‘தேசபக்தியை நிரூபிக்கும் இடம் திரையரங்கம் அல்ல’

நவம்பர் 01-15

“சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்காவிட்டால் அந்த நபருக்கு தேசப்பற்று குறைவென்று கருதமுடியாது;  தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் கூறியுள்ளது.

“மக்கள் பொழுதுபோக்கிற்காக சினிமா தியேட்டர்களுக்குச் செல்லுகிறார்கள்; தேசபக்தியை நிரூபிக்கும் இடம் அதுவல்ல.

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர் டி.சர்ட்டுகள், அரைக்கால் சட்டை அணிந்து வந்தால் அது தேசபக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல் எனக் கருதி அவற்றிற்குத் தடை விதிக்க மத்திய அரசு விரும்பலாம்.

விளையாட்டு மைதானங்களில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது; பெரும்பாலோருக்கு அதன் பொருள் புரிவதில்லை. இதற்கென மத்திய அரசு தனி விதிமுறைகளை வகுக்க வேண்டும்.’’ இவ்வாறு அந்த அமர்வு மேலும் கூறுகிறது.(23.10.2017)

நம் நாட்டில் ‘தேசபக்தி’ என்பதைக் காக்க பழைய பிரிட்டிஷ்_வெள்ளைக்காரன் கொண்டு வந்து, தனது ஆட்சிக்கு எதிரானவர்களை அடக்குமுறை மூலம் அழிக்க நினைத்த அதே சட்டத்தை, ‘சுதந்திரம், சுயராஜ்யம்’ வந்து 70 ஆண்டுகள் ஆன நிலையிலும் தொடருவது, அதை வைத்தே “தேசவிரோதம்’’ என்று அரசுகள் (153A Sedition போன்ற பிரிவுகள்) தங்கள் மீது _ ஜனநாயகத்தில் எதிர்க்குரல் கிளம்பாமல் தடுக்க குரல்வளையை நெறிக்கப் பயன்படுத்துவது எவ்வகையில், ஒரு இறையாண்மைமிக்க மதச்சார்ப்பற்ற, சோஷலிச, ஜனநாயக குடியரசில் நியாயமானது? என்ற கேள்விக்கு இதுவரை சரியான பதில் இல்லை.

உதாரணமாக 1938இல் பயன்படுத்தப்பட்ட ‘ரவுலட் சட்டமான’ கிரிமினல் சட்டத்திருத்தம்’ என்பதை, இன்றுவரை _ ஆர்ப்பாட்டங்கள் _ மக்கள் கிளர்ச்சிகளை அடக்க, காவல்துறை _ அரசு பயன்படுத்துவது அசல் கேலிக் கூத்தல்லவா?

உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதுபோல ‘தேசபக்தி’  என்பதை நிரூபிக்க வேண்டிய இடங்கள் திரைப்பட அரங்குகளோ, விளையாட்டு மைதானங்களோ அல்ல.

தேசம், தேசபக்தி, இறையாண்மை என்பதே ‘உலகமயம்’ _ சர்வதேசியம் _ உலகக் குடிமகன் என்ற எண்ணமும் இணையம், மின்

அஞ்சல் போன்றவைகளும், கணினி மொழிகளும் வந்துவிட்ட பிறகு _ தேசபக்தி என்பதே ‘குறுகிய மனப்பான்மை’ என்ற வாதத்திற்கு இடம் கொடுப்பதாகாதா?

‘நீட்’ தேர்வு என்ற மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான தேர்வை – Global Examination – உலகத்தின் பன்னாட்டவரும் கலந்துகொள்ளும் தேர்வாக அறிவித்து நடத்தி 1000 வெளிநாட்ட வருக்கு ( (Foreign Nationals) இடம் கொடுத்துள்ளது தேசபக்தியின் அடையாளமா?

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்’’ என்ற பாடல் வரிகளைக் கூட இது தேசவிரோதம் என்று சிலரால் வாதாட முடியுமே!

இந்நிலையில், மானுடம், உலகப் பார்வை என்று வரும்போது, இந்த தேசபக்தியை திரையரங்குகளில் கட்டாயப்படுத்தி எழுந்து நிற்கச் செய்வதின் மூலம் புகுத்திவிட முடியுமா?

எனது தேசத்தில் ஜாதி இல்லை; தீண்டாமை இல்லை; பெண்ணடிமை இல்லை; அனைவருக்கும் அனைத்தும் ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்ற தத்துவமே நடைமுறை. பொது ஒழுக்கச் சிதைவுக்கு இந்த ‘தேசத்தில்’ இடம்தர மாட்டோம் என்று பிரகடனப் படுத்துவதே இத்தனை ஒப்பனை, தேசபக்தியைத் தாண்டிய மனிதநேயம். எனவே, அது வளர அரசுகளும் மக்களும் பாடுபடுவார்களாக!

– கி.வீரமணி,
ஆசிரியர் .

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *