு, ஆனால் சரியான விலாசத்துக்கு விடுதலை அனுப்பப்பட்டு வந்தது.

நான் ஓய்வு பெற்ற பிறகு, பெரியார் திடலில் உள்ள இந்திய குடியாட்சிப் பணி பயிற்சி மையத்தில் ஒரு விரிவுரையாளராகப் பணியாற்ற எனக்கு சம்மதமா என்று அவர் என்னிடம் கேட்டார்.  அப்பணியை  நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டதுடன், ஆசிரியரின் ஆசிரியரான பேராசிரியர் ஏ.ராமசாமியையும், பெரியாரைப் பின்பற்றிய பேரா.நன்னன் அவர்களையும்  சந்தித்தேன்.  அவர்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. சதர்ன் எகனாமிஸ்ட்ப் என்ற மாத பத்திரிகையை புதுப்பிப்பதில் பேரா. ராமசாமிக்கு நான் உதவி செய்வதாக இருந்தது.  இழப்புக் கேடாக அவரது இறப்பினால், அத் திட்டத்திற்கு இடையூறு நேர்ந்தது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறங்காவலர்களில் ஒருவராகப் பணியாற்ற வேண்டும் என்று ஆசிரியர் என்னைக் கேட்டுக் கொண்டதற்குப் பிறகும், சிறிது காலம் கழித்து பெரியார் மணியம்மை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளராக இருக்கும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டதற்குப் பிறகும், திடலுடனான எனது தொடர்பு வியப்பளிக்கும் வகையில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வந்தது. நிறுவனத்தின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விவகாரங்களில் மேலும் மேலும் ஈடுபட நேர்ந்த நான் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்ட போது அதன் நிறுவாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் ஆனேன். பல்வேறு விவகாரங்களைப் பொருத்த வரை, ஆசிரியருடன் நான் கொண்டிருந்த சாதாரணமான தொடர்பையும், பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது. இந்தக் கால கட்டத்தில்தான்  தகுதி வாய்ந்த அவரது புகழைப் பற்றி அறிந்து போற்றிப் பாராட்டுபவனாக நான் ஆனேன்.

ஆசிரியர் பன்முகத் தன்மை கொண்ட ஒரு தனித் தன்மை வாய்ந்த மனிதர். புகழ் பெற்ற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்து பெரியாரைப் பற்றி எழுதுவதில் திறமை வாய்ந்தவர் என்பதுடன், தனது இளம் வயது முதல் இதுநாள் வரை பெரியார் இயக்கத்துடனான செயல்பாடுகளில் கொண்டிருந்த மிக நெருங்கிய உறவின் காரணமாகவும் பெரியார் அவர்களுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாகவும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தன் வரலாற்று நூலிலும், வாழ்வியல் சிந்தனைகள் என்ற தனது நூலிலும் ஆசிரியர் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார். பெரியார் இயக்கத்தின் தொடக்க காலத்தைப் பற்றி மட்டுமல்லாமல், பல்வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த திரு.கு.காமராஜ், திரு சி.என். அண்ணாதுரை,  டாக்டர் மு. கருணாநிதி, டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன், செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகிய முதல்வர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலத்திலும் நடைபெற்ற தமிழ்நாட்டு வரலாற்றின் மீது ஒளி பாய்ச்சும் ஆசிரியரின் அனுபவங்களை மிகவும் விரும்பிப் படிப்பவன் நான். குறிப்பாக எந்தக் கட்சியுடனும் உறவு பாராட்டிக் கொண்டிராமல்,  பாராட்ட வேண்டியவர்களை சிறிதும் தயக்கமின்றி பாராட்டியும், தேவையான நேரங்களில் கண்டிக்க வேண்டியவற்றை கண்டித்தும் வருபவர் நமது ஆசிரியர்.

தனது கருத்துகளில் அவர் உறுதியாக இருந்த போதிலும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நட்புறவு கொண்டவராகவே அவர் பழகி வருகிறார். எடுத்துக்காட்டாக, அரசியலில் தனக்கு நேர் எதிராக இருந்த போதிலும் குமரி அனந்தன் தனது நெருங்கிய நண்பர் என்று அண்மையில் தான் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் கூறிய ஆசிரியர்,  மதுவிலக்குக் கொள்கையின் பால் அவர் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுக்காக அவரைப் பாராட்டினார்.

எந்த ஒரு பிரிவிலும் ஆசிரியரை வகைப்படுத்துவது அவ்வளவு எளிதான செயலல்ல.  திரு கலிப்பூங்குன்றன், திரு சரவணன் மற்றும் பலரது  திறமையான உதவியுடன் திறம்பட விடுதலை ஆசிரியராக செயல்படும் அவரது முத்திரை அதன் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. அவரால் எழுதி பதிப்பிக்கப் பட்டுள்ள எண்ணற்ற நூல்கள் அவரை ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற நிலையில் இருந்து பதிப்பாளர் என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளன.

இந்து மத ஆலயங்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பெரு முயற்சி கர்நாடக, கேரள மாநிலங்களில் பயனளித்து நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது; விரைவில் தமிழ்நாட்டிலும் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  தனது ஆசானின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட இது பற்றிய முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறவேண்டும்.

அவர் ஒரு தேர்ந்த பொருளியல் வல்லுனர் என்பது மட்டுமன்றி, எந்தக் கட்சியின் அடையாளமும் இல்லாத அனைத்து அரசியல் அனுபவங்களையும் பெற்றிருப்பவராக விளங்குகிறார். இந்து சமவெளி நாகரிகம் பற்றி எந்த ஒரு வரலாற்றுப் பேராசிரியரை விடவும் மிக அதிகமாக தெரிந்து வைத்திருப்பவர் என்பதால் அவர் உண்மையில் ஒரு வரலாற்றுப் பேராசிரியரும் கூட ஆவார்.

என்னைப் பொருத்தவரை பெரியாரை நான் ஆசிரியர் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்.  பெரியாரின் சிந்தனைகளை தமிழ் நாட்டுக்கு வெளியே அகில இந்திய அளவிலும், பன்னாடுகளின் அளவிலும் எடுத்துச் சென்றுள்ள ஆசிரியர்,  தமிழ், ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் வெளியிடப்பட்ட நூல்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்களின் இயக்கங்களுடனான தொடர்பையும் அவர் ஏற்படுத்திக் கொண்டார். தமிழில் வெளிவரும் புகழ் பெற்ற விடுதலை மற்றும் இதர பத்திரிகைகளின் ஆசிரியராக மட்டுமன்றி, பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பி வரும் மாடர்ன் ரேஷனலிஸ்ட் என்ற ஆங்கில மாத இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார். அவரால் வெளியிடப்படும் நூல்களில் பெரியாரைப் பற்றிய நூல்கள் மட்டுமல்லாமல், பகுத்தறிவு சார்ந்த உலக அளவிலான நூல்களும் அடங்கும். எனது இரு நூல்களும் கூட இயக்கத்தினால் பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு குறிப்பிட நான் விரும்புகிறேன்.

தனது உடல்நலத்தைக் கூட பொருட்படுத்தாமல், மணிக் கணக்கிலும், நாட்கணக்கிலும் இயந்திர மனிதன் போல அவர் பணியாற்றுவதை சில நேரங்களில் நான் கண்டு வியந்திருக்கிறேன். டில்லியில் மாளிகை போன்று கட்டப்பட்டுள்ள பெரியார் மய்யம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கட்டித் தந்துள்ள கலைநயம் மிகுந்த கட்டடங்களைக் காணும்போது,  ஷாஜஹான் போன்ற பெரிய கட்டுமானப் பொறியாளர்களுடன் அவரை வகைப்படுத்த இயலும் என்பதை எண்ணியும் நான் வியந்திருக்கிறேன். திருச்சி மாவட்டம் சிறுகனூர் கிராமத்தில் பெரியாரின் நினைவாக ஒரு மாபெரும் சிலை அமைக்கப்பட்டு, அங்கு பெரியார் உலகம் என்னும் நளந்தா பல்கலைக் கழகத்துடன் ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவிலான ஒலி, ஒளிக் காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும்,  ஆராய்ச்சிகள் செய்வதற்கான நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளன.

வண்ணமயமான வாழ்க்கையையும், ஏழை ரிச்சர்டின் அல்மனக் இதழின் புகழ் பெற்ற மாபெரும் ஆசிரியர் என்ற பாரம்பரித்தையும் துறந்து சென்று, பின்னர் தற்போது பென்சில்வேனியா பல்கலைக் கழகமாக மாற்றம் பெற்றுள்ள பிலடெல்பியா கல்லூரியின் முதல் தலைவராக ஆன பெஞ்சமின் பிராங்ளினை ஆசிரியர் நினைவுபடுத்துகிறார்.

பெரியாரைப் பற்றியும், அவரது இயக்கத்தைப் பற்றியும் ஆசிரியரது கட்டுரைகளை நான் படிக்கும் போது எனக்கு பாஸ்வெல்லின் நினைவுதான் வருகிறது.  பெரியாரின் புகழைப் பரப்ப ஆசிரியர் பாஸ்வெல்லை விட மிக அதிகமாகவே பணி செய்துள்ளார்.

ஆசிரியர் ஒரு மாபெரும் தலைவராவார். தன்னைப் பின்பற்றும் தொண்டர்களை உருவாக்க இயன்றவர் ஒருவரே ஆசிரியர் என்று கருதப்பட இயன்றவர் ஆவார். தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் இத்தகைய ஒரு மாபெரும் தொண்டர் படையை அவர் உருவாக்கியுள்ளார்! ஆசிரியருடன் பழகும் நீதியரசர் எஸ்.மோகன், நீதியரசர் ஏ.கே.ராஜன், காலம் சென்ற திரு சாமிதுரை, காலம் சென்ற திரு தேவசகாயம், மயிலை கிருஷ்ணன், திருமதி ஏ.அருள்மொழி, டாக்டர் ஏ. ராஜசேகரன், டாக்டர் எம்.எஸ்.ராமச்சந்திரன், டாக்டர் நல் இராமச்சந்திரன், திருச்சி பேரா.சுப்பிரமணியம், திரு வி.அன்புராஜ், மாடர்ன் ரேஷனலிஸ்ட் திரு வி.குமரேசன், அனைத்துக்கும் மேலாக எப்போதுமே உதவி செய்வதற்குத் தயாராக இருக்கும் திரு. சீதாராமன் மற்றும் பல அன்பர்களுக்கு மிகுந்த நெருக்கம் கொண்டவனாக நான் ஆனதற்கு ஆசிரியருக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். இவர்களில் பலரும் எனது மதிப்பிற்குரிய நண்பர்களாக விளங்குகின்றனர்.

ராதா மன்றமும், பெரியார் அவர்களின் கம்பீரமான உருவச் சிலையும் உள்ள பெரியார் திடல் சென்னை மாநகரில் அடையாளம் கூறத் தகுந்த குறிப்பிடத்தக்க ஓர் இடமாக விளங்குவதாகும்.
புத்தருக்குப் பிறகு பிறந்த மாபெரும் இந்தியரான காந்தியின் உதவியாளராக இருந்த திரு கல்யாணம் அவர்களின் உரையை அண்மையில் கேட்ட நான் அதனால் மிகவும் கவரப்பட்டேன். நானும் மகாத்மாவுடன் நடந்திருக்கிறேன் என்று நியாயமான தனது பெருமையை மிகுந்த அடக்கத்துடன் அவர் வெளிப்படுத்தினார்.  ஆசிரியருடன் நான் நடந்திருக்கிறேன் என்ற அது போன்ற பெருமையை  நானும் உணர்கிறேன்! அவரைப் பற்றி அறிந்து கொண்டது மட்டுமன்றி, அவருக்காகவும் அவருடன் இணைந்தும் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை ஓர் அரிய பேறாக நான் கருதுகிறேன். அத்துடன் அவரது அன்பையும், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தொண்டர்களின் அன்பையும் பெற்று பயனடைந்துள்ளது பற்றியும் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.   

– 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *