ஏழை என்பதால் தோட்டி வேலை பார்க்கும் பார்ப்பனர் உண்டா?

அக்டோபர் 16-31

 

06.10.1981இல் திருச்சியில் நடந்த கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

திராவிடர் கழகம் என்ன சொல்கிறது? எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியைக் கொடு என்று சொல்கிறது.
ஆனால், “பிராமணர் சங்கம்’’ பிராமணக் குழந்தைகளுக்கு மட்டும் கல்வி வசதியைக் கேட்கிறது. அவர்களுடைய விகிதாச்சாரத்திற்கு கல்வி வசதி கொடுக்கப்படுவதிலே எங்களுக்கு ஒன்றும் கருத்து வேறுபாடு கிடையாது.

“எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம்’’ என்றாரே புரட்சிக்கவிஞர் அதுதான் மனித தர்மம். ஆனால், ஒவ்வொரு பார்ப்பனக் குழந்தைகளுக்கும் மட்டும் கல்வி வசதியைக் கொடுப்பது மனுதர்மம்’’ என்று விளக்கினேன்.

பழம்பெரும் சுயமரியாதை வீரரும் _ திராவிடர் மாணவர் கழகத்தின் முன்னோடியுமான மானமிகு தவமணிராசன் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சி 28.10.1981 அன்று பெரியார் திடலில் மிகவும் எளிமையாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.

சுயமரியாதை இயக்கத்தின் குடும்ப விழாவாக பாசத்தோடு கொள்கை உணர்வோடும் நடைபெற்ற இந்த விழாவில் பழம்பெரும் தோழர்கள் பலரும் கலந்துகொள்ள நானும் அந்த விழாவில் பங்குகொண்டேன்.
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிஞர் கருணானந்தம் அவர்கள் வரவேற்புரை ஆற்றிட, நான் தலைமையேற்று தோழர் தவமணிராசன் அவர்களின் இயக்க உணர்வுகள், எல்லோரிடமும் உரிமையோடு பழகும் உணர்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினேன். தவமணிராசன் அவர்கள் மலரை, நாடாளுமன்ற துணை சபாநாயகர் ஜி.லெட்சுமணன் வெளியிட, முன்னாள் அமைச்சர் மதியழகன் பெற்றுக்கொண்டார். மணிவிழா நாயகருக்கு வாழ்த்து மடலை இராம.அரங்கண்ணல் வழங்கினார்.

நான் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்தேன். விழாவில் அன்பழகன், கோவை செழியன் போன்றோர் கலந்துகொண்டனர். ‘விடுதலை’ நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம் நன்றிகூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது!

30.10.1981இல் “மணியன் பார்ப்பனரின், “கேள்வி _ பதில்கள்’’ என்ற தலைப்பில் நீண்டதோர் தலையங்கம் ஒன்றை நான் எழுதியிருந்தேன்.

பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும்போது ஈ.வெ.ரா என்றுகூட குறிப்பிடாமல் நாய்க்கர் என்ற சாதிப் பெயரைப் சேர்க்காமலேயே, பெரியார் என்றாலே எல்லோருக்கும் தெரியக்கூடியவர்தானே ….அப்படியிருந்தும் அந்த ஜாதி உணர்வு ‘சோ’வுக்குப் போகவில்லையே _ முரசொலியில் (5.10.1981) கலைஞர் கடிதத்தில் வெளியான இந்தக் கருத்துக்கு தங்கள் விளக்கம் தேவை.

இப்படி ஒரு கேள்வியை ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்.

அதற்கு மணியன் பார்ப்பனரின் பதில் என்ன தெரியுமா?

இந்த அறிவுரையை கலைஞர் முதலில் அவருடைய கூட்டாளிகளான ‘எதிரொலி’ வீராசாமிக்கும், ‘விடுதலை’ வீரமணிக்கும் கொடுக்க வேண்டும். மணியன் என்றாலே எல்லோருக்கும் தெரியக்கூடிய என்னை, மணியன் அய்யர் என்றும், ‘சோ’ என்றாலே தெரியக்கூடியவரை, ‘ராமசாமி’ அய்யர் என்றும், டி.ஆர்.ஆரை கொத்தடிமை அய்யங்கார் என்றும் குறிப்பிடுவதை இந்த ஆசாமிகள் நிறுத்தட்டும். (இதைப்பற்றி ‘சோ’விடம் கேட்டேன். அவ்வளவு பெரிய மனிதரை ராமசாமி என்று ஏக வசனத்தில் கூப்பிட்டால் அவமரியாதையாக இருக்காதோ? அதனால் ‘ராமசாமி நாயக்கர்’ என்று குறிப்பிட்டேன் என்றார்.) இதுதான் மணியன் பார்ப்பனரின் பதில். வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்புப் பணியாற்றிய தந்தை பெரியார் அவர்களை, இன்னமும் பார்ப்பனர் ஜாதி உணர்வுக் கண்ணோட்டத்துடன்தானே பார்க்கின்றனர்!
அது சரியா, தவறா என்பது பற்றி திரு.மணியன் பார்ப்பனர் பதிலளிக்காமல் கலைஞர் கேட்ட நியாயமான கேள்விக்கு நேரடியாக விடைகூற வகையற்று, வீராசாமியையும், வீரமணியையும் ஏன் இதில் குறுக்கே போட்டு அவர்களின் உருவத்தின் பின்னால் பதுங்கி ஒளியப் பார்க்க வேண்டும்?

பெரியாருக்கு இனி ஏதும் எவராலும் புது மரியாதை வரவேண்டிய அவசியம் இல்லை. பெரியாரைப் பற்றி தாக்கியோ, பாராட்டியோ எழுதினால்தான் நமக்கு மரியாதை என்று பத்திரிகையாளர் கருதும் அளவுக்கு நாடு திருப்பமான நிலையில் உள்ளது என்று அந்த மணியன் பார்ப்பனர் வார இதழின் ‘விஷமத்தனத்துக்கும், அறிவு சூனிய அபத்த விடைகளுக்கும்’ நமது கண்டனத்தைத் தெரிவித்து எழுதியிருந்தேன்.

ஆத்தூரில் அய்யா சிலை திறப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தனிப்பெரும் காவியமாக ஆத்தூரில் அறிவுலக ஆதவன் அய்யா அவர்களது சிலைதிறப்பு விழாவும், எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும், திராவிடர் இளைஞர் எழுச்சி மாநாடும் 01.11.1981 அன்று, ஆத்தூரில் பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றன. மிகப் பிரம்மாண்டமான பீடத்தில் இன எழுச்சி ஞாயிறு அய்யா அவர்களது திருஉருவச் சிலையைத் திறந்து வைத்து, அவரது மாணாக்கர் டாக்டர் கலைஞர் அவர்கள் உரை ஆற்றினார்கள்.

தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப் பிறகு, அவர்களது குரல் முழக்கம் இனி கேட்காது என்று மனப்பால் குடித்த நயவஞ்சக நரிகளின் ஈரக்குலைகள் நடுநடுங்க நானும், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் உரையாற்றினோம். முன்னதாக, அலங்கரிக் கப்பட்ட டிராக்டரில் பின்னணியில் அய்யா அவர்களது வண்ணப் படம் கம்பீரமாகக் காட்சி அளிக்க, கழகத் தோழர்கள் புடைசூழ ஊர்வலம் சீறும் சிறப்புமாக நடைபெற்றது.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ரூபாய் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். திராவிடர் கழகத்தினுடைய உணர்வு இல்லாமல் திராவிடர் முன்னேற்றக் கழகம் இல்லை; ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உணர்வு இல்லாமல் திராவிடர் கழகம் இல்லை என்று நான் அவர்களுக்குச் சொல்ல மாட்டேன்’’ என்று கலைஞர், ஆத்தூரில் தந்தை பெரியார் அவர்கள் சிலையைத் திறந்துவைத்து முழக்கமிட்டார்கள்.

கழக மகளிரணியினர் எனது எடைக்கு எடை நாணயம் வழங்கிட பல்வேறு மாவட்டங்களி லிருந்து கழகத் தோழியர்கள் குடும்பத்துடன் வருகை தந்தனர்.

மகளிரணி சார்பில் எனக்கு (இயக்கத்துக்காக) எடைக்கு எடை ஒரு ரூபாய் நாணயம் அளிக்கும் எழுச்சிமிக்க, ஆர்வமிக்க நிகழ்ச்சியுடன் தராசின் ஒரு பக்கத்தில் நானும், மறு பக்கத்தில் மகளிரணியினர் ஒவ்வொருவராக வரிசையாக வருகைத் தந்து, ரூபாய் நாணயங்களைப் போட்டு, என்னுடைய எடையும், ரூபாய் நாணயத்தின் எடையும் இணையாக நின்றபோது, வாழ்த்து முழக்கங்களில் தார்மார்களின் குரலே மிஞ்சி எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து மாநாட்டில் நெகிழ வைக்கும் உரையை நிகழ்த்தினேன்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர திராவிடர் கழக வரலாற்றில் தனி முத்திரையை எப்பொழுதுமே பொறித்துக்கொண்ட வெற்றி நகரமாகும். 1953ஆம் ஆண்டில் ஆத்தூரில் கழக மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தற்பாதுகாப்புக்காக சட்டத்திற்கு உட்பட்டு கத்தி வைத்துக் கொள்ளும் தீர்மானம் தந்தை பெரியாரால் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டதும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் வாடாமலராகும்.

ஆத்தூருக்கு வரும் போதெல்லாம் புதிய உற்சாகம் பிறக்கிறது. ஆத்தூர் சரித்திரம் படைத்த ஊர்.எதிரிகள் பாராட்டும்போதெல்லாம் ஆத்தூர் தீர்மானம் நினைவுக்கு வரும். அந்தத் தீர்மானத்தைத் தந்த சரித்திரச் சிறப்பான பாசறைதான் இந்த ஆத்தூராகும்.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெண்கள் விடுதலை மாநாடு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாடு, மறுநாள் காலை இளைஞர் எழுச்சி மாநாடு ஆகிய முப்பெரும் மாநாடுகளும், கழக வளர்ச்சி நிதிக்கு சுமார் 7000 ரூபாயும், பிரம்மாண்டமான ஊர்வலமும், இனப் பகைவர்கள் குலைநடுங்கும் வண்ணம் மிகுந்த எழிலுடன், ஏற்றத்துடன் நடந்தது. ஆத்தூர் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு மக்கள் கடல் சிலை திறப்பு விழாவில் பொங்கியது என்றே சொல்லலாம்.

இந்த மாநாடுகள், சிலை திறப்பு விழாக்கள் ஆகியவைகளின் வெற்றிக்கு உழைத்த கழகச் செம்மல்களான வி.ஆறுமுகம், ஜி.முருகேசன், அங்கம்மாள், பாலசுப்பிரமணியம், செல்லமுத்து, வீரமுத்து, ரெங்கசாமி, ஜி.ராமசாமி, ஓவியர் அங்கன், வானவில், வி.அண்ணாதுரை, ஜா.பொ.ராஜி, விஜயன், கொமாரு, முத்துசாமி, பெரியண்ணன், கலியபெருமாள், அம்சா அம்மையார், ஜெயா_சுந்தரம் அம்மையார், ஞானாம்மாள், பழனியம்மாள், வசந்தா_பாப்பாத்தி அம்மாள், கமலம்மாள் (மகளிர் அணியினர் இன்னும் பல பெயர்கள் நினைவில் இல்லை) போன்றோரின் ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் மாநாடு (தமிழினக் காப்பு மாநாடு), 8.11.1981 தேதிகளில் நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சி சென்னை, பெரியார் திடலில் எழுச்சியோடு துவங்கியது. மாநாட்டுத் துவக்கத்திற்கு முன்பு _ தமிழியக்கத் தோழர்கள், இயக்கத்தின் இசைப் பாக்களை எழுச்சியுடன் இசைத்தனர். தென்மொழி ப.துரையரசன் அவர்கள் மாநாட்டுத் தலைவரை முன்மொழிய ந.முத்துக்குமரன், புலவர் நெடுமிடல், பாவலர் குமர நடவரசு ஈவட்டனார், எழில்வாணன் ஆகியோர் கலந்துகொண்ட விழாவில் நான் தொடக்க உரையாற்றினேன். முன்னதாகவே, நாவலர் அமிர்தலிங்கம் தம்பதிகள்,  மங்கையர்க்கரசி என்னை இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். பின்பு, நான் உரையாற்றும்போது, “தன்மானத்தைவிட இனமானம் பெரிது’’ என்ற லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்கள் தங்களுக்குள் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் தமிழினத்தின் மானமீட்புக்கு ஒன்று சேரவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன்.

அதை ஏற்று தடை ஏதுமின்றி பங்கேற்போம் என்று அவர்கள் கலந்துகொண்டார்கள். அத்தகைய உணர்வு நமக்கு வரவேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். தொடர்ந்து, மாநாட்டுத் தலைமை ஏற்று அமிர்தலிங்கம் உரை நிகழ்த்தினார். அப்போது, “இந்தத் தொண்டைச் செய்ய எனக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ இதை வேறு யாரும் செய்ய முன்வராததால், நானே மேற்போட்டுக் கொண்டு இந்தத் தொண்டைச் செய்கிறேன்’’ என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை சுட்டிக்காட்டி அவரது உரையைத் தொடங்கி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெ.து.சு.வின் 70ஆம் பிறந்த நாள் விழா!

சமுதாயத் துறையில் உண்மையான சமதர்மவாதியாக விளங்கிய கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் 70ஆவது பிறந்த நாள் விழா 08.11.1981 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் பேரவை சார்பில் நடைபெற்றது. விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். “நமது கல்வி வள்ளல் அய்யா நெ.து.சு. அவர்கள், தந்தை பெரியார் அவர்களது தலைமையில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்.

அவரது மணவிழாவை அய்யா அவர்களே முன்னின்று, பெரியார் திடலில் கோலாகலமாக நடத்தி வைத்தார்கள். அந்த மணவிழா நிகழ்ச்சி இன்றைக்கு என் கண்முன் நிழலாடிக் கொண்டு இருக்கிறது. இந்த விழா அவர்களது தொண்டால் கல்விக்கண் பெற்ற சமுதாயம் நன்றிகாட்டும் விழா மட்டுமல்ல -_ அவர்களிடம் இன்னும் நீங்கள் எங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று உறுதி வாங்கிக் கொள்ளும் விழாவாகும்.

தந்தை பெரியாரிடம் பாராட்டு பெறுவது என்பது அரிதினும் அரிது, எதையும் தனக்குத் தேவை என்று எதிர்பார்க்காத தலைவர் அல்லவா? அதனால்தான் யாரையும் தேவையில்லாமல் அய்யா பாராட்டுவது கிடையாது. ஆனால் இன்றைய விழா நாயகன் அவர்கள், அய்யா அவர்களின் பாராட்டினைப் பெற்ற பெருமைக்குரியவர்கள் ஆவார்கள். அய்யா சொல்கிறார் கேளுங்கள்,

“அவரது உத்தியோக சேவையில் எந்தவிதமான நேர்மைக் குறைவும், நாணயக் குறைவும் இல்லாமல் மிகப் மிகப் பரிசுத்தமாக இருந்து வந்திருக்கிறார் என்று உறுதியாகச் சொல்லக் கூடும்.

அவருக்கு இயற்கையான எதிரிகள் யார்? அவர்களது வசதி, வலிவு, எவ்வளவு என்பன யாவரும் அறிந்தவையாகும். அப்படிப்பட்ட நிலையில், உத்தியோகத் துறையிலாவது பொதுத் துறையிலாவது சொந்தத் துறையிலாவது, ஒரு சிறு குறையோ, குற்றமோ சொல்லக்கூடா தன்மையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அறிவுத் துறையில் பெரும் பகுத்தறிவுவாதி என்றும், சமுதாயத்துறையில் உண்மையாகவே சமதர்மவாதி என்றும், வாழ்பவர்’’ என்று தந்தை பெரியார் பாராட்டி உள்ளார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் இந்தப் பாராட்டுதல்களைவிட பெருமைக்குரிய பட்டம் புகழ், நெ.து.சுந்தரவடிவேலு அவர்களுக்கு வேறு வந்துவிட முடியாது.

எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் எக்ஸ்ரே நிபுணராக இருந்து உண்மையை அப்பட்ட மாகச் சொல்லக்கூடிய தந்தை பெரியார் அவர்கள் நமது விழா நாயகர் அவர்களைப் பற்றி இன்னொன்றையும் குறிப்பிடுவார்கள்.

“ஜாதியில் சைவராயிருந்தாலும் எந்தத் துறையிலும், எந்த சந்தர்ப்பதிலும் ஜாதி உணர்ச்சியைக் காட்டியிருக்கிறார் என்று சொல்லமுடியாத அளவுக்கு நடந்து வந்திருக்கிறார் என்று நான் சொல்லக்கூடும். எனவே, அவரது தொண்டு நமக்கு என்றும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று அய்யா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்ற தகவல்களை நெ.து.சு. அவர்களைப் பற்றி நான் எடுத்துரைத்தேன்.

மின் வாரியத்தில் ஆரிய மயம்

3.12.1981 அன்று சென்னை அகரம் பேருந்து நிலையத்தில் ஆரியமயமாகிவரும் மின்வாரியம் முன் ஆர்ப்பாட்டம், விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் செம்பியம் சே.ஏழுமலை அவர்கள் தலைமையில் கூட்டத்திற்கு கொட்டும் மழையிலும் ஏராளமான அளவில் பொதுமக்கள் கூடியிருந்தார்கள். கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். கருப்புச் சட்டைக் கூட்டம் ரசிகர்மன்றம் அல்ல; தந்தை பெரியார் உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ள இலட்சியப் படை _ தற்கொலைப் பட்டாளம்! என்று குறிப்பிட்டு மின்வாரியத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஏன் என்பது குறித்து விளக்கியுரையாற்றினேன்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தலைதூக்கி நிற்கும் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான தி.க. போராட்டத்திற்கு (04.12.1989) எம்.ஜி.ஆர் ஆட்சி தடைவிதித்தது. தடையை மீறி 64 தோழர்கள் கைதானார்கள். அதில் 8 பேர் பெண்கள்.

சென்னைத் துறைமுகத்தில் அமைக்க விருக்கும் புதிய மீன்பிடித் துறைமுகத்திற்கு (Fish-ing harbour) சமதர்ம வீரர் மா.சிங்காரவேலர் அவர்களது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற மீனவ சமுதாய மக்களது கோரிக்கை மிகவும் நியாயமானது என்றும், 7.12.1981 அன்று அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக கப்பல்துறை அமைச்சர் திரு.வீரேந்திரபாட்டீல் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு கடிதம் _ வேண்டுகோள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

06.12.1981 இரவு தூத்துக்குடி பெரிய மசூதி அருகே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு பயங்கர ஆயுதங்களோடு சட்ட விரோதமாகத் திரண்டனர். முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராகக் கோஷம் போட்டுக்கொண்டு முஸ்லீம்களையும் மற்றவர்களையும் ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தனர்.

ஜெய்வானி தெருவில் புகுந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்தினர். உங்களைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளதையும், உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இதனை நான் கண்டித்து 09.12.1981 அன்று விடுதலை முதல் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டு இருந்தேன்.

“இந்து ராஷ்டிரம்’ என்ற இந்து மதவெறிக் கும்பலை, பார்ப்பனக் கலாச்சாரத்தின் பாதுகாவல் படையை, கட்சி வேறுபாடுடின்றி தமிழ் மக்கள் சந்தித்தே ஆகவேண்டும். நெல்லையில் வரும் பிப்ரவரியில் ஒரு ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டு வருகின்றோம். அரசு இந்த மாதிரியான காலித்தனங்களை வேடிக்கை பார்க்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கண்டித்து எழுதினேன்.

12, 13.12.1981 நாள்களில் தர்மபுரியில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாடு, திராவிடர் இளைஞர் எழுச்சி மாநாடு, பகுத்தறிவாளர் மாநாடு, பார்ப்பன ஆதிக்கம் எதிர்ப்பு மாநாடு மற்றும் கருஞ்சட்டைப் பேரணியும் மிகவும் சிறப்பாக பயன்தரத்தக்க கொள்கைப் பிரச்சார வடிகால்களாக நடைபெற்றன.

ஏராளமான இளைஞர்களும், பொது மக்களும் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்தது மெய்சிலிர்க்க வைத்த காட்சியாகும். நான் மாநாட்டில் உரையாற்றும்போது, தந்தை பெரியார் அவர்கள், பார்ப்பன ஆதிக்கத்தி னுடைய உயிர்நிலை எங்கே இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்த காரணத்தால் தான் அதிலே அவர்கள் மிகப்பெரிய அளவுக்கு வெற்றிபெற முடிந்தது. அய்யா அவர்கள் அந்த வெற்றியை மிக அழகாகப் பெற்றிருந்தார்கள்.

பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்று சொன்னால் மேடையில் பேசிவிட்டுப் போகக் கூடியவர்கள் அல்ல! அதிலே எங்கெங்கே ஆதிக்கம் இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களைச் சொல்லுகிறோம் எண்ணிப் பார்க்க வேண்டும்.‘தோட்டி’ என்று சொல்லுகிறீர்களே, துப்புரவுத் தொழிலாளர்கள் ‘தோட்டிச்சி’ என்ற என்னுடைய சகோதரியைச் சொல்லுகிறீர்களே, அந்த இழிவான பணியைப் செய்யக் கூடியவர்கள் யார்? முழுக்க முழுக்க என்னுடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லவா! திராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லவா?

“ஏழைகள், வசதிக்குறைவுள்ளவர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பனர்கள் எங்காவது இந்தப் பணிக்கு வந்திருக்கிறார்களா, மலம் எடுக்கும் பார்ப்பனத்தியைக் கண்டதுண்டா?’’ என்று நாங்கள் கேட்கிறோம் என்று நினைத்தால், உனக்கு நாணயம் இருந்தால் பதில் சொல். இழிவான பணியெல்லாம் எங்களுக்கு மாத்திரம்தானா? இப்படிப் பல்வேறு கேள்விக் கணைகள் மாநாட்டில் தொகுத்து அதற்கான விடையை எடுத்துரைத்தேன்.

இரண்டு நாட்களிலும் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட பேராசிரியர்கள், பெரும் சிந்தனையாளர்கள் கழகப் பேச்சாளர்கள், மகளிர், பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் ஆகிய அனைவரது உரைகளும் இனமானச் சுடர் கொளுத்திய எழுச்சியுரைகளாக கருத்து வாக்கியங்களாகத் திகழ்ந்தன.

இம்மாநாட்டின்வெற்றிக்கு பெரும் பாடுபட்ட கழகத் தோழர்களுக்கு நமது பாராட்டுதல்கள், குறிப்பாக நாகரசம்பட்டி திரு. என்.எஸ்.சம்பந்தம், பென்னாகரம் பி.கே.இராம மூர்த்தி, மூக்கனூர்ப்பட்டி வே.இராமசாமி, ஊத்தங்கரை பழனியப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் கல்லாவி சிதம்பரம், தர்மபுரி துரைசாமி, கிருஷ்ணகிரி துக்காராம், தர்மபுரி உசேனி பீரான், கடமடை தீர்த்தகிரி ஆகியோரது உழைப்பு குறிப்பிடத்தக்கனவாகும்.

தர்மபுரி மாநாடுகளில் மற்றொரு புதுமை என்னவென்றால் திருமதி பார்வதி கணேசன் தலைமையில் முற்றிலும் மகளிரே முன்னின்று நடத்திய வழிநடைப் பிரச்சாரப் படை சோலையார்பேட்டையில் வழிநெடுக பம்பரம்போல் சுழன்று சுழன்று பணியாற்றியது உள்ளத்தைத் தொட்ட நிகழ்வாக இன்றும் நினைவில் நிற்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

(நினைவுகள் நீளும்…)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *