‘குடிஅரசு’ தரும் வரலாற்றுத் தகவல்கள் 1 சங்கீதமும் பார்ப்பனியமும்

நவம்பர் 01-15

 

சென்னை சங்கீத மகாநாட்டில் பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான் ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு நாணயக் குறைவாயும் குற்றமாயும் நடந்து கொண்டிருக் கின்றார்கள் என்பதை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கும் நிரூபத்தால் அறியலாம். இவற்றை நமது பார்ப்பனரல்லாத பிரபுக்கள் சற்றும் லட்சியம் செய்யாமல் பார்ப்பனரல்லாத வித்வான்கள் எவ்வளவு பாண்டியத்த முடையவர்களாயிருந்தாலும் அதை லட்சியம் செய்யாமல் பார்ப்பனர்கள் என்கின்றதற்காகவே அவர்களை ஆதரிக்க முற்படுகிறார்கள். நமது நாட்டுப் பிரபுக்களின் முட்டாள் தனத்திற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்பதே நமது அபிப்பிராயம். அன்றியும், பார்ப்பனரல்லாத வித்வான்களும் தங்கள் சுயமரியாதையைப் பற்றி ஒரு சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பன வித்வான்கள் என்பவர்கள் எவ்வளவு குறைவுபடுத்தினாலும் லட்சியம் செய்யாமல் சுவாமிகளே என்று வாயைப் பொத்தி முதுகை வளைத்துக் காட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடருகின்றார்களே யொழிய, மானத்துடன் வாழ ஒருப்படுவது அருமையாய் இருக்கின்றது. இவைகளை அனுசரித்தே ஒவ்வொரு ஊரிலும். பார்ப்பனரல்லாத சங்கீத சமாஜம் ஏற்படவேண்டும் என்றும், அங்கெல்லாம் பார்ப்பனரல்லாத வித்வான்களை ஆதரிக்க வேண்டுமென்றும் பல தடவைகள் சொல்லியும், எழுதியும் வந்திருக்கின்றோம். பெரும்பாலும் இதை உத்தேசித்தே கோவையிலும் முதல் முதலாக ஒரு சங்கீத சபை ஏற்படுத்தியும் இருக்கின்றார்கள். மற்ற இடங்களும் இதைக் கவனித்து நடக்குமா?

அகில இந்திய சங்கீத மாநாட்டில் பார்ப்பனிய விஷமம்

சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத்தில் அகில இந்திய சங்கீத மாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன் அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களைக் கேட்டுக் கொண்டார்கள்.  அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி.சுப்பிரமணியப் பிள்ளை அவர்களும் ஒருவர். ஆனால் அவர் பார்ப்பன சங்கீத வித்துவான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்துப் பழகியவரானதால் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் தாம்வர முடியுமென்று எழுதிவிட்டார்.

நிபந்தனைகளாவன: 1. தனக்குப் பாடுவதற்கு 2 மணி நேரம் கொடுக்க வேண்டும் 2. கச்சேரி முடிந்தவுடன் தனக்குச் செய்ய உத்தேசித்திருக்கும் மரியாதையைச் செய்ய வேண்டும் என்பது. மாநாட்டு உப தலைவராகிய ஸ்ரீமான் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு அந்தப்படியே நடக்கும், ஆட்சேபணை இல்லை, தாங்கள் சொல்லும்படி வைத்துக்கொள்ள மாட்டேன், அவசியம் வரவேண்டும் என்று எழுதிவிட்டார். அந்தப்படியே ஸ்ரீ பிள்ளை அவர்களுக்கும் 4 மணி முதல் 6 மணி வரை சாவகாசம் கொடுத்திருப்பதாய் சம்மதம் எழுதிவிட்டார்கள்.

அந்தப்படியே ஸ்ரீமான் பிள்ளையவர்கள் சரியாய் 3:-55 மணிக்கு கொட்டகைக்குப் போனார். உடனே ஸ்ரீ சீனிவாசய்யங்கார் எழுந்துவந்து ஸ்ரீ பிள்ளையவர்களை வெகுமரியாதையாய் அழைத்துப் போய் மேடையில் உட்கார வைத்து இது சமயம் வேறு ஒருவர் பாடிக் கொண்டிருப்பதால் சற்று பொறுக்கும்படி கேட்டார்.  ஸ்ரீ பிள்ளையும் சம்மதித்து உட்கார்ந்திருந்து சரியாக 4:-30க்கு பாட அனுமதி கிடைத்ததும் பாடத் தொடங்கினார்.  ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் பாடுவதைக் கேட்ட ஜனங்கள் ஆனந்தப் பரவசமாகிக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த பார்ப்பன சங்கீத வித்வான்களுக்கு மனம் பொறுக்காமல் எப்படியாவது இதை நிறுத்திவிட வேண்டும் என்பதாக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  தாங்களாக நேரில் வந்து எதுவும் செய்ய முடியாததால் வடநாட்டு சங்கீத வித்து வானாகிய ஸ்ரீ திகம்பரர் என்பவரைப் பிடித்து ஸ்ரீ பிள்ளையவர்கள் பாடிக் கொண்டிருக்கும் போது அவரிடம் போய் நிறுத்திவிடச் சொல்லும்படி ஏவி விட்டுவிட்டு இவர்கள் மறைந்து கொண்டார்கள்.

அவர் இந்தப் பார்ப்பனர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, கொஞ்சமும் மரியாதை இல்லாமல், பாடிக்கொண்டிருந்த ஸ்ரீ பிள்ளையிடம் வந்து நிறுத்திவிடு நேரமாய் விட்டது என்று சொன்னார். அவ்விடம் சபையில் அக்கிராசனம் வகித்திருந்த சபைத்தலைவர் டாக்டர் யூ. ராமராவ் அவர்கள் ஸ்ரீ திகம்பரரை ஆட்சேபித்து அவர்களுக்கு 7 மணி வரையும் பாடும்படி நான் அனுமதி கொடுத்திருக்கிறேன். சபையோர்கள் 7:-30 மணிவரையில் அவர்கள் பாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர் பாடட்டும், நீங்கள் ஆட்சேபிக்காதீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்படியாகவே பிளாட்பாரத்திற்கு எழுந்து வந்து சொன்னார்.  ஸ்ரீ திகம்பரர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் சத்தம் போட்டார். சபையோர் கேட்டுக்கொண்டும், தலைவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் ஸ்ரீ திகம்பரர் கேட்காமல் சத்தம் போட்டதால் ஸ்ரீ பிள்ளை அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர்.சீனிவாசய்யங்காரைத்  தேடிச் சுற்றிலும் பார்த்தார், அவர் மறைந்து கொண்டார்.  பிறகு நிவர்த்தியில்லாமல் ஸ்ரீ பிள்ளை அவர்கள் சபையோர் இஷ்டத்திற்கும் தலைவர் இஷ்டத்திற்கும் முன் ஏற்பட்ட கண்டிஷன் களுக்கும் விரோதமாய் பேசாமல் அவமானத்துடன் எழுந்து போக வேண்டியதாய் நேர்ந்துவிட்டது.  தவிர கச்சேரி முடிந்தவுடன் சன்மானம் செய்வதாய் ஒப்புக்கொண்ட இந்த பார்ப்பன வித்துவானான ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அங்கு ஏதாவது கொடுப்பதானால் ஸ்ரீ பிள்ளையைப்பற்றி ஏதாவது சில வார்த்தைகள் பெருமையாய் பேச வேண்டி வருமே என்கின்ற பொறா மையாலும் சபையோருக்கு ஸ்ரீ பிள்ளை அவர்களை அறிமுகப்படுத்த வேண்டிவருமே என்கின்ற கெட்ட எண்ணத்தாலும் பேச்சுபடி நடக்காமல் ஒளிந்துகொண்டார். தவிர மாநாட்டுக்கு வந்திருந்த வித்வான்களுக்கு எல்லாம் பதக்கம் வழங்குவதற்கு ஒரு தினத்தை ஏற்பாடு செய்து அன்று வரும்படி எல்லா வித்வான்களுக்கும் அழைப்புக்கடிதம் அனுப்பி விட்டு ஸ்ரீ சுப்பிரமணியபிள்ளை அவர்களுக்கு மாத்திரம் அனுப்பவேயில்லை.  பல வழிகளிலும் சூழ்ச்சி செய்வதல்லாமல் சங்கீத வித்தையிலும் கூட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை முன் வரவொட்டாமலும் அவர்களது யோக்கியதையை வெளியாக விடாமலும் அழுத்தி வைக்க எவ்வளவு மோசங்கள் செய்து வருகின்றார்கள் என்பதை பொதுஜனங்கள் உணருவதற்காகவே இதை எழுதுகிறேன்.

– குடிஅரசு – கட்டுரை – 19.2.1928

சுழ்ச்சியும் ஏமாற்றமும்

திருவண்ணாமலை கோயில் வழக்கு ஆர்கியுமெண்டிற்காக ஸ்ரீமான் ஏ. ராமசாமி முதலியார் வரப்போகிறார் என்று திருவண்ணாமலை பொது ஜனங்களும் முனிசிபாலிட்டியாரும் ஸ்ரீமுதலியாருக்குப் பல வரவேற்புகளும் மீட்டிங்குகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதைப் பொறுக்காத பார்ப்பனர்கள் இந்த பொதுஜனங்கள் ஏமாற்றமடையட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரிலும் ஸ்ரீமுதலியாருக்கு இவ்வளவு வரவேற்பா என்கின்ற பொறாமையின் பேரிலும் ஸ்ரீ முதலியார் அன்று திருவண்ணா மலைக்கு வராமல் இருக்கும்படி செய்ய வேண்டுமெனக் கருதி, டிப்டி கலெக்டர் கச்சேரியில் கோயில் கேசை திருவண்ணாமலை மேஜிஸ்ட்ரேட் டிடமிருந்து மாற்றவேண்டு மென்பதாக ஒரு விண்ணப்பம் போட்டு கேஸ் விசாரணையை நிறுத்தும்படி உத்திரவு வாங்கி விட்டார்கள்.
நல்ல வேளையாய் இந்த உத்திரவு போய்ச் சேருவதற்கு முன்பாகவே ஸ்ரீமான்கள் ராமசாமி முதலியாரும், கண்ணப்பரும் புறப்பட்டு விட்டதால் இப்படி எல்லா வரவேற்புகளும் மீட்டிங்குகளும் வெகு ஆடம்பரமாகவே நடந்துவிட்டன. பார்ப்பனர்கள் தங்கள் சூழ்ச்சியின் பயனாய் எதிர்பார்த்த காரியம் ஏமாற்ற மடைந்து விட்டதால் பிறகு மாற்று விண்ணப்பத்தைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் மாற்றுவதற்குப் போதுமான காரணம் இல்லை யென்று தெரிந்தே விஷமஞ் செய்யக் கருதி டிப்டி கலெக்டர் பார்ப்பனரா யிருப்பதால் உத்திரவு கிடைத்துவிடுமென்று நினைத்து போட்டார்களானதால்  உத்திரவு கிடைத்தும் உத்தேசித்த காரியம் நிறைவேறாமற் போய்விட்டது. மற்றபடி கேசின் ஆர்க்யுமெண்டு திருவண்ணாமலையிலேயே நடக்கும். ஸ்ரீமான் முதலியாரும் போவார் என்றே தெரிகின்றது.

– குடிஅரசு – கட்டுரை – 19.02.1928

அருப்புக் கோட்டையில் பார்ப்பனத் தொல்லை

அருப்புக் கோட்டையில் சில பார்ப்பனர்கள் தொல்லை விளைவித்து வருவதாகத் தெரிகின்றது. 7, 8 பார்ப்பனரல்லாத வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துக் கொண்டதாகவும் அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்து ஜாமீனில் விட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

திருவண்ணாமலைக் கேசுபோலவே இந்தக் கேசும் பார்ப்பனர்களிடம் நடக்கக் கூடாது என்று விண்ணப்பம் போட வேண்டிய நிலைக்கு வரும்போல் தெரிகின்றது. அந்த ஊரில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் இல்லையாதலால் மதுரையிலிருந்து யாராவது பார்ப்பனரல்லாத வக்கீல் போகவேண்டி யிருப்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு இந்தத் திருவண்ணாமலை கேசு செலவுக்குப் பொதுஜனங்கள் உதவியது போலவே உதவவேண்டும் என்று அப்பீல் செய்து கொள்ளுகிறோம்.

– குடிஅரசு – கட்டுரை  -19.02.1928

அருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை

அருப்புக்கோட்டையில் சுகாதார வாரக் கொண்டாட்டம் நடைபெற ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் தன்னைத்தானே அக்கிராசனாதிபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆசனத்திலமர்ந்து நடவடிக்கை ஆரம்பிப்பதற்காக முதலில் ஒரு பார்ப்பனரல்லாத வாலிபர் பாட ஆரம்பித்தவுடன் அக்கிராசனத்திலிருந்த பார்ப்பனர் கோபம் கொண்டு முதல் முதல் சூத்திரன் பாடக் கூடாது; பிராமணன் தான் பாட வேண்டும் என்று சொல்ல, உடனே அங்கிருந்த கூட்டம் சூத்திரன் என்று சொன்னதற்காக அக்கிராசனரை மன்னிப்பு கேட்கும்படி கேட்கவே, அக்கிராசனர் மன்னிப்புக் கேட்காததால் கூட்டத்தார் அத்தனை பேரும் சுயமரியாதைக்கு ஜே! ராமசாமி நாயக்கருக்கு ஜே! என்று சொல்லிக் கொண்டு கலைந்து போய்விட்டார்கள். பிறகு எவ்வளவு தூரம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டும் கூட்டம் கூடவே இல்லை. இதனால் ஆத்திரம் கொண்ட ஒரு பார்ப்பன சுகாதார இன்ஸ்பெக்டர் பார்ப்பன போலீசின் உதவி பிடித்து, பல பார்ப்பனரல்லாத வாலிபர்களின் மேல் கேஸ் தொடுத்து, அதாவது அரசாங்க உத்தியோகஸ்தரின் வேலையை செய்ய வொட்டாமல் தடுத்ததாகவும் மற்றும் சிலகுற்றங்களும் சுமத்தி அரஸ்டு செய்து ஜாமீனில் விடவும் மறுத்து சிறைச் சாலையில் இரவெல்லாம் அடைத்து வைத்து கேஸ் தொடர்ந்தார்கள். கேசுக்கு மதுரையிலிருந்து வக்கீல்கள் பீசில்லாமல் போய் பல வாய்தாக்கள் ஆஜராகி கேஸ் நடத்தினார்கள். கடைசியில் குற்றவாளிகள் இன்னார் என்று சரிவர அடையாளம் காட்டவே முடியாமல் போய் விட்டது. அப்படி இருந்தும் அதிகாரிகளின் மனப்பான்மையை அறிந்த மேற்படி வாலிபர்கள் கேஸை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஆசைப் பட்டார்கள். கடைசியாய் கேசு தள்ளுபடி யாகிவிட்டதாக அருப்புக்கோட்டை யிலிருந்து தந்தி வந்திருக்கின்றது.

அனாவசியமாய் ஒரு இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்த தற்காக போலீசு அதிகாரிகள் மீது நஷ்டத்திற்கு விவகாரம் தொடர வேண்டும் என்கின்ற எண்ணம் அவ்வூராருக்கு இருப்பதாக தெரிய வருகின்றது. அதற்காக பலர் பொருளுதவி செய்ய முன் வருவதாகவும் தெரிய வருகின்றது. என்றாலும் விடுதலை அடைந்த விஷயத்திற்காக வாலிபர்கள் பதினொருவரையும் பாராட்டுவதுடன் இந்தக் கேசுக்குப் பொருள் கருதாது தங்கள் கஷ்ட நஷ்டத்தையும் கருதாது வந்து உதவி செய்த மதுரை வக்கீல்களுக்கு நமது நன்றியறிதலைத் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

– ‘குடிஅரசு’ -துணைத் தலையங்கம் – 10.06.1928

(தொடரும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *