நெடுங்காலமாய் புழக்கத்தில் இருந்த மண்பாண்டங்களை விரட்டிவிட்டு எப்படியோ நம் எல்லோர் வீட்டு சமையலறைக்குள்ளும் அலுமினிய பாத்திரங்களே ஆக்கிரமித்துள்ளன.
விலை குறைவு, எளிதில் சூடேறும் இந்த இரண்டு காரணங்களும்தான் அலுமினியம் அதிவேகமாய் மக்களிடையே பயன்பாட்டிற்கு வரக் காரணம்.
ஆனாலும், அலுமினிய பாத்திரங்களில் சமைத்து உண்பதாலும், வேறு சில பயன்பாடுகளிலும் மனிதனுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.
விமானம் தயாரிப்பது முதல் எத்தனையோ விஷயங்களுக்கு நமக்கு நண்பனாய் இருக்கும் அலுமினியம் சமையலில் மட்டும் எதிரியாகிவிடுகிறது. காரணம் அமிலம் மற்றும் காரத்தன்மையுள்ள உணவுப் பொருட்களுடன் இது வேதிவினை புரியக்கூடியது.
தக்காளியுடன் வினைபுரிந்தால் அலுமினிய பாஸ்ரேட் உருவாகிறது. புளியுடன் வேதிவினை புரிந்தால் அது அலுமினியம் டார்டரேட், தயிருடன் வினையாற்றினால் அது அலுமினியம் லாக்டேட், எலுமிச்சை சாறுடன் வினைபுரிந்தால் அது அலுமினியம் சிட்ரேட், உப்புடன் அலுமினியம் வினையாற்றினால் அது அலுமினியம் காம்பவுண்ட் என எதனுடன் வினை புரிகிறதோ அதற்கேற்ற தன்மைகளில் அலுமினியம் உப்பாக மாறி உணவினுள் கலந்து விடுகிறது.
இந்த உணவினை நாம் உண்ணும்போது அவை உடலில் சேருவதால் அதிலுள்ள அலுமினியத்தை சிறுநீரகத்தால் சுத்திகரிக்க முடியாது. இதனால் அது உடலைவிட்டு வெளியேறாமல் உடலின் பல பகுதிகளில் தங்கி எலும்பு, சிறுநீரகம், நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளைச் செல்களின் வளர்ச்சியை பாதிப்பதால் மறதிநோய், எண்ணச் சிதைவு நோய் ஏற்படுவதற்குக் காரணமாய் இருக்கிறது. அலுமினியம் என்பது சமைப்பதற்கான உலோகப் பொருள் அல்ல என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.