“சர்வசக்தியுள்ள” கடவுளர் கடத்தல் பொருளாகலாமா?

நவம்பர் 16-30

 

கடவுள் சக்தி நம் நாட்டில் சிரிப்பாய் சிரிக்கிறது. பக்தர்கள் என்பவர்களுக்கோ, அதைப் பரப்பி காசு சம்பாதிக்கும் புரோகித வர்க்கக் கூட்டத்திற்கோ, அல்லது அதன் மூலம் வேஷங்கட்டி ஆடும் அரசு நடத்துபவர்களான அமைச்சர்களுக்கோ, கொஞ்சம்கூட, நாளும் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டுகூட, தங்களது மூடத்தனத்தின் முடைநாற்றம் விளங்குவதில்லை.

கடவுள் சர்வசக்தி படைத்தவர் என்றுதான் எல்லா மதங்களும், கடவுள் ஏஜெண்ட்டுகளான மடத் தலைவர்களும் கூறுகிறார்கள்.

அது உண்மையெனில், கோயில்களில் இருக்கும் கடவுளர்கள், கடவுளச்சிகளைக் கடத்தி கோடிக்கணக்கில் விற்று, ஒரு கூட்டம் பணக்கார ‘கோடி ஈசுவரர்களாக’ ஆவது  எப்படி முடிகிறது?

கடவுள் சிலை கடத்தல் வியாபாரம்:

தமிழக அரசின் காவல்துறையில், பயங்கரவாதம், தீவிரவாதத் தடுப்புக்கென ஒரு தனிப்பிரிவு இருப்பதுபோல, சாமி _ கடவுள் சிலைத் திருட்டைக் கண்டுபிடிப்பதற்கென்றே ஒரு தனிப் பிரிவு தேவைப்படுகிறதே _ அதுதான் கடவுளின் சர்வவல்லமை, சர்வ சக்திக்கு அடையாளமா?

“அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் உள்ள உருவச் சிலைகளைக் கடத்துவது மிகப்பெரிய ஏற்றுமதி வியாபாரமாக உள்ளதே! இந்தக் கொடுமை மற்ற மதங்களில் இல்லை. காரணம், அங்கே திருடப்பட உருவக் கடவுள்கள் இல்லை. அதனால் அக்கடவுள் உண்டு என்று கூறுவதை ஏற்கிறோம் என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்!

கடவுள் சிலை பாதுகாப்பு பெட்டகத்தில்:

முதலில் நம் நாட்டில் 87 விழுக்காடு உள்ள ஒரு மதத்தின் கடவுள்களைப் பாதுகாக்க மூலவிக்ரங்கள் _ ஒரிஜினல் சிலைகள் _  பாதுகாப்புப் பெட்டகங்களுக்கு அல்லவா அனுப்பப்படுகின்றன.

திருவிழா நாட்களில்தானே நம்ம கடவுள்கள் _ பரோலில் கைதி வெளியே வந்து மீண்டும் சிறைக்குத் திரும்புவதுபோல வந்து திரும்பும் நிலை உள்ளது?

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பேட்டி:

திருச்சியில் 6.11.2017 அன்று பேட்டி கொடுத்த அய்.ஜி. பொன்.மாணிக்கவேல் அவர்கள், தமிழக சிலைக் கடத்தல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட 363 வழக்குகளில் 100 வழக்குகள் துப்பு துலக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்! தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் நடந்த 363 சிலை திருட்டு மற்றும் கடத்தல் வழக்குகள் இந்தப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

100 வழக்குகள் வரை துப்பு துலக்கப்படாமல் உள்ளன. 100க்கும் குறைவான வழக்குகள் புலன் விசாரணையிலுள்ளன என்று கூறுகிறார் காவல்துறை அய்.ஜி!

தந்தை, மகன் கைது :

நெல்லை மாவட்டம், அத்தாளநல்லுர் கிராமத்தில், 1,600 ஆண்டுகள் பழமையான மூன்றீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 அடி உயரமுள்ள இரண்டு துவாரபாலகர் சிலைகள், 1995ஆம் ஆண்டு கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஊமத்துரை, தஞ்சாவூரைச் சேர்ந்த அண்ணாதுரை ஆகியோரை, 5.11.2017இல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மும்பையில், இந்தோ – நேபாள் ஆர்ட் சென்டர் நடத்தி வரும் வல்லப பிரகாஷ், 87, அவரது மகன் ஆதித்ய பிரகாஷ், 48, ஆகியோர், சிலை கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிந்தது. இருவரையும் 6.11.2017இல் கைது செய்தனர்.

கடத்தப்படும் கடவுள் காக்குமா நம்மை?

கடவுளைப் பாதுகாப்பது யார்? நம்மைக் கடவுள் பாதுகாக்கிறதா?

ஈரோட்டில், மேட்டூர் சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி விடுதியில், மரகதக் கல்லால் ஆன மூன்று அங்குல சிவலிங்கம், ஒன்றரைஅங்குலம் உள்ள நந்தி சிலைகளை ஏழு கோடி ரூபாய்க்கு விற்க பேரம் பேசியவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்! ஆஸ்திரேலியாவில் பல கடவுளர்கள் காட்சியகத்திலிருந்து மீட்கப்படுகின்றன. இதுபற்றி இன்னும் எவ்வளவோ?

சர்ச்சில் துப்பாக்கிச் சூடு:

கிறித்துவக் கடவுளை _ “பரமண்டல பரமபிதா’’ சர்ச்சில் அமெரிக்காவில் டெக்சாசில், பிரார்த்தனை செய்த 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளர். 5, 7 வயது பச்சிளங் குழந்தைகள் முதல் 70 வயது பெரியவர்கள் வரை இறந்தவர்கள் பட்டியலில் உள்ளனர். இதுவும் 5, 6.11.2017இல் நடைபெற்றது.

இஸ்லாமிய நாட்டில் குண்டுவெடிப்பு:

“கருணையே வடிவான’வரான கடவுளுக்கு சர்வசக்தி எந்தமத சாமிக்கும் இல்லையே? இஸ்லாமிய நாடுகளிலும் மக்கள் பல வகையான குண்டுவீச்சுகளுக்குப் பலியாகும் நிலைக்குக் குறைவில்லையே!

கடவுள் மூடநம்பிக்கை பக்தி ஒருவகை போதை மருந்துபோல. எவ்வளவுதான் தவறு என்று தெரிந்தாலும் குடிகாரர்கள் திரும்பத் திரும்ப அப் போதையை நாடும் வழக்கம் போன்றதே கடவுள் பக்தி இல்லையா? இப்படியெல்லாம் நடப்பதை, அன்றாடம் இவை தொடர்வதை அறியும் போதாவது பக்தர்களின் பகுத்தறிவு விழி திறந்துகொள்ள வேண்டாமா?

– கி.வீரமணி,
ஆசிரியர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *