சூறாவளியின் தாக்குதலால் செல்போன் கோபுரங்களும், தொலைத்தொடர்பு வசதியும் முறிந்துபோய் தகவல் தொடர்பு வசதி முற்றிலும் செயலிழந்து போனநிலையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது முதல் நிவாரண உதவிகளை அளிப்பது வரை எல்லாவற்றிலும் சிக்கல் வரும். அத்தியாவசியப் பணிகளை உடனே ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் தொடர்பு கொள்ளவும் அடிப்படை தொலைத்தொடர்பு வசதி உடனடி தேவை. எனவே, முன்னணி தேடுயந்திர நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ‘லூன்’ திட்டத்தின் சார்பில் இப்பணியைச் செய்ய பலூன்கள் பறக்கவிடப் படுகின்றன.
ஹாட்ஏர் பலூன் ரகத்தைச் சார்ந்த இந்த பலூன்களோ குறிப்பிட்ட பகுதியில், வானில் வரிசையாய் பறக்கவிட்டு அவற்றை வயர்லெஸ் முறையில் வலைப்பின்னலாக இணைப்பதன் மூலம் தரைப்பகுதியில் உள்ளவர்களுக்கு இணைய வசதியை அளிக்க முடியும்.
இந்தப் பலூன்கள் காற்றின் போக்கில் இயங்கி அதற்கேற்ப நிலைநிறுத்திக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. மோசமான வானிலை நிகழ்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பானவை. மேலும், விமானங்கள் போன்றவற்றுக்கு இடைஞ்சல் இல்லாத அளவுக்கு காற்று மண்டலத்தில் 15 முதல் 20 கி.மீ. எல்லையில் இவை இயக்கப்படுகின்றன. உயர்தரமான பிளாஸ்டிக்கால் ஆன இந்தப் பலுன்கள் ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்டு அதன் மூலம் இயங்குகின்றன. ஒவ்வொரு பலூனும் ஒரு டென்னிஸ் மைதானம் அளவு பெரிதானவை. இந்த பலூன்கள் சராசரியாக 100 நாட்கள் செயல்படக் கூடியவை. தானாக இயங்கிக்கொள்ள சோலார் வசதியைப் பெற்றுள்ளன.
சில மாதங்களுக்கு முன் தென்னமெரிக்க நாடான பெருவில் வெள்ள பாதிப்பு உண்டானபோது, இணைய பலூன்கள் மூலம் தொலைத்தொடர்பு வசதி அளிக்கப்பட்டது.
தற்போது சூறாவளியால் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட பியூர்ட்டோ ரிக்கோவிலும் இந்த பலூன்கள் வலம் வந்து மிகவும் அவசியமான இணைப்புச் சேவையை அளிக்க உள்ளன.