நம் கிளர்ச்சியின் தத்துவம் ஜாதி அடிப்படைக் கிளர்ச்சிதானே தவிர, புனிதத் தன்மை பற்றிய கிளர்ச்சி அல்ல என்பதோடு, சாஸ்திரம், ஆகமம், சட்டம் என்பவை மேல் ஜாதிக்காரர்கள்- பார்ப்பனர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, மாற்றக் கூடாத அதாவது சுத்தம்- அசுத்தம்- புனிதம் என்பதான காரியம் என்பதல்ல.
நாமும் நம் முயற்சியினால்தான் மான உரிமையைப் பாதுகாத்துப் பெற வேண்டியவர்களாக இருக்கிறோமே ஒழிய, யாராலும் கொடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். நம் நாட்டில், நம் சமுதாயத்தில், சமுதாய இழிவு நீக்கிக் கொள்ளும் உரிமை பெறுவதற்குத் திராவிடர் கழகம் ஒன்று தானிருக்கிறது. நம் சமுதாய இழிவு மதத்தின்படி என்றிருந்தாலும், அது பார்ப்பனர் இஷ்டப்படி,- தயவுப்படி சட்டத்தினால் ஆக்கப்பட்டு, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம் பார்ப்பன ஆதிக்க அரசாங்கமானதால், இழிவைப் பாதுகாக்கத்தக்கபடி பார்ப்பனர் சட்டம் செய்யவும், அதைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகவும் இருந்து வருகிறது. உலகில் நம் நாடு உள்பட சமுதாய இழிவு போக்கப்பட வேண்டு மானாலும், காப்பாற்றப்பட வேண்டுமானாலும், பலாத்காரம்- நாசவேலை- கொலை இல்லாமல் எங்கும் நடந்த தில்லை. ஆனால் நாம் தான் — திராவிடர் கழகம் தான் பலாத்காரம், கொலை, நாசவேலை இல்லாமல் (மானம் பெற) பாடுபடுகிறோம்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர் இன்று தங்கள் உயர் ஜாதித் தன்மையோடு வாழ்கிறார்கள் என்றால், அது கண்டிப்பாக காந்தியைக் கொலை செய்ததால் தானே ஒழிய தருமத்தினால் அல்ல.