பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று ‘குமுதம்’ ஏடு என்னைக் கேட்டது. “பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றாலும் இது ஒரு இனிய கற்பனைதான்.’’ இன்றைக்குப் பாரதியாரைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது பாடல்களில் பல இடங்களில் முரணும், குழப்பமும் இருக்கிறது என்று என்னைப் போன்ற பலர் கருதுகின்ற நிலை. இவைகளையெல்லாம் தெளிவுபடுத்து வதற்கு பாரதியைப் பார்த்து பல்வேறு கேள்விகளைக் கேட்கத்தான் முயற்சிப்பேன்.
நான் தந்தை பெரியாரின் தொண்டன். எந்தக் கருத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பதோ, அல்லது எல்லோரும் நீச்சலடிக்கிறார்கள் என்பதற்காக அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே செல்ல வேண்டும் என்கிற அவசியமோ இல்லாதவன் நான்.
ஈரோட்டுக்குப் போனவர்கள் நன்றாக எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்பவர்கள் தான். எனவே, பாரதியாருக்கு நூற்றாண்டு விழா என்ற காரணத்தினால், அவரை ஒரு ‘தேசிய கவி’ என்று புகழ்பாடுகிற நேரத்தில், அவர் அதற்குத் தகுதியானவரா? என்று அவரைப் பார்த்து நான் கீழ்க்கண்டவற்றைக் கேட்டேன்.
பாரதி தேசிய கவியா?
தேசிய கவி என்றால், தேசம் முழுவதையும் ஒட்டிய பார்வை, மக்கள் அனைவரையும் சமத்துவமாகக் கருதக்கூடிய பார்வை என்பது வரவேண்டும். ஆனால், பாரதியாரின் பாடல்களில் அத்தகைய பார்வைகள் இல்லை என்பதைச் சற்று விளக்குகிறேன்.
‘எங்கள் ஆரிய பூமி, எங்கள் ஆரிய நாடு’ என்று பல இடங்களில் உரைக்கின்றார். ஆரிய நாட்டினர் ஆண்மையோடு இயற்றும், சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக! வீரியம் ஒழிந்து வெம்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்; பிச்சை வாழ்வதற்கு பிறருடைய ஆட்சியில் அச்சமுற்றிருப் போன் ஆரியன் அல்லன்’ என்று பாரதியார் சொல்லுகிறார். இந்தியா முழுவதும் ‘பிராமண தேசம்’ ஆகிவிட வேண்டும் என்று அவர் இன்னொரு இடத்தில் சொல்லி யிருக்கிறார். ‘ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்’ என்று பாரதியார் பாடியிருக்கிறார். எனவே, மொழி என்று வரும்பொழுது ஆரிய மைந்தன் இலக்கணம் அமைத்தான் என்று கூறி, தேசம் என்று வரும்பொழுது ஆரிய வேதம் ஆரிய நாடு என்று கூறி, தன்னை ஓர் ஆரியன், வேதியன் என்றும் வேதியன் உயர்ந்தவன், ஆரியன் உயர்ந்தவன், இது ஆரியர்களுக்குரிய நாடு என்றும் அவர் திரும்பத் திரும்ப சொல்லியிருப்பது அவருக்கு தேசியப் பார்வை இருக்கிறதா? ஆரியப் பார்வை உள்ளதா? என்று பாரதியை துணிச்சலோடு, நேர்மையோடு கேட்பேன்.
பாரதி சாதி ஒழிப்பாளரா?
சாதிகள் இல்லையடி பாப்பா என்று நீங்கள் பாடினீர்கள் என்று பெருமிதத்தோடு எல்லோரும் மேடையிலே சொல்ல இன்றைக்குக் கேட்கிறோம். ஆனால், உங்களோடு நெருங்கிப் பழகிய நண்பர் என்று கருதக்கூடிய ஒருவர் _ திரு.பத்மநாபன் அவர்கள் அண்மையிலே சில மாதங்களுக்கு முன்னால் ‘இந்து’ பத்திரிகையிலே ஒரு விமரிசனக் குறிப்பு எழுதியிருக்கிறார்.
“அதில் அவர் கூறியிருப்பதாவது: “சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதியார் எழுதவில்லை. சாதி பேதம் இல்லையடி பாப்பா என்றுதான் எழுதினார். பிறகு பாடபேதமாக, ‘சாதிகள் இல்லையடி’ என்று வந்துவிட்டது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பத்மநாபன். இந்தக் கருத்தை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்குச் சாதி ஒழிப்பிலே உள்ள நம்பிக்கை என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
“கீழ் ஜாதியாரை நல்ல சமஸ்காரங்களால் பிராமணர்கள் ஆக்கிவிட முடியும் என்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் “பிராம்மண தேச’’மாகச் செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் பட்சணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணுல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துவிட வேண்டும். பிறகு அவன் பிராம்மணனாகவே கருதப்பட வேண்டும்’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். சாதி ஒழிப்பாளர்கள் எல்லோரும் மனிதர்களாக வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, எல்லோரும் பிராம்மணர்களாக வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். விரும்பக் கூடாது. பூணூல் போடப்பட்டு விடுவதாலேயே எல்லோரும் உயர்ஜாதிக்காரர்களாக ஆகிவிட முடியும் என்று சொன்னால் நீண்ட காலத்துக்கு முன்னாலேயே ராமானுஜர் வெற்றி பெற்றிருப்பாரே? ராமானுஜர் தோல்வி அடைந்த இடத்திலேதான் நீங்களும் நிற்கிறீர்கள். ஏன்? நீங்களேகூட புதுவையில் கனகலிங்கம் என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதி நண்பருக்குப் பூணூல் போட்டு வைத்தீர்களே? கனகலிங்கம் பிராம்மண வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா? அது நீங்கள் அடைந்த தோல்வியே தவிர வெற்றியல்லவே!
அய்யர்வேதம் ஓதினால் மழை பெய்யும் என்று கருதுகிறீர்களே? இதற்கு விஞ்ஞானபூர்வமாக ஆதாரம் ஏதேனும் உண்டா? நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு இருக்கிற அந்த உயர்ந்த ஜாதிக் கருத்து என்பது பல நேரங்களிலே உங்களை ஈர்த்திருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை என்பதுதானே இதற்குப் பொருள்?
‘ஜாதிப் பிரிவுகளில் இருக்கும் குற்றங்களை யெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். நம்முடைய கிறிஸ்துவப் பாதிரிமார்களாலே நேர்ந்த அவமானம்தான் இது. இந்து மதம் அப்படி அல்ல. எல்லோரும் இதை வேதமாகக் கொள்ள வேண்டும். எல்லோரும் இந்துக்களாகிவிட வேண்டும். எல்லோரும் இந்த இடத்திலே இந்துக்கள் என்று சிறப்பாக நினைக்க வேண்டும்’’ என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். “எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். இந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேண்டும். இதற்குரிய உபாயங்களைச் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளீர்.
இரஷ்யப் புரட்சி பராசக்தி கருணையில் வந்ததா?
உங்களுடைய சீடராகப் பெருமையோடு தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஒரு காலத்தில் ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடியவர் தான். ஆனால், சுப்பிரமணியர் துதியமுது பாடிய ஆத்திக கனகசுப்புரத்தினம், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, ‘இல்லையென்போன் யாரடா தில்லை சென்று பாரடா’ என்று கேட்டவர்களுக்கு, ‘இல்லையென்போன் நானடா, அத்தில்லை கண்டுதானடா’ என்று உறுதியாகச் சொன்னார்.
எனவே, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய நிலையை எடுத்துக்கொண்டால், பிற்காலத்தில் அவர் மாற்றமடைந்திருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும். அவர் போக்கில் பரிணாம வளர்ச்சியைக் காண முடியும். முரண்பாட்டைக் காண முடியாது. அதுபோல உங்களுடைய காலகட்டத்தில் ஏற்கெனவே உங்களுக்கு இருந்த கருத்து, பிற்காலத்தில் மாற்றப்பட்ட கருத்து. பரிணாம வளர்ச்சிப் போக்கில் உள்ளனவா? தெளிவான வரையறையோடு இருக்கின்றனவா என்று நாங்கள் தேடிப் பார்க்கிறோம்.
ரஷ்யப் புரட்சி ஏற்பட்டதற்கு நீங்கள் பாராட்டுத் தெரிவித்தீர்கள் என்பதற்காகத்தான் நம்முடைய அருமைப் பொதுவுடைமை நண்பர்கள் எல்லாம், “பொதுவுடைமை இந்த உலகத்திலே கொள்கையாகக் கொள்வோம். புனிதமோடு அதை நாங்கள் காப்போம்’’ என்று சொன்ன புரட்சிக்கவிஞர் பாரதிதாசனைவிட உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உங்களை ஓகோ என்று புகழ்கிறார்கள். ஆனால், ரஷ்யப் புரட்சியைப் பற்றி நீங்கள் கூறியது என்ன?
“மாகாளி, பராசக்தி, உருஷ்ய நாட்டில் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகாவென்று எழுந்தது பார்யுகப் புரட்சி’’ என்பதுதானே! இது ரஷ்யப் புரட்சிக்குப் பெருமை சேர்ப்பதா? அப்புரட்சியின் உண்மையைக் காட்டுவதா?
கொலையாளிகளை அழிக்க கொலையைத்தானே கையாள நேருகிறது? அநியாயம் செய்வோரை அநியாயத்தால்தானே அடக்க நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை என்று சொல்லியிருக்கிறீர்கள்.
‘லெனினே பரம மூடர்’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
பொதுவுடமைக் கொள்கையை ஒரு பக்கத்தில் நீங்கள் பாராட்டிவிட்டு, மற்றபடி தானம் கொடுப்பதன் மூலமாக ஏழ்மைத் தனத்தை ஒழித்துவிட முடியும் என்று நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது?
எந்த உண்மையான பொதுவுடைமை வாதியும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். தர்மகர்த்தா முறையாக வேண்டுமானால் இது கருதப்படலாம்.
அதே கட்டுரையில் நீங்கள் மேலும் சொல்லியிருக்கிறீர்கள்: ‘லெனின் வழி சரியான வழி இல்லை. காரணம், என்ன என்று சொன்னால், நாம் இந்தியாவில் இருக்கிறோமாதலால் இந்தியாவின் சாத்திய, அசாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவில் உள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரோதமும் பூண்டோர் அல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டும் என்றால், நியாயம் ஆகாது. அதற்கு நம் தேசத்தில் உள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள்’’ என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
இதைச் செய்யாமல் எப்படி இங்கே பொதுவுடமை வரும்? இதை எந்த உண்மையான பொதுவுடமைவாதியால் ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்தியாவிலே இருக்கிற நிலச்சுவான் அங்கேயிருக்கிற நிலச்சுவான்களைவிட நல்லவர்கள் என்று சொன்னால். நிலச்சுவான் முறை இருக்க வேண்டும் என்று நீங்கள் வாதாடுகிறீர்கள் என்றுதானே பொருள்?
ஒரு பக்கத்திலே ஜாதிமுறை நல்லது என்று வாதாடுகிறீர்கள். அதைச் சுட்டிக்காட்டினேன். இன்னொரு பக்கத்திலே “எல்லோரும் இந்துக்களாக’’ வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். அதையும் சுட்டிக் காட்டினேன். இன்னொரு பக்கத்திலே இந்த தேசம் ஆரிய நாடு என்று சொல்லுகிறீர்கள். அதையும் உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்னொரு நேரத்தில் எல்லோருக்கும் ‘பிராமணர்’களைப் போல் பூணூல் போடப்பட்டு, காயத்திரி மந்திரம் சொல்லித் தரப்பட்டு இந்த தேசம் ‘பிராம்மண’ தேசமாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். இவைகளெல்லாம் முற்போக்கு என்பதற்கு நிச்சயமாக வழிகாட்டுகின்ற முறையாக இருக்க முடியாது.
ஒரு தேசீயக்கவிஞன் பார்வையில் இத்துணை குழப்பங்கள் இருக்கக் கூடாது. இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தால் அத்தகையவர் ஒரு தேசீயக்கவியாக இருக்க முடியாது!
இதற்கு உங்களுடைய நியாயமான பதில் என்ன? ஒரு வேளை நீங்கள் இந்தப் பழமையான கருத்துகளில் ஊறித் திளைத்த காரணத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட சுற்றுச் சார்பு காரணமாக இந்த நிலை இருக்கிறது. உங்களுடைய உயர்ஜாதித்தனம் என்பது உங்களை அறியாமல் உங்களுடைய ரத்தத்திலே கலந்துவிட்ட காரணத்தினாலோ என்னவோ, உங்களுடைய புரட்சிக்குக்கூட ஒரு புதிய பார்வையையும், புதிய கோணத்தையும் கொடுத்திருக்கிறதே தவிர, உங்களுடைய தேசீயப் பார்வையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. எனவே, உங்களை நேரிடையாகவே குற்றம் சாட்டுகிறேன்.
என்ன பதிலை நீங்கள் சொல்லப் போகிறீர்களோ, உங்கள் சீடர்கள் மூலமாகச் சொல்லுங்கள். எதிர்பார்க்கிறேன். மீண்டும் சில கேள்விகளைக் கேட்கத் தயாராக இருக்கிறேன்’’ என்று ‘குமுதம்’ வாயிலாகக் பாரதியைக் கேட்டேன்.
பள்ளிகொண்டாவில் பகுத்தறிவாளர் கழக துவக்க விழாப் பொதுக்கூட்டம் 03.02.1982 அன்று சிறப்புற நடந்தது. அந்நிகழ்வில் நான் பேசுகையில், “பகுத்தறிவாளர் கழகம் என்பது தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டதுதான்; திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியாரவர்கள்தான் பார்ப்பனர் அல்லாதார் நலனைக் காப்பதற்காக, ஆண்_பெண் அடிமைத்தனத்தை ஒழிக்க, மூடநம்பிக்கையை அழிக்க காங்கிரஸ் இயக்கத்திலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தினைத் தோற்றுவித்தார்கள்.
“கல்வி கல்லாததால் மானமும், அறிவும் அற்ற மக்களாக ஆக்கப்பட்டோம். இதை மாற்றுவது தானே பகுத்தறிவாளர் கழகத்தின் பணியாகும்’’ என்றுரைத்தேன். விழாவில் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
06.02.1982 அன்று குடவாசலில் சிறப்புடன் இரண்டு மாநாடுகள் நடைபெற்றன. மாநாட்டையொட்டி பேரணியையும் நடத்திக் காட்டினார்கள் கீழ்த்தஞ்சை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், ஒன்றியப் பொறுப்பாளர்களும்! காலையில் பெண்கள் விடுதலை மாநாடும் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. முக்கியத்துவம் வாய்ந்த மூன்று தீர்மானங்களை பெண்ணுரிமையை வலியுறுத்தும் வகையில் நிறைவேற்றினர். இதனை வரவேற்று, பாராட்டும் வகையில் 10.02.1982 விடுதலையில் தலையங்கம் எழுதியிருந்தேன். சுயமரியாதை வீரர் மன்னையின் சிறப்புரை, பெரியார் பேருரையாளர் இராமநாதன் அவர்களது தலைமைப் பேருரை, நமது கழகக் கொள்கைப் பிரச்சாரத்தினையும் இனநலக் கோட்பாட்டின் தேவையையும் மிகவும் கோடிட்டுக் காட்டுவனவாக அமைந்தன.
மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.மணியம், மாவட்டச் செயலாளர் சாந்தன், இணைச் செயலாளர் கணேசன், மல்லியம் கண்ணையன், குடவாசல் கழகப் பொறுப்பாளர்கள் அரங்கராசன், முத்துக்கிருஷ்ணன், கணபதி கல்யாணி, இராமலிங்கம் போன்ற இன்னும் எத்தனையோ கழகத் தோழர்கள், தோழியர்கள் பாடுபட்டார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தேன்.
சென்னை மாவட்ட திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர் செம்பியம் ஏழுமலை அவர்களது மகள் அறிவுக்களஞ்சியம் செல்வன் ச.மோகன் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் 09.02.1982 அன்று மாலையில் நடைபெற்றது. விழாவில், நான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். திருமணத்திற்காக ஒரு பொதுக்கூட்ட மேடையை மணமகளின் தந்தையார் திரு.ஏழுமலை ஏற்பாடு செய்து இருந்தார். திருமணத்திற்கு முன்பு பேராசிரியர் இறையன் அவர்கள் தலைமையில் பெரியார் காட்டும் வாழ்க்கை நெறி என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
தந்தை பெரியார் உருவாக்கிய கலாச்சாரப் புரட்சியைக் கண்டு உண்மையான பொதுவுடமைவாதியாகிய பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி போன்றவர்கள் வியப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
“பொதுவுடமைவாதியாக நான் எனது வீட்டில்கூட பார்ப்பனர்களை அழைக்காமல் திருமணங்களை நடத்த முடியவில்லை. ஆனால், பெரியார் அவர்கள் கிராமப்புறங்களில்கூட புரோகிதர்களைப் புறக்கணிக்கும் வகையில் திருமணத்தை நடத்தும் புரட்சியை உருவாக்கினார் என்றால் இது மாபெரும் கலாச்சாரப் புரட்சிதான்’’ என்று கூறியதை எனது உரையில் எடுத்துரைத்தேன்.
16.02.1982 ‘விடுதலை’யில், தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தினை செயல்படுத்தும் “அண்ணா’’ ஏடு! நமது பராட்டுதல்கள்!’’ என்று தலைப்பிட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன். அதில், தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினையொட்டி, தந்தை பெரியார் அவர்கள் செயல்படுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தினை செயலாக்க அ.தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்தமைக்காக அதற்கு அப்போதே நாம் பாராட்டு தெரிவித்து அதற்காக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களையும் பாராட்டினோம்.
அந்த எழுத்துச் சீர்திருத்தத்தினை ஆளுங்கட்சியின் நாளேடான ‘அண்ணா’ ஏட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் மூலமும் கேட்டுக்கொண்டோம்.
10.02.1982 முதல் எம்.ஜி.ஆர் அவர்களை நிறுவனராகக் கொண்டு அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான “அண்ணா’’ ஏடும் தந்தை பெரியார் அவர்களது எழுத்துச் சீர்திருத்தத்தினை ஏற்று இதழை வெளியிட்டது குறித்து நாம் மகிழ்ச்சி அடைவதோடு, அதற்காக அதன் நிறுவனரையும், நிர்வாகத்தினரையும் பாராட்டுகிறோம் என்று தெரிவித்தோம்.
தமிழ் வளர வேண்டுமானால், காலத்தினை ஒட்டி எழுத்துச் சீர்திருத்தம் வந்தே ஆகவேண்டும்.
இவ்வெழுத்துச் சீர்திருத்தத்தினை எதிர்த்துப் பேசும் சில துணைவேந்தர்கள், “தமிழ்க் காவலர்கள்’’ புலவர்கள் இவர்களை அரசும் தமிழ் மக்களும் அடையாளம் காணவேண்டும்.
அரசின் ஆணையை அனைத்து ஏடுகளும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் உட்பட பின்பற்றத்தக்க வண்ணம் செயல்வடிவம் பெறுவதை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும், ‘அண்ணா’ ஏட்டிற்கு நமது பாராட்டுகள்! என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.
“பெரியார் பேருரைகள்’’ ஆய்வுச் சொற்பொழிவு திருச்சியில், 19,20,21.02.1982 ஆகிய மூன்று நாள்கள் சிறப்புடன் நடைபெற்றது. பேராசிரியர் இறையன் அவர்கள், பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் அரங்கில் அருப்புக்கோட்டை கைலாசம் நினைவு அறக்கட்டளை சார்பாக தந்தை பெரியார் ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். முதல் நாள் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு அறக்கட்டளையின் நோக்கம் குறித்தும் அறக்கட்டளையை நிறுவிய மறைந்த கைலாசம் அவர்களது மகனார் டி.கே.சுப்பிரமணியம் அவர்களது பெரிய உள்ளத்தைப் பற்றியும் பாராட்டிப் பேசினேன்.
விழாவில், புலவர் கோ.இமயவரம்பன், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் இராமநாதன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.
விழாவில், திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, பேராசிரியர் பி.எஸ்.மணி சுந்தரம் உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டார்கள். மூன்று நாள்களிலும் தந்தை பெரியார் பற்றி மூன்று தலைப்புகளில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்திய பேராசிரியர் இறையன் அவர்களுக்கு சால்வை அணிவித்து, “பெரியார் பேருரையாளர்’’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட தங்கமெடலை அணிவித்து நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த துணைவேந்தர்கள் பேராசிரியர் பி.எஸ்.மணிசுந்தரம் அவர்கள் கவுரவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
22.02.1982 அன்று பெரியார் மாவட்டத் தலைவர் திரு.நடேசனார், எஸ்.ஆர்.சாமி நகர தலைவர், மாவட்டச் செயலாளர் சேதுபதி மற்றும் கழக நண்பர்களுடன் மறைந்த பெரியவர் திரு.அங்கப்பனார் இல்லத்திற்குச் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து நான் மரியாதை செலுத்தினேன். அவரது மறைவால் துயருற்று உள்ள அவருடைய துணைவியார், மகன்கள், மருமகள்கள் ஆகியோரிடமும், அவரது நெருங்கிய நண்பர் திரு.கருப்பண்ணனாரிடமும் இரங்கல் கூறி, சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றோம்.
சுயமரியாதை இயக்கத்தின் தொடக்ககாலத் தொண்டரான “தோழர் நீலாவதி இராம.சுப்பிரமணியம்’’ அவர்கள் 22.02.1982 அன்று காலமானார்.
நான் கழகத்தின் சார்பில் இரங்கல் அறிக்கையை 23.02.1982 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் தெரிவித்து இருந்தேன். அதில், அரை நூற்றாண்டுக்கு முன்னால் தலைமை தாங்கியும் திறந்து வைத்தும், ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ ஏடுகளில் கட்டுரைகள் எழுதியும், கருத்துப் புரட்சியை உருவாக்கும் முன்னணி வீராங்கணையாகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டு இருந்தேன். நான் நேரில், அந்த அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் 23.02.1982 திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் லட்சோபலட்சம் தமிழர்கள் பங்கேற்க நீதிகோரி நெடும்பயணம் மேற்கொண்ட கலைஞருக்கு மகத்தான பாராட்டு விழா நடந்தது. அதில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
இந்தப் பயணத்தைப் பற்றி கேலியும், கிண்டலும் செய்து பேசிய ‘மாமேதைகள்’ உண்டு. ஆனால், அவர்களைப் பற்றியெல்லாம் நாம் பொருட்படுத்தப் போவதில்லை.
தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வு இன்றைக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தின் மான உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் எப்படிப்பட்ட நிலையிலே இருக்க வேண்டுமோ அந்த நிலை மாற்றப்பட்டிருக்கிறது. குலைக்கப்பட்டிருக்கிறது என்பதால்தான் சங்கடங்களைச் சந்திக்க வேண்டியவர்களாக நாம் இன்று இருந்து கொண்டிருக்கிறோம்.
அவர்களோடு லட்சக்கணக்கானோர் நடந்தார்கள் அவர்கள் தொண்டுக்கு நாம் தலைவணங்க வேண்டும். அவ்வளவு பெரிய தன்னல மறுப்பை ஏற்றுக்கொண்டு அவர்கள் செய்தார்கள் என்று குறிப்பிட்டேன். ஆயிரக்கணக்கான தி.க., தி.மு.க. தொண்டர்கள் கூடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
25.02.1982 அன்று “மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி தந்திகள், கடிதங்கள் குவியட்டும்’’ என்று ‘விடுதலை’யில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். அதில், “Please publish and implement Mandal Commission report people are much agitated over the delay. Let there not be a fraud on the Constitution and Assurances in Parliament.” என்ற வாசகங்களைக்கொண்ட ஆங்கிலக் கடிதங்கள், தந்திகள் பிரதமருக்கு ஏராளம் குவியட்டும்.
மண்டல் குழு அறிக்கையை வெளியிட்டு இதுவரை 14 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னமும் அது கிடப்பில். ஊறுகாய் ஜாடியில் கிடக்கிறது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் இது பற்றிய ஒரு மாபெரும் மாநாடு விரைவில் நமது கழகத்தின் சார்பில் நடைபெற இருக்கிறது.
சமூகநீதி என்பது மக்களுக்கு இன்னமும் எட்டாக் கனியாகவே இருப்பதா?
தாழ்த்தப்பட்ட சகோதரர்களே! மலைவாழ் பெருங்குடியினரே! பிற்படுத்தப்பட்ட பெருமக்களே! களம் காண, உரிமைக் கொடி உயர்த்தத் தயாராவீர்! என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
(நினைவுகள் நீளும்…)