வாஸ்து மோசடிக்கு எதிராய் வழக்கு!

நவம்பர் 01-15

ஏழையானாலும் பணக்காரர்களானாலும் ஏன் அரசுகளேகூட வீடுகளோ மற்ற கட்டடங்களோ கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்பட்டதா? வாஸ்துப்படி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

இந்த வாஸ்து என்பவன் யார்? அரன் (சிவன்) அந்தகாசுரன் என்கிற அசுரனோடு போர் புரிகின்றான். போரிலே சிவன் களைத்துப்போய் அரக்கனை வெல்ல இயலாமல் திகைக்க அவருடைய வியர்வை பூமியில் சிந்துகிறது. அந்த வியர்வை பூமியைப் புணர்ந்து ஒரு பெரிய பூதம் பிறக்கிறது. அந்தப் பூதம் அந்தகாசுரனுடைய குருதியைக் குடித்து மல்லாந்து கிடக்கிறது. அதன்மீது தேவர்கள் குடியேறி வசித்ததால் அவன் வாஸ்துவானான் என்கிறது புராணம்.

இப்படிப்பட்ட வாஸ்து பார்த்து வீடு கட்டுவது எந்த வகையில் அறிவுக்குகந்தது?

வாஸ்துவிற்கான விதிகளை வகுத்தபோது இன்றுள்ளதுபோல் வானாளவ உயர்ந்து பலமாடி அடுக்ககங்கள் அன்று இருந்தனவா? அவற்றிலே தனியாகக் கழிவறைகள் ஓய்வறைகள் இருந்தனவா? திண்ணைகளும் தாழ்வாரங்களும்தானே இருந்தன! இன்றுள்ளதுபோல் போர்டிகோ என்றும் வாகனம் நிறுத்துமிடமென்றும் மேல்நிலை நீர்த்தொட்டி என்றும் அமைப்புகள் இருந்தனவா? இவற்றிற்கான இலக்கணங்களை அவர்கள் எப்படி அன்று வகுத்திருக்க முடியும்? இப்படிக் கட்டப்படும் கட்டடங்களுக்கும் வாஸ்து இலக்கணம் வரையறுப்பது ஒரு மோசடியல்லவா?

வாஸ்து என்பது ஆரியப் பார்ப்பனச் சுரண்டலுக்கும், அவர்கள் மேலாதிக்கத்திற்கும் உதவுவது என்பதைக் கீழ்க்கண்ட விவரத்தைப் படித்தால் அறியலாம்.

1.    பார்ப்பன் வீடுகட்ட நல்வாசனையுடைய வெண்மை நிற மண்ணும் இனிப்புச் சுவையுடைய நீரும் உள்ள நிலம்.

2.    க்ஷத்திரியன் –_ சிவந்த ரத்த மணமுடைய மண்ணும் இறுகிய நீரும் கொண்ட நிலம்.

3.    வைசியன் _ அரிசி மணமுடைய பசுமை நிற மண்ணும் புளிப்புச் சுவையுடைய நீரும் உள்ள நிலம்.

4.    சூத்திரன் _ மூத்திர மணமுடைய கருமை நிற மண்ணும் கசப்புச் சுவையுடைய நீரும் கொண்ட நிலம்.

இந்தப் பட்டியலில் பஞ்சமன் இடம்பெறவில்லையே! பஞ்சமனுக்கு வீடு தேவையில்லையா? இதிலிருந்து இந்த வாஸ்து ஆரியப் பார்ப்பனர் சுயநலம் என்பது விளங்கவில்லையா?

வாஸ்து ஒரு மோசடி என்பதற்கு அண்மையில் பத்திரிகையில் வந்த செய்தியே ஆதாரம்! கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியைச் சேர்ந்த மகாதேவ் துதிகால் என்பவர் ஒரு வாஸ்து நிபுணர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன் மகள்களுக்கு குறித்த காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்பதற்காக தன் வீட்டில் ஏதேனும் குறையிருக்கலாம் என்று வாஸ்து நிபுணரிடம் ஆலோசனை செய்துள்ளார். அவரும் வீட்டை வந்து பார்த்துவிட்டு சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கூறிவிட்டு தனக்கான கட்டணமாக ரூ.11,600 பதினோராயிரத்து அறுநூறு பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.

அதன்படி ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து வீட்டைத் திருத்தி அமைத்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கடந்தும் அவர் மகள்களுக்குத் திருமணம் ஆகவில்லை. வெறுத்துப் போன அவர் விஜயபுரா மாவட்ட நுகர்வோர் அமைப்பிடம் வழக்கு தாக்கல்செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த ஆண்டு 2016 அக்டோபர் மாதத்தில் தாக்கலாகியுள்ளது.

இது மட்டுமன்றி அதே கர்நாடக மாநிலத்தில் 2015ஆம் ஆண்டு, வழக்கறிஞர் ஒருவர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்துவந்த வாஸ்து நிபுணர் மீது ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வசதிக்கேற்ப வீடு என்ற நோக்கத்தை மாற்றி வாஸ்துக்கேற்ற வீடு என்று வீட்டை மாற்றியமைத்து பொருளையும், வசதியையும் இழப்பது சரியா சிந்தியுங்கள்!

– கெ.நா.சாமி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *