தங்கதுரை வரவுக்காக பள்ளி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆம்! அன்று பெரியநாடு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா. அதற்கு சிறப்புப் பேச்சாளராகத் தங்கதுரையை அழைத்தி ருந்தார்கள். தங்கதுரை சிறந்த பேச்சாளன், இளைஞன். எல்லாத் தரப்பு மக்களும் விரும்பிக் கேட்கும் வண்ணம் அவனது பேச்சு மிகத் தெளிவாக இருக்கும். ஆனால், அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் குறித்த நேரத்தில் எந்த விழாவிற்கும் செல்ல மாட்டான். மிகவும் அகந்தை பிடித்தவனாக இருந்தான். வேண்டுமென்றே நேரம் கழித்துச் செல்வான். தன் வருகைக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டுமென நினைக்கும் மனமுடையவன்.
இதனால் அவனைப் பேச அழைக்கவே அனைவரும் அச்சப்படுவார்கள். இருப்பினும் இளம் வயதினன், நல்ல பேச்சாளன் என்பதால் அவனை விரும்பி சிலர் அழைக்கின்றனர். அவனுக்காகவே நேரத்தை முன்கூட்டியே போட்டு அவன் வரும் நேரத்தை சிலர் சரி செய்வதும் உண்டு.
அன்றைய பள்ளி விழாவிற்கும் தாமதமாகவே வந்தான். ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் மிகவும் வருத்தமடைந்தனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் தாமதமாக வந்த தங்கதுரை அதற்காக வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. அவன் வந்தவுடன் தலைமை ஆசிரியர் அவனைப் பேசுமாறு அழைத்தார். தங்கதுரை நீண்ட நேரம் பேசினான்.
“மாணவர்களே! மாணவிகளே! முதலில் உங்கள் உடல் வளர்ச்சியடைய வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? திருமூலர் கூற்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
“உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’’
என்கிறார் திருமூலர்.
உடல் வளர்ச்சியடைந்தால்தான் மனவளர்ச்சி ஏற்படும். பிறகு அறிவு வளர்ச்சி. அதற்குப் பிறகு முக்கியமானது நல்லொழுக்க வளர்ச்சி.
பயமும் கவலையும் உங்களுக்கு இல்லையென்றால் உங்களுக்கு பல நோய்கள் வராது, இருந்தால் விலகி விடும். நீங்கள் உங்களுக்கென்று ஒருவரை முன் உதாரணமாக அமைத்துக் கொள்ள வேண்டும். வீரர்களை, அறிவாளிகளை, விஞ்ஞானிகளை நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும்.’’
இவ்வாறு கூறிக்கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினான்.
“இது என்ன புத்தகம்?’’ என்று மாணவ, மாணவிகளிடம் கேட்டான்.
“தாமஸ் ஆல்வா எடிசன்’’ என்று அவர்கள் பதில் அளித்தனர்.
“ஆமாம். உழைப்பை மட்டுமே நம்பி அரிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கிய உத்தம விஞ்ஞானி அவர். உங்களைப் போன்று அவர் பள்ளி மாணவனாக இருந்தபோது பத்திரிகை விற்று பொருள் ஈட்டி அதைக் கொண்டு பரிசோதனைக் கூடத்தை அமைத்து சோதனைகளை மேற்கொண்டார்.
இவரது பதினைந்தாவது வயதில் இவரே பத்திரிகை நடத்தினார். பத்திரிகை ஆசிரியராக இருந்து பத்திரிகை வெளியிட்டார்.
“வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் போதும்’’ என்பது அவரது பொன்மொழிகளுள் ஒன்றாகும்.
கிராமபோன், மின்விளக்கு, திரைப்படக் கருவி, டைனமோ, எக்ஸ்ரே படங்களைப் பார்க்க உதவும் கருவி என மொத்தம் 1,300 கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அவரைப் போல் நீங்கள் செய்வீர்களா?
இவ்வாறு தங்கதுரை கூறி நிறுத்தியதும், அனைவரும் செய்வோம் என்பதுபோல் தலையாட்டினர்.
தங்கதுரை தொடர்ந்து பேசினான்.
“மாவீரன் அலெக்சாண்டருக்குப் பின் சிறந்த வீரனாக வரலாறு படைத்தான் மாவீரன் நெப்போலியன். இத்தாலியின் கார்சிகா தீவில் பிறந்த அவன் தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய பிரான்ஸ் நாட்டு மக்களுக்காக உழைத்தான். வெற்றிகளைத் தேடித் தந்தான். உறங்கக்கூட அவனுக்கு நேரமில்லை. குதிரையின்மீது அமர்ந்துகொண்டே ஒரு சில நிமிடங்களே உறங்குவான். அவனுக்கிருந்த வீரம் உங்களுக்கும் வேண்டும்.
படிப்பதிலே நீங்கள் புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டும். 1795ஆம் ஆண்டு கலகக்காரர்களுக்கு எதிரான போரில் நெப்போலியன் சாதாரண பீரங்கிக் குண்டுகளுக்குப் பதிலாக கிரேப்ஷாட் (நிக்ஷீணீஜீமீsலீஷீt) என்கிற புதியரக குண்டுகளைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினான். அதுபோல அறிவின்மையை விரட்ட கிரேப்ஷாட் போன்ற அறிவாயுதத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.’’
இவ்வாறெல்லாம் பேசிய தங்கதுரையின் பேச்சை அனைவரும் விரும்பிக் கேட்டனர். இருப்பினும் அவன் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் கூட்டத்தை விரைவில் முடிக்க வேண்டியதாகி விட்டது. மற்றவர்கள் பேச வாய்ப்பும் இல்லாமல்போய்விட்டது.
சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் தங்கதுரை பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்த தங்கதுரை மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் மனைவி கற்பகத்தை அழைத்தான்.
“கற்பகம், இந்தக் கடிதத்தைப் பாரேன்’’
“என்ன கடிதம்?’’ என்று கேட்டவாறே கற்பகம் வந்தாள்.
கடிதத்தை வாங்கிப் படித்த அவளுக்கும் மகிழ்ச்சி.
“உங்களைச் சிறந்த பேச்சாளராக சிங்கப்பூர் மக்கள் கழகம் தேர்ந்தெடுத்துள்ளது. இதுபோல் பல துறைகளில் சிறப்பாக விளங்குபவர்களைத் தேர்வு செய்து பரிசு தரப் போறாங்களாம். பரிசை வாங்க உங்களை நேரில் வரச் சொல்லியிருக்காங்க. உங்ககூட இன்னொருவரும் வரலாமாம். சிங்கப்பூர் பிரதமரே கலந்து கொள்கிறாராம்’’ பெருமையுடன் கூறினாள் கற்பகம்.
“ஆமாம். அடுத்த மாதம் போகணும்’’ என்றான் தங்கதுரை.
“ஏங்க, கூடவே ஒருத்தர் வரலாமில்லையா? நானும் உங்ககூட வர்றேன்’’இவ்வாறு கற்பகம் கூறியதும் தங்கதுரை சற்று நேரம் யோசித்தான். பிறகு கற்பகத்தைப் பார்த்து,
“கற்பகம், உனக்கு இன்னும் வயசு இருக்கு. நிறைய வாய்ப்புகள் வரலாம். அதனால் இந்த முறை என் அம்மாவை அழைச்சிகிட்டு போறேனே! அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்’’ என்று சற்று தயங்கியே கூறினான் தங்கதுரை.
கற்பகத்திற்கு சற்று வருத்தமாக இருந்தாலும் பெருந்தன்மையுடன் சரி என்று தலையசைத்தாள்.
சிங்கப்பூர் புறப்படும் நாள் வந்தது. சிறந்த பேச்சாளர் விருது பெறச் செல்லும் தங்கதுரையையும் அவன் அம்மாவையும் ஊர் மக்களும் உறவினர்களும் வழியனுப்பி வைத்தனர்.
சிங்கப்பூர் வந்தவுடன் அவர்களை மக்கள் கழக நிர்வாகிகள் வரவேற்று சகல வசதிகளும் நிரம்பிய விடுதியில் தங்க வைத்தனர்.
தங்கதுரையின் அம்மா சிங்கப்பூர் நகரை வியந்து பார்த்தார். தொடர் வண்டியில் பயணம் செய்தபோது தமிழில் அறிவிப்பு செய்ததைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்.
“தங்கதுரை, சீனத்தோட்டம் என்று அழகாகத் தமிழில் சொல்கிறார்களே, நம்ம நாட்டு விமானத்தில்கூட தமிழில் சொல்லவில்லையே, இந்த ஊரில் சொல்றாங்களே’’ என்று வியந்து கேட்டார்.
“ஆமாம்மா, இங்கு நம் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. அதோடு மலேயா, சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் ஆட்சி மொழிகள்’’ என்றான் தங்கதுரை.
புல்வெளிகளையும், குப்பைகள் இல்லாத தரமான சாலைகளையும் பார்த்து இருவரும் பரவசமடைந்தனர். இரவில் ஒளி வெள்ளத்தில் மிதந்தது சிங்கப்பூர்.
மறுநாள் காலை விழா என்பதால் மனதுக்குள் சிங்கப்பூர் வாழ்க என்று கூறிக்கொண்டே தங்கதுரையை சீக்கிரம் தூங்கச் சொல்லிவிட்டு கண்ணயர்ந்தார் அம்மா.
பொழுது விடிந்தது. அம்மா தங்கதுரையை எழுப்பி உடன் கிளம்பச் சொன்னார். ஆனால், தங்கதுரை உடன் கிளம்பாமல் வழக்கம்போல் தாமதம் செய்தான். எழுந்து உட்கார்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தான்.
“தம்பி, சீக்கிரம் கிளம்பு. நேரமாகிறது’’ அவசரப்படுத்தினார் அம்மா.
“இதோ கிளம்புறேன்’’ என்று சொல்லிக் கொண்டே பொறுமையாகக் கிளம்ப ஆரம்பித்தான் தங்கதுரை.
அவர்களை அழைத்துச் செல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கார் அனுப்பியிருந்தார்கள். கார் ஓட்டுநர் நேரத்தில் கிளம்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் தங்கதுரை அரைமணி நேரத்திற்கு மேல் தாமதம் செய்தான்.
பிறகு ஒரு வழியாகக் கிளம்பி அம்மாவை அழைத்துக்கொண்டு விடுதிக்கு வெளியே வந்தான். ஆனால் காரையும் ஓட்டுநரையும் காணவில்லை. தாமதமாகிவிட்டதால் அவர் சென்று விட்டார் போலும்.
பிறகு ஒரு வாடகைக் காரைப் பிடித்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தான். அப்போது நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணிநேரம் ஆகிவிட்ட நிலையில் நிகழ்ச்சி முடியும் நிலைக்கு வந்துவிட்டது. பிரதமர் மற்றும் பிற அலுவலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புறப்படத் தயாராகி வெளியே வந்துவிட்டார்கள்.
தங்கதுரை செய்வதறியாது திகைத்தான். அவன் அம்மாவுக்கோ ஒரே வருத்தமாகவும் அதே நேரத்தில் மகனின் செயலை நினைத்து ஆத்திரமாகவும் வந்தது.
நமது நாட்டில் செய்த காரியத்தைப் போல் இங்கும் காலதாமதம் செய்ததால் பரிசு பெறும் அரிய வாய்ப்பினை இழக்க நேரிட்டு விட்டது. விழாவும் குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடிந்துவிட்டது.
ஏமாற்றத்துடன் விடுதிக்குத் திரும்பினார்கள்.
ஏமாந்த நிலையில் மறுநாள் சிங்கப்பூரிலிருந்து கிளம்பி சென்னையை அடைந்தனர். அம்மாவுடன் பேருந்தில் ஏறி ஊருக்குப் பயணித்தான். பேருந்தில் முன் இருக்கையில் இருவர் பேசிக்கொண்டே வந்தனர். அதைக் கூர்ந்து கவனித்தான் தங்கதுரை.
“தமிழ்நாட்டில் ஒரே ஒரு தலைவர்தான் குறித்த நேரத்தில் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்தார். குறித்த நேரத்திற்கு மட்டுமல்ல, விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே மேடைக்குச் சென்று விடுவார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்கூட எப்படியாவது ஒப்புக்கொண்ட படி தொண்டர்களை ஏமாற்றாமல் வந்துவிடுவார். ஒருமுறை பூதலூர் என்ற ஊரில் கூட்டம். செல்லும் வழியில் அந்தத் தலைவருக்கு உடல்நலமில்லாமல் போய்விட்டது. குளுக்கோஸ் கூட ஏற்றப்பட்டது. டாக்டர்கள் ஓய்வெடுக்குமாறு கூறினார்கள். ஆனாலும் அதையும் மீறி ஒப்புக்கொண்டபடி கூட்டத்திற்குச் சென்று விட்டார். அந்தத் தலைவர் யார் தெரியுமா?’’ என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார்.
“தந்தை பெரியார்தானே!’’ என்று மற்றவர் புன்னகையுடன் தனக்குத் தெரியும் என்பதுபோல் பதில் கூறினார்.
முதலாமானவர், “ஆமாம்’’ என்று தலையசைத்தார். தங்கதுரையின் தலையும், ஆமாம்! என அசைந்தது. அந்த அசைவில் அவன் அகந்தையும் தொலைந்தது.
-ஆறு.கலைச்செல்வன்