உலகப் பார்வை கொண்ட உலகத் தலைவர் பெரியார்!

அக்டோபர் 16-31

[இக்கட்டுரையாளர் – சிங்கப்பூரில் பெரியார் விருது பெற்ற உயர் அதிகாரி; நூலகத்துறை, சிங்கப்பூர் கல்வித் துறையில் சீரிய தொண்டாற்றும் சிறப்பான அதிகாரி.

அவரது இக்கட்டுரை அருமையான படப்பிடிப்பு. படித்து, சுவையுங்கள்!

தந்தை பெரியார் 139ஆம் ஆண்டுக்கான சிறப்புக் கட்டுரையாகும் இது.
 — ஆசிரியர்]

2009ஆம் ஆண்டு… சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் எனக்கு ‘பெரியார் விருது’ தந்து சிறப்பித்தது. பெரியார் அவர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்த நான் அப்போதுதான் அவரைப்பற்றி ஆழமாகச்  சிந்தித்தேன்.  

எங்கேயோ பிறந்தவர், வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர், ஊர் உலகக் கவலை எதுவும் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லாதவர், பணம் உள்ள வணிகக் குடும்பம், படிப்பு கூட அவருக்குத் தேவைப்படவில்லை; குறைந்த படிப்பு தான்.

ஆனாலும், அவர் பிற்காலத்தில் நாடறிந்த நாயகனாகிறார். ஏழை எளியோரின் உற்ற நண்பனாகிறார். தன்னைச் சுற்றி வாழும் ஒவ்வொருவரின் கவலையிலும் பங்கேற்கிறார். மொழி பற்றி சிந்திக்கிறார். மொழிச் சீர்திருத்தங்களுக்கு வழி திறக்கிறார்.

ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகத் தனிமனிதப் போராட்டம்  நடத்துகிறார். மக்கள் மனமுவந்து ஏற்பதைப் பழக்கமாக்கிக் கொண்ட அன்றைய  சமுதாயத்தில்,  புறையோடிப் போன மூடபழக்க வழக்கங்களை  தனித் தெம்புடன் முழு மூச்சாக எதிர்க்கிறார்.

“பக்தி வேண்டுமானால் தனி மனிதனுக்குச் சொந்தமாக இருக்கட்டும். ஆனால், ஒழுக்கம் பொதுவுடமை’’ என்கிறார் தந்தை பெரியார்.  

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒழுக்கம் இன்றியமையாதது என்று குரல் கொடுக்கத் தொடங்கியது கிட்டதட்ட நூறு ஆண்டுகளுக்கு முன். “சுயமரியாதை இல்லா சமுதாயம் முன்னேறவே முடியாது’’ என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். பெரியார் ராமசாமியை நாம் அன்றிலிருந்து சமூக சீர்திருத்தவாதியாகவே பார்த்து வருகிறோம்.

தனி மனிதப் போராட்டமாகத் துவங்கி, அன்றே தமிழ் மண்ணில் சமூக சிந்தனையாளராக விளங்கிய ஈ.வெ.ரா அவர்கள் வாழ்ந்து, வளர்ந்த ஈரோடு இல்லத்திற்கு நான் சென்றபோது என் நெஞ்சில் நிழலாடிய எண்ணங்கள் ஏராளம்.

தமிழ்ச் சமுதாயத்தின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்ணோட்டமிட்டு, அவற்றிற்கான வழிமுறைகளை வகைப்படுத்தி பத்திரிக்கைகளின் வழியும், மேடைப் பிரசங்கங்களின் வழியும் மக்களுக்கு பெரியார் அவர்கள் எடுத்துச் சென்றிருப்பது பிரமிப்பைத் தருகிறது.

மனித நேயத்தை முன்னிறுத்தி அவர் நடந்து கொண்ட முறைகள் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. கொள்கை மாறுபட்டவர் களையும் அவர் வாரி வளைத்துச் சென்றவர். நாத்திகக் கருத்துகளுக்குத் தாய்வீடாக விளங்கிய  பெரியார், ஆன்மிகப் பெரியார்களின் உற்ற நண்பராக  விளங்கி இருப்பதைக் காண்கிறோம்.  

வயதில் சிறிய பிள்ளைகளையும், “வாங்க உட்காருங்க’’ என மரியாதை முழங்க மனித நேயப் பண்பு காட்டியதைப் படிக்கும்போது மனம் நெகிழ்கிறோம்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு மகாகவி பாரதியார் நிறையப் பாடினார் என்பது மறுக்க முடியாது. ஆனால், பெண்களின் முன்னேற்றத்திற்காக வீடு வீடாக, தெருத் தெருவாக, ஊர் ஊராக நுழைந்து, மேடை போட்டுப் பேசிப் பெரும் பலனையும் தந்த ஒரே சமூகச் செம்மல் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்கிற இன்றைய நிலைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

மக்கள் விடுதலை அடைவதற்குரிய மார்க்கங்கள் என்று யோசித்தால், பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசியம் கல்விச் செல்வம், தொழில், சமூக சமத்துவம், பெண்கள் சமத்துவம், பெண்கள் விடுதலை ஆகியவை. “கல்வி ஏன் அவசியம் என்றால், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கும் நல்வாழ்க்கை  வாழ்வதற்கும் தகுதியுடையவனாக ஆக்குவதற்குத்தான்’’ என்கிறார் தந்தை பெரியார்.

பெரியார் சிறு வயது முதற்கொண்டே சுதந்திர எண்ணமுடையவராக, தான் சொல்கிறபடி மக்கள் நடக்க வேண்டும் என்கிற உணர்ச்சி உள்ளவராக வாழ்ந்திருக்கிறாரே தவிர மற்றொருவர் சொல்படி நடக்க வேண்டும் என்கிற எண்ணம் அற்றவராகவே இருந்திருக்கிறார். அவரின் சரித்திரத்தில் அவருக்குத் தலைவனே இருந்ததில்லை. தனது 10ஆவது வயதில் நான்காம் வகுப்பு முடித்த பிறகு வியாபாரத் துறையில் தனது தகப்பனாரின் மண்டிக் கடையில் கையாளாக ஆகிவிட்டார்.

கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை இவை மட்டுமே, தாழ்ந்த மக்களை தலைநிமிரச் செய்யும், என்கிற உலக சமுதாயமே ஏற்கத் தகுந்த  கோட்பாட்டை நமக்களித்த பெரியார், பிறந்த நாடு மட்டுமன்றி உலகின் பல நாடுகளுக்கும் குறிப்பாக தமிழர் வாழும்  கிழக்காசிய நாடுகளுக்கும் சென்று பரப்பி உள்ளது நமக்குப் பெருமை தருகிறது.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகும். தான் சர்வாதிகாரம் செய்வதை அவர் ஓர் அளவுக்கு ஒப்புக்கொள்கிறார். ஆனால், ஆணவத்திற்காக அல்ல, தான் எடுத்துக்கொண்ட பொறுப்பு அம்மாதிரியானது என்கிறார். “தன் கழக இலட்சியத்தின் வெற்றிக்காகவும், பொது நன்மைக்காகவும் மட்டும்தான் சர்வதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தன் சொந்த நன்மைக்காக அல்ல’’ என்று மக்களை ஆராய்ந்து பார்க்கச் சொல்கிறார். “ஆட்சியில் சர்வாதிகாரியாக ஆகும்படியான நிலை தனக்கு ஏற்பட்டால், முதல் காரியமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பேதத்தை, வித்தியாசத்தை ஒழிப்பேன்’’ என்கிறார்.

தான் ஒரு சாதாரண மனிதன், எந்தவிதத் தன்மையும் பொருந்தியதொரு தீர்க்கதரிசியல்லன் என்று சொன்ன பெரியார், “என் மனதிற்குட்பட்டதை சொல்லியிருக்கிறேன். இதை நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை.  உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். ஏற்கக்கூடிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளி விடுங்கள். ஆகையால், ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்களும் கருதி அதை அப்படியே நம்பிவிடக்கூடாது’’ என்றார் ஈ.வெ.ரா.

“தனது மக்களும் சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டும் என்ற காரணத்தால்தான், தான் தொண்டாற்றுகிறேன்’’ என்கிறார். “தன் வாழ்வு, மூச்சு, சர்வமும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தன் இனமக்கள் முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத்தன்மை அடைய வேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த சுயநலமும் தனக்கில்லை’’ என்றார் பெரியார். “உலகம் முழுவதும் மக்கள் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குக் கெடுதல் செய்யக் கூடாது; மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், துக்கம், கவலை ஏற்படுவதற்கு இடமில்லாது அமைதியான வாழ்வுக்கு வகை செய்ய வேண்டும். இதுதான் தனது ஆசை’’ என்கிறார்.

‘பிளிட்சு’ பத்திரிக்கையிலிருந்து எழுத்தாளர் ஒருவர் பெரியாரைச் சந்தித்துக் கேட்டாராம். “நீ என்ன மதம் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு பெரிய மதத் தலைவன் போல தாடி வைத்துக்கொண்டிருக்கிறாயே’’ என்று. அதற்குப் பெரியார் பதிலளித்தாராம், “மதத்திற்காக நான் தாடி வைத்துக்கொள்ள வில்லை. நீங்களெல்லாம் சோம்பேரிகள், நேரத்தைப்பற்றிக் கவலைப்படாதவர்கள், அதனால் முடியைக் குறைப்பதற்கு நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நேரத்தைப் பற்றிய கவலை இருப்பதால்தான் நான் முடியைக் குறைத்துக் கொள்வதற்காக நேரத்தைச் செலவிட விரும்பவில்லை’’ என்று.

பெரியாரின் தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் அதனை அவர் தனது தினசரிப் பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்க வில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத் தான் பயன்படுத்தினார். வியாபாரம், நண்பர்களின் பழக்கத்தினால் கன்னடத்தைவிட தெலுங்கிலும் கொஞ்சம் பயிற்சி இருந்திருக்கிறது. இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே அவரால்  தன்னுடைய கருத்துக்கள் அத்தனையும் நினைக்கின்ற மாதிரி வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

உண்மையிலேயே தன்னை நாத்திகன் என்றும், மதத்துவேசி என்றும் பலர் சொல்லுகிறார்கள். பலர் கருதியும் உள்ளார்கள். அப்படி யாராவது அவ்வாறு கருதி இருந்தார்களேயானால் தனக்கு அது மகிழ்ச்சி என்கிறார். ஆஸ்திகன் என்று கருதியிருந்தார்கள் என்றால் அவர்களுக்காக, தான் பரிதாபப்படுவதுடன் இந்த மாதிரியான மக்களிடையே இருக்க வேண்டி இருக்கிறதே என்று தன்னையே, தான் வருத்திக் கொள்கிறாராம்.

“எப்போதுமே தன்னிடம் பணம் என்று ஒன்றுமில்லை. தான் பொதுப் பணிக்கு வந்த போது தன்னிடம் இருந்த பணத்தை, சொத்தையெல்லாம் இயக்கத்தின் பெயருக்கே எழுதி வைத்துவிட்டதால் இயக்கப் பணத்தில்தான், தான் சாப்பிடுவது முதல் எல்லாமாகும் என்கிறார். பொது மக்கள் கொடுத்த பணத்தை கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் கொடுத்தேனே தவிர தன் பணம் எதுவும் இல்லை என்கிறார். ஒருவன் தனக்கு என்ன சொத்திருக்கிறது என்று முட்டாள் கணக்குப் போடுகிறானே தவிர சமுதாயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நினைத்துப் பார்க்க வேண்டும்’’ என்கிறார்.
“நான் சமுதாயத் தொண்டு செய்கிறேன், ஜாதி ஒழிக்க பாடுபடுகிறேன்; இவை எப்படி அதிசயமான, அசாத்தியமான காரியமாகும்? சொந்தத் தொல்லையைக் குறைத்துக் கொண்டால் எல்லாராலும் முடியும். துணிவும் வேண்டும். பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தன் இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலையாகும். மனிதன் பகுத்தறிவுவாதி, வளர்ச்சிக்கு உரியவன். அவன் வாழ்க்கையைச் சுமையாக அமைத்துக் கொள்ளக் கூடாது. மனித சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்.  எனவே, மனித வாழ்வு கல்யாணம், குழந்தைகள் என்று இவை மட்டும் இல்லாமல் மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவது தான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்’’ என்று பலமுறை சொன்னவர் தந்தை பெரியார்.

“மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதி பரவச் செய்வதன் மூலம் மக்கள் பயனுறுகிறார்கள். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான வழியுமாகும். இவ்வகைக்குச் சுயமரியாதைத் தோழர்களும் மற்றவர்களும் துணை நிற்பார்கள் என்பதில் அய்யமில்லை’’ என்று தெரிவித்துள்ளார் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார், தாம் சுயமரியாதை இயக்கத்தொண்டு செய்ய முன்வந்ததோடு மட்டுமல்லாமல் தனது வாழ்க்கைத் துணைவர் நாகம்மையாரை, தமது தங்கை கண்ணம்மாள், தனது அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களையும், மற்றும் உறவினர்களையும் ஈடுபட வைத்ததோடு தன் தங்கையின் கணவரான மாப்பிள்ளை நாயக்கர் என்கிற சா. இராமசாமி நாயக்கர் அவர்களையும் சுயமரியாதை இயக்கப் பணிகளில் ஈடுபடச் செய்தார்.

தனக்கு மக்களால் நன்கொடையாக அளிக்கப்பட்ட பணம், பொருள் மற்றும் தன் சொத்துகள் அனைத்தும் மக்களுக்கே இயக்கத்தின் வழியே பயன்பட வேண்டும் என்று கருதிய பெரியார், அதற்கு ஓர் ஏற்பாடாக பல்வேறு விமர்சனங்களையும் கடந்து தன்னுடன் இயக்கப் பணிகளை செய்து வந்த மணியம்மையார் அவர்களை திருமணம் செய்து கொண்டார். அதனால் பெரியார் மறைவுக்கு பின் அவரின் முழு சொத்துகளும்அவரின் குடும்பத்துக்குச் செல்லாமல் இன்றும் அவரின் கொள்கையைப் பரப்பி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அறக்கட்டளையாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமாக தமிழகத்தில் இயங்கி வருகிறது.

அந்த நிறுவனத்தின் வெளியீடாக தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளையும், பேச்சுகளையும் கால வரிசைப்படி தொகுத்து, வருங்கால சமுதாயம் பயன்படக்கூடிய வகையில் வெளியிடுகின்ற அரும்பணியினை ஆசிரியர் முனைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் மேற்கொண்டு ‘பெரியார் களஞ்சியம்’, ‘குடிஅரசு’ என்ற தலைப்பில் 15 தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இது பெரிதும் வரவேற்றுப் பாராட்டுவதற்குரியதாகும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *