சமூகநீதி காத்து சரித்திரம் படைப்பவர்!

டிசம்பர் 01-15

நமது பேரன்புக்கு உரிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சிறப்பான ஆற்றல்கள் பலவற்றைப் பெற்றிருக்கும் புகழ் பெற்ற இத் தலைவரைப் பற்றி ஒரு சிலவற்றைச் சொல்ல எனக்கு வாய்ப்பளித்துப் பெருமைப் படுத்தியமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது 85ஆவது பிறந்த நாளான 02.12.2017 வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மறக்க முடியாத நினைவாக விளங்குவதாகும். ஓர் எளிய வழியில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர் என்ற போதிலும், அவருள் பொதிந்திருந்த  பெருவிருப்பம் காரணமாக, முதுகலைப் பட்டமும், சட்டப் பட்டமும் பெற்று தன்னைத் தகுதி உள்ளவராக ஆக்கிக் கொண்ட அவர், வாழ்க்கையின் பல படிகளைக் கடந்து முன்னிலைப் பெற்றவர் ஆவார். மக்களிடையே நிலவும் சமத்துவமின்மையை ஒழிக்கவும், சமூக நீதியைக் கொண்டு வரவும்,  பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் முன்னேற்றம் பெறவும் சமூகத்துக்கு சேவை செய்யும் ஒரு பொருள் நிறைந்த வாழ்க்கை, தந்தை பெரியார் அவர்களின் தொடர்பினால் அவருக்குக் கிடைத்தது.  அனைத்து மக்களும் பிறப்பினால் சமமானவர்கள்தான் என்றாலும், அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ய்புகளால் மட்டுமே அவர்கள் சமமற்றவர்களாக ஆகிவிடுகின்றனர் என்பதை அவர் உறுதியாக நம்பினார். மாபெரும் புரட்சியாளரான தந்தை பெரியாரின் தலைமையில் திருமதி மோகனா அம்மையாருடன் அவரது திருமணம் நடக்காமல் போயிருந்தால், நீதித் துறையின் மிக உயர்ந்த பதவிகளை அவர் அழகுபடுத்தியிருந்திருப்பார். கடவுள் சிலை வணக்கம், மூடநம்பிக்கை, சாமியார்களை நம்புவது, ஆதரிப்பது ஆகியவற்றை அழிப்பதற்கான அவரது நீண்ட பயணத்தில் அவரது அர்ப்பணிப்பு உணர்வு, கவனக் குவிப்பு, தொழில்நுட்ப மாற்றத்திற்கான அவரது மிகுதியான ஆர்வம் ஆகியவை குறிப்பிடத்தக்க மைல் கற்களாகும். எதிலும் உண்மையாக இருப்பதில் அவருக்கு ஈடு இணை எவருமில்லை என்னும் நிலையிலும், அவர் தனது வெற்றியை எப்போதுமே பாராட்டிக் கொண்டதோ, பெருமைப்பட்டதோ இல்லை. தனது மரியாதைக்குரிய ஆசான் பெரியாரின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் சற்றும் தயக்கமற்ற உறுதி காட்டி வருபவர் அவர். ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவரும், தனது செயல்பாடுகளால் தன்னைப் பெருமைக்குரியவராக ஆக்கிக் கொண்டவருமான அவரது துணைவியார் மோகனா அம்மையாரின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இவரது சாதனைகளுக்குப் பின்னிருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அறிவார்ந்த பெண்மணியான அவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடுகளின் பால் காட்டிய அர்ப்பணிப்பு உணர்வு எவருக்கும் குறைந்தது அல்ல.

ஓயாமல் படிக்கும் பழக்கமும்  அறிவியல் மனப்பான்மையும்  கொண்டிருக்கும்  நமது ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மக்களைப் பற்றியும், உலக விவகாரங்கள் குறித்தும் பேரறிவு பெற்றிருப்பவர் ஆவார்.

போட்டி, பொறாமை அற்ற அவரது குடும்ப உறுப்பினர்களால் ஆசிரியருக்கு எந்தவிதமான சிறு இடையூறும் நேர்ந்ததில்லை என்ற அளவில் அவர் நல்வாய்ப்பு பெற்றவரே ஆவார். இவைதான் அவரது உண்மையான சொத்துக்களாகும். தனது குழந்தைகளுக்கு அவர் ஒன்றும் பெரியதாகச் செய்து விடவில்லை என்றே என்னால் நினைக்கத் தோன்றுகிறது. தனது தனிப்பட்ட வசதிகள், விருப்பங்களை விட தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கு அவர் அதிக முன்னுரிமை அளித்து பாதுகாத்து வருகிறார். காட்சிக்கு எளியவராகவும், அனைவரிடமும் மரியாதை காட்டி வருபவருமான ஆசிரியர் அவர்கள், சமூகநீதிக் கோட்பாட்டுச் சுடரை உலக அளவில் ஏற்றி வைத்தவர் ஆவார். வாரத்தில் 7 நாள்களும், 18 மணி நேரத்திற்குக் குறையாமல் சோர்வின்றி பணியாற்றுபவர் அவர் என்பதுடன், எப்போதும் படித்துக் கொண்டே இருக்கும் அவரது பேச்சாற்றல் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். கலைஞருடனான ஆசிரியரின்  உறவு, பொதுவான அவர்களது நம்பிக்கைகள், பெரியார் கோட்பாட்டின் பால் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு, ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருக்கும் மரியாதை, நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது ஆகும். முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆசிரியரின் கோட்பாடுகளில் இருந்து மாறுபட்டிருந்தபோதிலும், தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை 69 விழுக்காட்டுக்கு உயர்த்தி, அதனைப் பாதுகாப்பதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி சாதித்தபோது, அவரைப் பாராட்ட நமது ஆசிரியர் தயங்கியதே இல்லை. தனது கண்ணோட்டத்தில் மிகமிகத் தெளிவாக இருக்கும் ஆசிரியர்  அவர்கள், எதனையும் அது இருக்கும் அளவிலேயே ஏற்றுக் கொள்ள சற்றும் தயங்காதவர் ஆவார்.
ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எளிதாகவும், சரளமாகவும் பேசும் ஆற்றல் கொண்ட தலைவர்கள் சிலரில் இவர் குறிப்பிடத்தக்கவர். அத்தோடு, அறிவுத் தேக்கமாகவும் விளங்குபவர் அவர்.

1976 ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்தபோது,  எனது அன்புத் தந்தை உயிர்நீத்த சமயத்தில்,  எனக்கு ஓர் ஆறுதல் கடிதம் எழுதுவதற்கு ஆசிரியர் தவறவில்லை. அந்த மாண்பை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். தஞ்சை வல்லத்திலும், திருச்சியிலும் உள்ள பெரியார் கல்வி நிறுவனங்களைக் காண்பதற்கு பலமுறை நான் அங்கு சென்றிருக்கிறேன். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் போற்றத் தகுந்த ஆற்றல் பெற்றவர்களாக விளங்குகின்றனர். பரந்து விரிந்திருக்கும் கல்வி வளாகம், அங்கு கடைபிடிக்கப்படும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அம்சங்கள், பெண்களுக்கு உரிமைகளும் அதிகாரமும் வழங்குதல் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்று மின்னாற்றல் உற்பத்தி முயற்சிகள் ஆகியவை அனைத்தும் மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டவை. இப் பல்கலைக் கழகத்திற்காக டில்லியில் கட்டப்பட்டிருக்கும் கட்டடம் ஆசிரியது முன்னோக்கிய  தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குவதாகும். தனது பயணப் பாதையில் ஆசிரியர் அவர்கள் பல இடையூறுகளை எதிர்கொண்டிருந்தார் என்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆனால், அவர் அவற்றையெல்லாம் தனது ஆற்றல்மிகு தோள்களில் சுமந்து கொண்டு, சவால்களை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி வீரராக விளங்கி வருகிறார்.

மகிழ்ச்சி நிறைந்த அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது, இவர் அல்லல்படுவோருக்கும், தேவைப்படுவோர்க்கும் சேவை செய்வதற்கான நீண்ட ஆயுளுடன் வாழ அவரை நான் வாழ்த்துகிறேன். ஈடு இணையற்ற அவரது ஆற்றலும், அறிவுச் செல்வமும், மனித நேயமும் மக்களை அவர் பால் கவர்ச்சி கொள்ளச் செய்வனவாகும்.   பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது போரட்டமும், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டவும் ஆதிக்க ஒழிப்பிற்குமான அவரது முயற்சிகளும், பேச்சுகளும், எழுத்துகளும், போராட்டங்களும் உலக அரங்கில் அவரை மய்யத்துக்குக் கொண்டு வந்தன.

ஆசிரியரது மகன் திரு. அன்பு நிறுவனத்துக்குக் கிடைத்த ஒரு பெரும் செல்வமாகும். நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உதவுவதில் அவர் இழந்திருப்பவை ஏராளம். இந்த நேரத்தில் அவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியரது சாதனைப் புகழ் ஒளி சற்றும் மங்காமல் என்றென்றும் ஒளிவிடும் என்பது உறுதி. வாழ்த்துகள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *