அனிதா நினைவேந்தல் நாள் ‘நீட்’டை நீக்க உறுதி ஏற்கும் நாள்!

அக்டோபர் 16-31

 

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் (28.09.2017) அன்று மாலை 6.30 மணிக்கு, ‘நீட்’ என்னும் சமூக அநீதியால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட ‘தமிழ்த் தளிர்’ அனிதாவிற்கு நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வெள்ளம் அரங்கம் முழுவதும் உணர்வுபொங்க நிரம்பி இருந்தது.

வரவேற்புரை:

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ‘நீட்’டை எதிர்த்து தமிழகத்திலும் உலகின் பல நாடுகளிலும் குறிப்பாக அய்.நா.மன்றத்தின் முன்னும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. மாநில அரசு அனிதா குடும்பத்திற்கு 7 இலட்சம் ரூபாய் அளிக்க முன்வந்தும், அதனை வாங்க மறுத்து ‘நீட்’ ஒழிக்கப்படும்வரை அரசின் உதவிகள் தேவையில்லை’ என்ற அனிதா குடும்பத்தினர் கூறியது சாதாரணமானது அல்ல; தன்மான உணர்வின், சமூகநீதிக் கோட்பாட்டின் வெளிப்பாடு’’ என்று கூறினார்.

மு.வீரபாண்டியன்

அடுத்து பேசிய இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள், “அனிதாவிற்கு நடந்த இந்தக் கொடுமை இனி வேறு எவருக்கும் நிகழக்கூடாது. அதற்கு இந்த மேடையில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்தியிலே அதிகாரப் போதையில் இருக்கிற பிஜேபி அரசை மக்கள் ஆதரவோடு தூக்கி எறிய வேண்டும்’’  “மார்க்சை சென்றடைய பெரியார்_அம்பேத்கர் பாதை முக்கியமானது_ அவசியமானது’’ என்று பேசியபொழுது அரங்கமே ஆர்ப்பரித்தது.

தனியரசு:

கொங்கு இளைஞர் பேரவை செயலாளர் திரு.தனியரசு எம்.எல்.ஏ., அவர்கள், “தந்தை பெரியார், ஆசிரியர் ஆகியோர் விதைத்த விதைதான் இந்தத் தனியரசு வளர்ந்து சட்டசபைக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கியது’’ என்று நன்றி உணர்வுடன் கூறினார். “ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என பேசும் பிஜேபியை தொடரவிட்டால் நாட்டிற்கு கேடாய் முடியும்’’ என்றார்.

விசுவநாதன்

காங்கிரஸ் கட்சியின் மேனாள் மக்களவை உறுப்பினர் திரு.விசுவநாதன் அவர்கள், “ஒரு குக்கிராமத்தில் பிறந்த அனிதா உச்சநீதிமன்றம் வரை சென்று நீதிக்காகப் போராடியது உலகத் தமிழர்கள் அனைவரிடமும் பேரெழுச்சியையும் கம்பீரத்தையும் அளித்தது.’’ தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், காமராசரும் விதைத்த உணர்வு வீண் போகவில்லை என்றார்.

தொல்.திருமாவளவன்

“அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பதற்காக அவர் தேர்வுக்கு பயந்தவர் என்பது பொருளல்ல. +2 பொதுத் தேர்வில் 1200க்கு 1176 என்ற உச்ச மதிப்பெண்களை எடுத்தவர்.

+2 மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடந்திருந்தால் சென்னை எம்.எம்.சி.யில் இப்பொழுது அனிதா மருத்துவம் படித்துக் கொண்டிருப்பார்.

‘நீட்’ தேர்வு உறுதியாக உண்டு என்று தெரிந்திருந்தால்கூட அனிதா அதற்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருப்பார். ஆனால், மத்திய, மாநில அரசுகள் நம்பவைத்து கழுத்தை அறுத்தனர்.

“உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ‘நீட்’ கொடுமையிலிருந்து வெற்றி பெற வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். திமுக செயல்தலைவர் முயற்சித்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்’’ என்று முழங்கினார்.

தளபதி மு.க.ஸ்டாலின்

அனிதாவின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தளபதி அவர்கள் பேசினார்.

“அனிதா விதையாக விழுந்திருக்கிறார். அந்த விதை அடுத்த தலைமுறைக்கு கனியாகக் கிடைக்கும்.’’
“அனிதாவின் படத்தை நான் திறக்கவில்லை. கிராமப்புற மாணவர்களும் டாக்டர்களாக வேண்டும் என்ற விளக்கை ஏற்றி வைத்திருக்கிறேன். இது அணையா விளக்கு.

மாணவர்களை நம்பவைத்துக் கழுத்தறுத்த முதலமைச்சர், நல்வாழ்வுத்துறை அமைச்சர், அதன் செயலர் ஆகியோர் தங்கள் தோல்விக்குப்  பதவி விலகி இருக்க வேண்டும்.’

“திமுக சமூகநீதிக்காக எல்லா போராட்டங்களிலும் உறுதியாக களமாடும்’’ எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆசிரியர் அவர்கள்,

“இந்தக் கூட்டம் வெறும் இரங்கல் கூட்டமல்ல. அனிதாவிற்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கும் ஏற்படாமல் தடுக்க உறுதியேற்கும் கூட்டம்.

அனிதாவைக் கொன்றது வெறும் ‘நீட்’ மட்டும் அல்ல _ ‘மனுதர்மமே’, வெறியே முதன்மைக் காரணம்.
தாழ்ந்த ஜாதிக்காரர்கள் டாக்டராவதா? அதுகள் நமக்கு வைத்தியம் பார்ப்பதா? என்ற பார்ப்பன ஆதிக்கச் சிந்தனைதான் இதன் பின்னணி!

31 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்கூட இல்லை? இது சமூக நீதியா? தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாகக் கூடாதா?

தந்தை பெரியாரின் விருப்பப்படி தமிழகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்டவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கிக் காட்டியவர் நமது கலைஞர்.

‘நீட்’ செயல்பாட்டுக்கு வந்ததற்கு “பார்ப்பன ஆதிக்க வெறியே காரணம்’’

“இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன?

1.    கல்வியை மீண்டும் மாநிலத்தின் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.

2.    சட்டமன்றம், நீதிமன்றம் இவற்றையும் தாண்டி மக்கள் மன்றத்தில் _ வாதாட வேண்டும் _ போராட வேண்டும்.’’

“நீதிமன்றமும் சட்டமன்றமும் சாதிக்காததை யெல்லாம் வீதிமன்றம் சாதித்து இருக்கிறது!’’ என்று முத்தாய்ப்பான தன் உரையை ஆசிரியர் அவர்கள் நிறைவு செய்தார்.

நன்றியுரை

அனிதாவின் சகோதரர் க.ஆ.மணி ரத்தனத்தின் நன்றியுரை உருக்கமாக இருந்தது.

¨    அனிதாவின் மரணம் எங்களின் ஜாதியைத் தூக்கியெறிந்து எங்களை மனிதர்களாகப் பார்க்கச் செய்துள்ளது.

¨    எங்கள் வீட்டில் பிறந்த அனிதாவை தமிழ்நாடே தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்ப்பது ஒரு வகையில் பெருமையாக உள்ளது.

¨    தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஊட்டிய உணர்வால் நாங்கள் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

¨    இந்நிகழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆசிரியர் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என கனத்த இதயத்தோடு பேசி முடித்தார்.

¨    இந்நிகழ்ச்சியில் தோழர் பிரின்சு  என்னாரெசு பெரியார் அவர்கள் மிக நேர்த்தியாய் இணைப்புரை வழங்கினார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *