பிறந்த காலம்: 16.7.1924
பிறந்த இடம்: கடலூர் மாவட்டக் காவனூர்
பெற்றோர்: மீனாட்சி, மாணிக்கம்
வாழ்க்கைத் துணைவர்: ந.பார்வதி
மக்கள்: 1. வேண்மாள், 2. அண்ணல், 3.அவ்வை
கல்வி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சிச் சான்றும், எம்.ஏ; பி.எச்.டி; ஆகிய பட்டங்களும்.
கொள்கை: அறிவும் தெளிவும் பெறாத இளமையில் ஆத்திகம்; பக்குவம் பெற்றபின் முழுப் பகுத்தறிவுக் கோட்பாடு (நாத்திகம்).
பணி: தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வியீறாக உள்ள எல்லா நிலைகளிலும் _ ஆசிரியர் பயிற்சி, ஆட்சி மொழிப் பயிற்சி, பிற மொழியாளர் கல்வி, வயது வந்தோர் கல்வியுட்பட _ பங்குண்டு.
தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகச் சிறப்புடன் பணியாற்றியுள்ளார்.
பாடத் திட்டக்குழு, பாட நூற்குழு, பாடநூல் வல்லுநர் குழு, இடைநிலைக் கல்வி வாரியம், வயது வந்தோர் கல்வி வாரியம் ஆகியவற்றில் தொடர்பும், தலைமையும் தவிரப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு போன்ற வேறு சில சிறப்புக் குழுக்களிலும் தொடர்புண்டு.
பேச்சு: 1942ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், இலக்கியவியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்த பல மேடைகளிலும் உரையாற்றியமை.
விருப்பம்: பொதுவாகக் கற்பித்தல் _ சிறப்பாக இலக்கணங் கற்பித்தல், நடிப்பு.
எழுத்து: பல பாட நூல்கள், துணைப்பாட நூல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மாதுளை, அறத்தின் வித்து, சுயசிந்தனையாளர் பெரியார், வழுக்குத் தமிழ்.
பெரியாரியல்: 1. பொருள், 2.மொழி, 3.இலக்கியம், 4.கலை, 5.தாம், பெரியார் கணினி போன்ற பற்பல நூல்கள்.
சிறப்புப் பணி: சென்னைத் தொலைக்காட்சியின் வாழ்க்கைக் கல்வி எனும் பகுதியில் பதினாறு ஆண்டுகளுக்கு மேல் எண்ணும் எழுத்தும் கற்பித்தமையும், உங்களுக்காக எனும் பகுதியில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தமையும். அரசுப் பணியின் இறுதியில் கற்பிக்கும் பணியிலிருந்து நிருவாகப் பணிக்கு மாற்றப்பட்டுத் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணிபுரிந்து இதுவரைகூட யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தமையும், ‘நன்னன்முறை’ எனும் கற்பிக்கும் முறையைத் தோற்றுவித்து அதற்குரிய பாடநூல், கற்பிக்கும் முறை ஆகியவற்றை உருவாக்கிப் பயிற்சி தந்து நடைமுறைப் படுத்திக் காட்டியமையும்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகைக் கொடுத்து ஊக்குவித்தார்.
போராட்டம்: 1949இல் வெள்ளையனே வெளியேறு எனும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்ற பின் தமிழிசைக் கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகிய போர்களிலும் பங்கு பற்றியமை.
தொடர்வண்டி நிலையப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றமை.
நன்னன் பற்றி கலைஞர்…
“பெரியார் என்ற சிற்பி இந்தச் சமுதாயத்தில் எத்தகைய அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டுமென்று புரட்சிக்கொடி ஏந்தினாரோ அந்தக் கொடி நிழலில் அணிவகுத்த தளகர்த்தர்களில் ஒருவராகவும், அந்த ஒப்பற்ற மேதையின் உழைப்பையும் உறுதி வாய்ந்த கொள்கைகளையும் போற்றுபவராகவும் விளங்கக் கூடியவர் நன்னன் என்பது என் அழுத்தமான எண்ணமாகும்.
நன்னன் அவர்கள் தொலைக்காட்சி வாயிலாகக் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்த பாங்கினைத் தமிழ் மக்கள் பெரும்பான்மையோர் தங்கள் உள்ளத்தில் சித்திரமாகவே பதிய வைத்துக் கொண்டுள்ளனர்; என்னைப் போலவே!’
’ – கலைஞர்
நன்னன் பற்றி பேராசிரியர்……
“முனைவர் நன்னன் எதையும் ஆழமாகச் சிந்தித்து, நுட்பமாக ஆராய்ந்து, தெளிவான முடிவுக்கு வந்து, திட்டவட்டமாகச் செயற்படுத்துபவர். அவர் எதையும் எண்ணித் துணிவார், துணிந்தபின் செயற்படுத்தத் தவறார்.
மொழிப்பற்றும், இனப்பற்றும் இரு கண்ணெனப் போற்றும் உணர்வினர். அவர் தமது நினைவு எல்லாம் பெரியாரின் சிந்தனையில் தோய்ந்தவர். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் விளக்கங்களையும் பல பொது மேடைகளில் விளக்கிப் பேசியவர். பெரியாரின் கருத்துகளைப் பரப்பும் ஆர்வத்துடன் பலப் பல கட்டுரைகளைத் தீட்டியவர். ‘பெரியார் இயல்’ பற்றியதொரு ஆராய்ச்சி உரையைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியவர்.’’
– பேராசிரியர் க.அன்பழகன்
தரவு: “பெரியார் கணினி’’ என்ற நூல்]
நன்னன் பற்றி ஆசிரியர்……
“அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் பருவந்தொட்டு திராவிடர் கழகத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டு கடைசி மூச்சு அடங்கும்வரை தந்தை பெரியார் கொள்கைகளை வாழ்வியல் தடமாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய சீரியர்!
மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் இருந்து முத்திரை பதித்தவர்.
அருப்புக்கோட்டை கைலாசம் அறக் கட்டளை சொற்பொழிவாற்றிப் பெரியார் பேருரையாளர் என்ற விருது திராவிடர் கழகத்தால் அளிக்கப்பட்டவர். சிறிது காலம் தந்தை பெரியாரோடு ஈரோட்டிலும், சுற்றுப் பயணத்திலும் பங்கேற்றவர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் இருந்தவர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட பெரியார் வரலாற்று நூல் தொகுக்கும் பணியின் தலைவராகவும் பணியாற்றியவர்.
தி.மு.க. ஆட்சியில் சமூக சீர்திருத்தக் குழுவின் தலைவராகவும் இருந்தார். தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களைத் தனித்தனி தலைப்புகளில் ஏராளமான நூல்களாக வெளியிட்டுச் சாதனை படைத்தவர்.
ஆண்டுதோறும் மகன் டாக்டர் அண்ணல் நினைவு நாளில் 5 சுயமரியாதைத் திருமண இணையர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவார், நூல்களை வெளியிடுவார்.
சில வாரங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் அழைப்பின் பேரில், அவரை நேரில் சென்று சந்தித்து நீண்ட நேரம் உரையாடினோம்.
“பெரியார் தொண்டராக நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறேன். பெரியார் பெருநெறிப்பற்றி ஒழுகுபவர் வாழ்வின் முழு வெற்றியை ஈட்டுவர்; நான் ஒரு முழு நாத்திகன் -_ மனநிறைவோடு என் வாழ்வை நிறைவு செய்துகொள்கிறேன் _- இது என் மரண வாக்குமூலம்‘’ என்று கம்பீரமாகவே சொன்னார். (அவரின் மரண வாக்குமூலம்
இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை’ மலரில் வெளி யிடப்பட்டுள்ளது).
புலவர் மா.நன்னன் அவர்களின் மறைவு (07.11.2017) தமிழ்நாட்டுக்கு மட்டுல்ல – உலகம் முழுவதும் வாழும் தமிழ், தமிழினம், பகுத்தறிவு உணர்வாளர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
கி.வீரமணி,
சென்னை தலைவர் 7.11.2017 திராவிடர் கழகம்.